நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீர்களா? – Safety Zone. – Dr.David S.Steele.
சங்கீதம் 2 ஆம் அதிகாரத்தின் தொடக்க வசனங்கள், தேவனுடைய அதிகாரத்திற்கு கீழ்படிய மறுக்கும் கலககாரர்களை பற்றி சொல்லுகிறது. அத்தேவனை வீழ்த்தத் தயாராக இருக்கும் கலகக்காரர்களின் தோரணையை இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது. இந்தக் கலகக்காரர்கள் தேவனுக்கு எதிராகக் கோபப்பட்டு அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். (வச 1). அவர்கள் கர்த்தரையும் அவர் அபிஷேகம்பண்ணப்பட்டவரையும் எதிர்க்கிறார்கள். (வச 2). இந்த கலகக்காரர்கள். சுயாட்சியை தங்கள் இறுதி இலக்காகக் கொண்டுள்ளனர். (வச. 3). அவர்கள், தேவனுடைய எதிர்பார்ப்புகளிலிருந்தும், அவருடைய கட்டளைகளிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். இந்த ஒத்துழைப்பில்லாத கலகக்காரர்கள், தேவனுடைய ஆளுகையிளிருந்தும், அவருடைய ஆட்சியிலிருந்தும் விடுதலையை நாடுகிறார்கள்.
விசித்திரமான உண்மை இங்கே என்னவென்றால், கடவுளை விட்டு, தன் இஷ்டத்திற்கு போகும் கலகக்காரர் ஒவ்வொருவரும் அடிமைத்தனத்தில் உள்ளனர், மேலும் இறுதியாக, தேவனுடைய சர்வவல்லமையுள்ள கோபத்திற்கு உரியவர்களாய் உள்ளனர். கிறிஸ்துவை விட்டு நீங்கள் தப்பி ஓடும்போது, உங்கள் வாழ்க்கையைச் சுற்றி சுயமாக விதிக்கப்பட்ட ஒரு சிறையை உருவாக்குகிறீர்கள். மற்றொரு வழியில் சொல்லுவோமானால், நீங்கள் கிறிஸ்துவின் இறையாண்மைக்கு அடிபணியும்போது, நீங்கள் புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தில் பாதுகாப்பாக இளைப்பாறுவீர்கள்.
சங்கீதம் 2:1-5 வரை உள்ள வசனத்தில் சொல்லப்படும் முக்கியமான செய்தி என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையில், நாம் தேவனுடைய ஆளுகைக்கு, ஒப்புக்கொடுத்து வாழாமல், எதிர்த்து செயல்படும்போது, நாம் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறவர்களாய் இருக்கிறோம். அப்படியானால், மக்கள் தேவனுக்கு முன்பாக எப்படி வாழ வேண்டும்? சங்கீதம் 2: 6-12 ஒரு முக்கியமான பதிலை அளிக்கிறது. கலகக்காரர்கள், கிறிஸ்துவானவர் ஆட்சி செய்யும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் மேலும் அவருடைய ராஜாங்க அதிகாரத்திற்கு பயபக்தியுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். அதன் பின்புதான், நாம் பாதுகாப்பான பகுதியில் இருப்பதை அறிந்து கொள்வோம்.
அவர் ஆளுகை செய்யும் உரிமையை ஏற்றுக்கொள்ளுதல்.
தேவன் ராஜரீக அதிகாரத்தை கொண்டவராய் இருக்கிறார். அவர் ஒரு உன்னதமான மற்றும் கம்பீரமான கடவுள், அவர் நம்முடைய தடையற்ற மரியாதைக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவராய் இருக்கிறார். அவருடைய ராஜரீக ஆட்சியின் பல அம்சங்களைக் இங்கு கவனியுங்கள்.
தேவனுடைய ராஜரீக ஆட்சியின் அம்சங்கள்.
முதலாவது, ராஜாவின் நியமனம். (வச 6) இங்கே, பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள முக்கியமான வேறுபாட்டை நாம் காணலாம். “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன் என்றார்.” இங்கே, அவருடைய மகத்துவமான, ராஜரீக ஆளுகையின் நிலைப்பாட்டை கவனியுங்கள். ஒருத்தரை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நியமிக்கும்போது, அவர் வகிக்கும் இடத்தின் சிறப்பை காட்டுகிறது.
