ஆண்டவர் சுகவீனத்தை பயன்படுத்துகிறாரா? – ஜே.சி.ரைல். Does God Use Sickness? – J.C.Ryle.
நான் சுகவீனத்தை குறித்து சிந்திக்கும்படியாய் உங்களை அழைக்கிறேன். இது நம்முடைய ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.
1.உலகலாவியது: சுகவீனம் உலகலாவியது, எங்கும் உள்ளது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ சுகவீனப்பட்டு மரிக்கின்றனர்.
ஏன் சுகவீனம் உலகலாவியது? இதற்கு வேதம் கூறும் பதிலே போதுமானதாயிருக்கிறது. ஒன்றே ஒன்று, இந்த உலகத்திற்கு வந்து மனிதனுடைய அத்தனை ஆதி உரிமைகளை பறித்து போட்டு விட்டது. அந்த ஒன்று ‘பாவம்’. “பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தித்ததுபோலவும்..” (ரோமர் 5:12) உலகத்திலே காணப்படுகிற சுகவீனம், நோய், வலி, மற்றும் உபத்திரவம் அனைத்திற்கும் காரணம் பாவமாயிருக்கிறது. (ஆதி 3:17-19)
2.பொதுவான பயன்கள்: சுகவீனம் நன்மை பயக்குமா? என்ற கேள்வியை இவ்வுலகத்தில் காணப்படும் நோய்கள், வலிகள் போன்றவற்றை தேவனுடைய அன்போடு ஒப்பிட்டு பார்க்க இயலாதவர்களை பார்த்து கேட்கிறேன். நல்லா யோசித்து பாருங்கள், மக்கள், தங்கள் வியாபாரத்தில், எதிர்காலத்திலே லாபத்தை பெறும் நோக்கத்துக்காக, தற்காலத்திலே எத்தனை கஷ்டங்கள், இழப்புகளை சந்திக்கின்றனர். குழந்தை வளர்க்கும் விஷயத்தில், எதிர்கால சந்தோஷத்திற்காக, தற்காலத்தில் எத்தனை துயரங்கள் அனுபவிக்கின்றனர். கடுமையான உடற்பயிற்சி செய்கிற விஷயத்தில், எதிர்கால ஆரோக்கியத்திற்காக, தற்காலத்தில் எத்தனை வலிகளை ஏற்கின்றனர். இப்பொழுது நீங்கள், இவ்விதமான நோக்கங்களை தேவனுடைய உன்னதமான திட்டத்திற்கு உட்புகுத்தி பாருங்கள். புரிந்துக்கொள்ளுங்கள், தேவன் அனுமதிக்கும் வலி, சுகவீனம், நோய் இவை அனைத்தும், மனுஷனை வெறுப்பேத்த அல்ல, மாறாக, அவனுடைய மனசு, இருதயம், மனசாட்சி அனைத்தும் நித்தியத்திற்காக பலனடையவே. சுகவீனத்தினால், தேவன், மனுஷனுடைய ஆத்துமாவில் காணப்படும் பொல்லாங்கையும், பாவத்தையும் சோதித்தறிகிறவராய் இருக்கிறார்.
மனிதனுடைய சுகவீனத்தை, நன்மைக்கு ஏதுவாக, தேவன் எந்த எந்த வழியில் பயன்படுத்துகிறார்.
1. சுகவீனம் மனுஷனுடைய மரணத்தை நினைவுப்படுத்துகிறது. அனேகர் தாங்கள், மரணத்தை சந்திக்கமாட்டோம் என்ற எண்ணத்தின்படி வாழ்கின்றனர். சுகவீனம், மனிதன் மரிப்பதற்கும், வாழ்வதற்கும் உரியவன் என்பதை நினைவுபடுத்துகிறது. (எபி 9:27).