கிறிஸ்துவானவர், அவருடைய பகைஞரின் ராஜாவாக காட்டப்படுகிறார். சி.எச். ஸ்பர்ஜன், இவ்விதமாக கூறுகிறார், “இயேசு கிறிஸ்துவுக்கு முன் பூமியில் உள்ள அனைத்து வல்லமையுள்ள மனிதர்கள், பெரியவர்கள், மரியாதைக்குரியவர்கள் எப்படிபட்டவர்கள்? அவர்கள் தண்ணீரில் காணப்படும் ஒரு சிறிய குமிழி போன்றவர்கள்; எல்லா தேசங்களும், கடவுளோடு ஒப்பிடுகையில், வாளியில் இருக்கும் ஒரு சொட்டு தண்ணீர் அல்லது தராசில் உள்ள தூசிக்கு போன்றவர்கள். (ஏசா. 40:25), அவர்கள் பூமியின் ராஜாக்களாக இருப்பது எவ்வளவு சிறியது!” (1) கிறிஸ்துவானவர், பரிசுத்தவான்களின் ராஜாவாக காட்டப்படுகிறார். கிறிஸ்துவானவர், அவர்களுடைய சித்தம்,விருப்பம்,நியாயம், புரிதல் அனைத்தும் மீது, எவரும் இல்லாதபடி, அவரே ஆட்சி செய்கிறவராய் இருக்கிறார்.(2) கிறிஸ்துவானவர், தம்முடைய பிதாவின் ராஜாவாக காட்டப்படுகிறார். கிறிஸ்துவானவர், தம்முடைய மக்களுடைய இருதயத்தை ஆளுகை செய்கிறது மாத்திரமல்ல, ராஜாங்க பராமரிப்புக்கீளாக, அவர், உலக நடவடிக்கைகளை ஆட்சி செய்கிற, அனைத்து தேசங்களின் ராஜாவாக இருக்கிறார்.(3)
சங்கீதம் 99:1-5 வரை உள்ள வசனங்கள் இதை வலியுறுத்துகிறது. ஆம், உண்மையாகவே, அவருடைய ஆட்சி மகத்துவமும், மாட்சிமையும், வல்லமையும் உடையதாய் இருக்கிறது. அவர், நீதியும், பரிசுத்தராயும் இருக்கிறார். நீங்கள் சேவை செய்ய விரும்பும் ராஜா இவரே! நீங்கள் அடிபணிய விருப்பம் கொள்வது, இவ்வகையான ராஜாவுக்கே! நீங்கள் அடைக்கலம் காணக்கூடிய ராஜா இவரே!
இரண்டாவது, ராஜாவின் பதவியை குறித்து கற்றுக்கொள்கிறோம். (வச 7)
குமாரன், தீர்மானத்தை குறித்து பேசுகிறார், “தேவனுடைய கட்டளைகள் அவருடைய சித்தத்தின் அறிவுரையின் ஞானமான, சுதந்திரமான மற்றும் பரிசுத்தமான செயல்கள் ஆகும், இதன் மூலம், நித்தியம் முதல், அவர் தனது சொந்த மகிமைக்காக, காலப்போக்கில் நடக்கும் அனைத்தையும் மாற்றமுடியாத வகையில் முன்னறிவித்துள்ளார்.” (4)
குமாரனின் நித்திய பிறப்பைப் பற்றி ஆணை கூறுகிறது. Nicene Creed (381 இல் திருத்தப்பட்டது) "ஒரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கடவுளின் ஒரே பேறான குமாரன், எல்லா காலத்திற்கும் முன்பே பிதா பெற்றெடுத்தார், ஒளியிலிருந்து பெற்ற ஒளியாய், உண்மையான கடவுள், உண்மையான கடவுளிடமிருந்து பெற்றெடுக்கப்பட்டார், உருவாக்கப்படவில்லை." என்று விசுவாசத்தை அறிக்கை செய்கிறது.