2. சுகவீனம், மனுஷன் கடவுளை குறித்தும், தன் ஆத்துமாவை குறித்தும், வரப்போகிற உலகத்தை குறித்தும் அதிகமாக சிந்திக்க உதவி செய்கிறது. ஆம், ஒரு கடுமையான வியாதி மனுஷனை தாக்கும் போது, இவைகள் அனைத்தும் அவன் கண்ணுக்கு முன்னாடி நிறுத்துகிறது.(மாற்கு 8:36)
3. சுகவீனம், மனிதனுடைய இருதயத்தை மிருதுவாக்குகிறது மாத்திரமல்ல, இதன் வழியாக சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. இயற்கையாக, மனிதனுடைய இருதயம், கல்லைப்போன்றது. இந்த உலகத்தை விட்டால், வேறு எங்கும் சந்தோஷத்தை பார்க்க முடியாது. நீண்ட கால சுகவீனமானது, இந்த உலகத்தில் எது நல்லதாய் தென்படுகிறதோ, அது ஒன்றுமில்லை, வெறுமையானது என்றும், அவைகளை இறுக பிடிக்காமல் இருக்க கற்றுக் கொடுக்கிறது. (1 யோவான் 2:15-17)
4. சுகவீனம் நம்மை மட்டாய் தாழ்த்துகிறது. நாம் பொதுவாக, இயற்கையாக, பெருமையும், உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். வியாதி படுக்கையானது, அப்படியான எண்ணத்தை அடித்து நொறுக்குகிறது. நாம், மரிக்க வேண்டியவர்கள், ஒரு நாள், தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நிற்க வேண்டியவர்கள் என்ற ஆழமான சத்தியத்தை கற்றுக்கொடுக்கிறது. ஆம், இப்படியான பாடத்தை எது கற்றுக்கொடுத்தாலும் அது நல்லதே. (யாக்கோபு 4:10)
5. கடைசியாக, சுகவீனமானது, ஒரு மனிதனுடைய விசுவாசம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று சோதித்தறிகிறது. சில நேரங்களில், வியாதியானது, மனிதனுடைய புதிய இருதயம் எவ்வளவு குறைவுள்ளதாய் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. (யோவான் 3:3). உண்மையாகவே, எந்த ஒரு காரியமும், மனிதனுடைய உண்மையான விசுவாசத்தை கண்டறியும் என்றால், அது நல்லதே.(2 கொரி 13:5).
சுகவீனமானது, மனிதர்களை இந்த பொல்லாத உலகத்தில், கடவுளை குறித்தும், அவர்களுடைய ஆத்துமாவை குறித்தும் சிந்திக்க செய்கிறது. ஆகவே, நன்மைகளைத்தான், மனிதனுக்கு தருகிறது. சுகவீனத்தை குறித்து, நாம் எந்த விதத்திலும், முறுமுறுக்க உரிமை இல்லை. மாறாக, அதை குறித்து கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். சொல்லப்போனால், அது கடவுளுடைய அதிகாரத்திற்கும், வல்லமைக்கும் சாட்சியாய் இருக்கிறது. உலகம் இருக்கிற வரை, பாவமும் இருக்கிறது போல, வியாதியும் இருக்கிறது.
3.சுகவீனம் விசேஷித்த கடமைகளை செய்ய அழைப்பு விடுக்கிறது.
நாம் ஒன்று கேட்க வேண்டும். வியாதியும், மரணமும் கொண்ட இவ்வுலகத்தில், நாம் என்ன செய்ய வேண்டும்? சுகவீனமானது, ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகும் வேலையாய் இருக்கிறது. இது மரணத்தை குறித்து நினைவு படுத்துகிறது. மரணம் என்ற வாசல் வழியாக, நாம் எல்லாரும் நியாய தீர்ப்புக்கு செல்ல வேண்டும். நியாயத்தீர்ப்பு என்ற காலமானது, கடைசியாக கடவுளை முக முகமாய் காணும்படியான காலமாய் இருக்கிறது. ஒவ்வொருத்தரும், கற்றுக்கொள்ளும்படியான முதல் பாடம் என்னவென்றால், வியாதியும், மரணமும் உள்ள இந்த உலகத்தில், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமாக்குகிறது.
எப்பொழுது தேவனை சந்திக்க ஆயத்தமாய் இருக்கிறாய்? உன்னுடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு, அக்கிரமங்கள் எல்லாம் மூடப்பட்டபின்புதானே. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கிறதாய் இருக்கிறது.(1.யோவான் 5:7). கிறிஸ்துவின் நீதி மட்டுமே, உன்னை தேவனுடைய பார்வையில் அங்கீகரிக்க கூடியவனாய் உன்னை மாற்றுகிறது. விசுவாசம், எளிய விசுவாசம், மட்டுமே உன்னை கிறிஸ்துவிலும், அவருடைய நன்மைகளை பெற்று அனுபவிக்கிறவனாய் மாற்றுகிறது. (ரோமர் 5:8; எபே 2:8-9).
சுகவீனம், நம்முடைய வாழ்க்கையில் அதை பொறுமையோடு ஏற்றுக்கொண்டு கடந்து போவதற்கு நம்மை எதிர்பார்க்கிறது. சந்தேகமேயில்லை, சுகவீனம், நம்முடைய இரத்தத்திற்கும், மாம்சத்திற்கும் கடினமான ஒன்றாய் இருக்கிறது. நாம் பொறுமையோடு சுகவீனத்தை கடந்து போவதற்கு, சுகத்தோடு இருக்கும் காலத்தில், அதிகமான கிருபைகளை சேர்த்து வைக்க வேண்டும். (ரோமர் 5:3).
சுகவீனம், வழக்கமாக, சக நண்பர்களுடைய உதவியை நாடுகிறது. எப்பொழுதெல்லாம், சுகவீனம் என்று கேள்விப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் பணியாற்ற அழைக்கப்படுகிறோம். அது சரியான நேரத்திற்கு செய்யும் உதவியாய் இருக்கலாம், அது அன்பான சந்திப்பாக இருக்கலாம், அது நட்புடன் கூடிய விசாரணையாக இருக்கலாம், அது கனிவாக வெளிப்படுத்தும் வார்த்தையாக இருக்கலாம். இவ்விதமாக செய்யும்போது மிகப்பெரிய நன்மையை விளைவிக்கிறதாய் இருக்கிறது. சுகவீனத்தில் உதவி தேவைப்படுமானால், உதவி செய்யுங்கள். உங்களுடைய கரிசனையையும், அன்பையும் அப்படிப்பட்டவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் சுமந்து செல்லும் சுமைகளை இலகுவாக்க முயற்சி செய்யுங்கள். இவ்விதமான காரியங்கள் நாம் செய்யும் போது, கடைசியாக அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஏதுவாக இருக்கும். (அப் 10:38).
4.சுகவீனத்தின் வேளையில் நீ என்ன செய்வாய்?
சுகவீனமும், மரணத்தை சந்திக்கும் ஒரு நாள் உனக்கும், மற்றவர்களுக்கும் உண்டு. அந்த வேளை உனக்கு வரும் போது, கடவுளுக்கும், உனக்கும் உள்ள உறவு சரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து, திருப்திகரமான பதிலை கொடுக்கும்மட்டும் இளைப்பாராதே. மரணப்படுக்கையில் கிடக்கும் போது மனந்திரும்பிக்கொள்ளலாம் என்று துணிகரமாக வாழ்நாளை வீணாக்காதே. கள்ளன் ஒருவன் மரிக்கும் தருவாயில் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டது உண்மைதான். இதுவே, அனைவருக்கும் பொருந்தும் என்று எண்ணி துணிகரம் கொள்ளாதே.
நீ ஒருவேளை தேவனை சந்திக்க ஆயத்தமாகவில்லையென்றால், எந்தவித தாமதமின்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு ஒப்புரவாகு. உலகத்தில் உள்ள பொல்லாத செய்கைகளில், ஒரு மனிதன் ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாகாத ஒரு இருதயத்தை காட்டிலும் துணிகரமான பாவம் வேறு எதுவும் இருக்க முடியாது. கிறிஸ்துவை நோக்கி ஓடு, இரட்சிக்கப்படு. மனந்திரும்பி, மாற்றப்படு. (யோவான் 3:16).
அடுத்ததாக, ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவனை, சுகவீனத்தின் வேளையில் ஆண்டவரை மகிமைபடுத்துமாறு புத்தி சொல்லுகிறேன். நீ, சுறுசுறுப்பான வேளை நேரத்திலும் உள்ளது போல, சுகவீனத்தை சகித்து செல்லும் வேளையிலும் ஆண்டவரை நீ கனப்படுத்தலாம். ஞாபகத்தில் வைத்துக்கொள், நீ சந்திக்கும் உபத்திரவம் மிக கடுமையாக இருக்கும்பொழுது, அது தேவனுடைய கோபத்தினாலே அல்ல, அவருடைய அன்பினாலே அனுப்பபட்டது ஆகும். (1 கொரி 10:31).
பலவீனமான அவருடைய பிள்ளைகளிடத்தில், இயேசுவானவர் காட்டின இரக்கங்களை நினைவுபடுத்து. பாடுகளும், வியாதியும் விசுவாசிகளை, அவர்களுடைய ஆண்டவராகிய இயேசுவை போல மாற்றுகிறது. (மாற்கு 6:34).
கடைசியாக, நாம், கிறிஸ்துவை இறுக பற்றிக்கொள்ளுவோம். முழு இருதயத்தோடு அவரை நேசிப்போம். முழுமையாக, இன்னும் அதிகமாக அவருக்காக வாழுவோம். அவரைப்போலவே நடப்போம். அவரைக்குறித்து தைரியமாக அறிக்கை செய்வோம். முழு மனதோடே அவரையே பின்பற்றுவோம். அப்பொழுது சுகவீனத்தின் வேளையில், சமாதானத்தை கொடுக்கும். வரப்போகிற நித்தியமான உலகமாகிய பரலோகத்தில், வாடாத ஜீவ கிரீடத்தை அது கொடுக்கும். (1 பேதுரு 5:4).
Taken with permission From Sovereign Grace Banner of Truth, July/August 2020.Vol.28,No.4
No Response to “ஆண்டவர் சுகவீனத்தை பயன்படுத்துகிறாரா? – ஜே.சி.ரைல். Does God Use Sickness? – J.C.Ryle.”