ஜோன் ப்ரேம் (John Frame) ‘பெற்றெடுத்தார்’ என்ற பதத்திற்குண்டான அர்த்தத்தை இங்கே புரியச் செய்கிறார். “மனிதர்களிடையே, பிறப்பு என்பது பொதுவாக பாலியல் உறவில் நிகழ்கிறது. ஒரு காலத்தில் இல்லாத மனிதன் பிற்காலத்தில் உருவாகும் வகையில் இது காலப்போக்கில் நிகழ்கிறது. ஆனால் நித்திய பிறப்பு என்பது பாலுணர்வோ அல்லது தற்காலிகமானதாகவோ இல்லை. மேலும், இதுவரை இருந்திருக்காத ஒருவரை கொண்டுவருவதோ இல்லை. ஏனென்றால் கடவுள் ஒரு அவசியமான நபர். மேலும் மூன்று தெய்வீக நபர்களும் இந்த அவசியமான வாழ்விற்கு தங்கள் பண்புகளை பகிர்ந்து கொடுக்கிறார்கள். (5)
மூன்றாவதாக, சங்கீதம் 2:8 ராஜாவின் சுதந்திரத்தை விளக்குகிறது. “என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்திரமாகவும், பூமியின் எல்லைகளை, உமக்குச் சொந்தமாகவும், கொடுப்பேன்.” கிறிஸ்துவின் சுதந்திரம் முற்றிலும் விரிவானது. அவரது இறையாண்மைக் கட்டுப்பாட்டிற்கு வெளியே எதுவும் இல்லை. அதாவது, அவரது ராஜரீக ஆட்சிக்கு எல்லையே இல்லை. அவர் அனைத்தையும் உடையவர்; அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார். அவர் தேசங்களின் மீது இறையாண்மையுள்ளவர்; அவர் ஆட்சியாளர்கள் மீது இறையாண்மை கொண்டவர்; அவர் நம் முடிவுகளின் மீது இறையாண்மை கொண்டவர்; அவர் நம் விருப்பத்தின் மீது இறையாண்மை கொண்டவர்; அவர் அனைத்தின் மீதும் இறையாண்மை கொண்டவர். “சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக, ஆமென்.” (ரோமர் 11:36). ஆபிரகாம் கூப்பர், சரியாக கூறுகிறார், “எல்லாவற்றிற்கும் மேலான இறையாண்மை கொண்ட கிறிஸ்து, ‘என்னுடையது!’ என்று சொல்லாத ஒரு சதுர அங்குலம் கூட நமது மனித வர்க்கம் முழுவதிலும் இல்லை.”
நான்காவதாக, சங்கீதம் 2:9 ராஜாவின் நியாய தீர்ப்பை விவரிக்கிறது. வசனம் 9 இல் உள்ள கவனம் அவர்கள் மீது உள்ளது. கடவுளின் நியாயமான ஆட்சியை எதிர்த்து தங்கள் வாழ்க்கையில் ஆட்சி செய்யும் கலகக்காரர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. கிறிஸ்துவின் ஆட்சி உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் கலகக்காரர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. ஜோன் ஸ்டோட் கடவுளின் தீர்ப்பை அவருடைய "நிலையான, இடைவிடாத, சமரசமற்ற, தீமைக்கு எதிரான, அனைத்து விதங்களிலும், வெளிப்பாடுகளிலும் காணப்படுகிறது.”(6) என்று விவரிக்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவானவர் ஆளுகை செய்வதற்கும், அவருடைய ஆட்சி உரிமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கலகக்காரர்களில் ஒருவராய் நீங்கள் இருக்கிறீர்களா? இங்குதான் ஒவ்வொரு மனிதனும் உண்மை சோதனையை சந்திக்கிற இடமாய் இருக்கிறது. கிறிஸ்துவானவர், ஒரு ராஜாவாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் மகா மேன்மையும், பரிசுத்தமுள்ளவராயும் இருக்கிறார். ஆம், அவர், அனைத்திற்கும் மேலாக உயர்ந்தவராய் இருக்கிறார். அவருடைய ஆட்சி உரிமையையும், ஆளுகையும் எதிர்க்கிற எவரையும், அவர் நியாயம் தீர்க்கிறவராய் இருக்கிறார். அவருடைய இறையாண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிற எவர் மேலும் அவருடைய கோபம் மூளும். இந்த உண்மை நிலவரம் நமக்கு முன் இருப்பதுடன், சங்கீதக்காரன், இந்த முக்கியமான உண்மையை புரிய உதவி செய்கிறார்: ஆளுகை செய்வதற்கு, கிறிஸ்துவின் உரிமையை நாம் ஏற்றுக்கொள்ளுவது மாத்திரமல்ல, அவருடைய ராஜரீக அதிகாரத்திற்கு பயபக்தியுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
அவரது ராஜரீக அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிக்கவும்.
கவனமாக கவனியுங்கள்! இந்தப் பத்தியானது, "இப்போது, எனவே" (வச. 10) என்ற வார்த்தைகளால் குறிக்கப்பட்டுள்ளது. சங்கீதக்காரன் “ஞானமுள்ளவர்களாயிருக்க” நம்மைத் தூண்டுகிறார். "எச்சரிக்கப்பட வேண்டும்" என்று அவர் நம்மைத் தூண்டுகிறார். ஆகவே, அவருடைய ராஜரீக அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிப்பவர்களிடமிருந்து மூன்று பதில்கள் பொருத்தமானவை.
மூன்று பதில்கள்.
முதலாவது, கிறிஸ்துவை சேவித்தல். “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள். நடுக்கத்துடனே களிகூருங்கள்.” சேவித்தல் என்ற வார்த்தைக்கு, எபிரேய பதத்தில், “வேலை செய்தல், உழைத்தல், ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடித்தல்.” ஆனால், அதே சமயத்தில், அவ்வார்த்தைக்கு ஆராதித்தல் என்றும் பொருள்படும்.
“இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,” (உபாகமம் 10:12)
“நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.” (உபாகமம் 13:4)
“மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” (சங்கீதம் 100:2).
சங்கீதம் 2:11 ன்படி கர்த்தரை சேவித்தல் என்பது, பயத்துடன் கர்த்தரை சேவித்தல் ஆகும். “உண்மையான விசுவாசம் ஒரு மரியாதைக்குரிய ஆச்சரியத்தில் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் உயிரூட்டப்படுகிறது, மேலும் இதுவே தெய்வ பயத்தை பற்றிய வேத ரீதியான அடிப்படை அர்த்தம். தேவனுடைய அற்புதமான மற்றும் கம்பீரமான இறையாண்மையைப் பற்றிய தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திராவிட்டால், ஒருவரது இதயத்தில் அர்த்தமுள்ள விசுவாசத்தை பார்க்க முடியாது.”(7) தேவனை மையமாகக் கொண்ட பயம், தேவனின் மகிமையால் நிரப்பப்படுகிறது, இது அவருக்கு மரியாதையை அளிக்கிறது. கடவுளை மையமாகக் கொண்ட பயம் என்பது மகிழ்ச்சி மற்றும் நடுக்கம் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கியது. நாம் அவருடைய பிரசன்னத்திற்கு வரும்போது, நாம் மகிழ்ச்சியினாலும் கிறிஸ்துவை உயர்த்தும் பிரமிப்பினாலும் நிரப்பப்படுகிறோம்!
இரண்டாவது, கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தல். “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும், இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்.” (வச 12a) ஞாபகத்தில் கொள்ளுங்கள், இவர் இராஜாவாக ஆகிவிட்டார். அவர் உயர்வான நிலையில் இருக்கிறார். அனைத்தும் அவருக்கு சொந்தம். நம்முடைய கடமை, குமாரனை முத்தம் செய்வது ஆகும். அதாவது, அனைத்தையும் ஆளுகை செய்கிற, இறையாண்மை கொண்ட அந்த கடவுளுக்கு, நாம் அவசியம் கீழ்படிய வேண்டும்.
v நம்முடைய அயலாகத்தாரை நேசிக்க அவர் நம்மை அழைக்கும்போது, நாம் அவருக்கு கீழ்படிகிறோம்.
v நம்முடைய சத்துருக்களை நேசிக்க அவர் நம்மை நேசிக்க அழைக்கும்போது, நாம் அவருக்கு கீழ்படிகிறோம்.
v எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அவரை வைக்க அழைக்கப்படும்போது, நாம் அவருக்கு கீழ்படிகிறோம்.
v நம்முடைய விக்கிரகங்களை கைவிட, அவர் நம்மை அழைக்கும்போது, நாம் அவருக்கு கீழ்படிகிறோம்.
v அவருக்கு எதிராக, நம்மில் காணப்படும் கலக குணங்களை கைவிட்டு, விசுவாசத்துடன் அவரண்டை திரும்பும் போது, நாம் அவருக்கு கீழ்படிகிறோம்.
v குமாரனை முத்தம் செய்கிறோம்.
எவர்கள் தேவனுக்கும், அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் கீழ்படிய மறுக்கிறார்களோ, அவர்கள் பயங்கரமான விளைவுகளை அதாவது, அவருடைய கோபாக்கினையை உறுதியாய் சந்திப்பர். இந்த தண்டனையை மனம்திரும்பாத ஒவ்வொருத்தரும், நித்திய, நித்தியமாக சந்திப்பர். யோவான் சுவிசேஷகன், இவ்விதமாக எழும்புகிறார், “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.” (யோவான் 3:36)
கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிப்பது அவருக்குச் சேவை செய்வதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் உட்படுத்துகிறது. அதேவேளை, மூன்றாவது தேவையும் உள்ளது, அதாவது கிறிஸ்துவில் திருப்தி. கிறிஸ்துவில் அடைக்கலம் கொண்டவரை குறித்து, வேதம் பேசுகிறது. பாதுகாப்பைக் கண்டறிவதென்பது திருப்தியடைந்து அவரது செட்டைகளின் கீழ் அடைக்கலம் அடைவதாகும். (சங்கீதம் 36:7; ரூத் 2:12). தம்மிடம் அடைக்கலம் புகுபவர்களுக்கு கடவுள் கேடகமாய் இருக்கிறார் என்று அழைக்கப்படுகிறார் (2 சாமு. 22:31). கிறிஸ்துவில் அடைக்கலம் புகுபவர் ஆசீர்வதிக்கப்படுவார் என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
“உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.” (சங்கீதம் 5:11)
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம் 34:8)
“கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.” (நாகூம் 1:7)
கிறிஸ்துவில் சேவை, ஒப்புக்கொடுத்தல் மற்றும் திருப்தியைக் கண்டறிதல் ஆகியவற்றின் மொத்தத் தொகையானது, மனந்திரும்பிய வாழ்க்கை வாழ்வதை உள்ளடக்கியது; அவரது ராஜரீக அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிப்பவராய் இருப்பர். கிறிஸ்துவுக்கு சேவை செய்யவும், கிறிஸ்துவுக்கு அடிபணியவும், அவரில் திருப்தி அடையவும் மறுக்கும் ஒரு நபரை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். மனந்திரும்பும் வாழ்க்கையை வாழ்வது பற்றி எந்தத் துப்பும் இல்லாத ஒரு நபரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். ராபர்ட் லேதம் கூறுகிறார், “சுருக்கமாக சொன்னால், ஒரு விசுவாசி, மனந்திரும்புகிற விசுவாசி அல்லது விசுவாசியே அல்ல.”
அதேநேரத்தில், கிறிஸ்துவின் ஆட்சி உரிமையை அங்கீகரித்து, அவருடைய ராஜாங்க அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிக்கும் ஒரு நபரை நீங்கள் எனக்குக் காட்டுங்கள், உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நபரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்; அவரே பாதுகாப்பு பகுதியில் வசிக்கும் ஒருவராய் இருக்கிறார்.
கிறிஸ்துவின் ராஜரீக அதிகாரத்திற்கு சரியான பதில் என்ன? அவருக்குச் சேவை செய்வதன் மூலமும், அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், அவரில் நம் திருப்தியைக் கண்டறிவதன் மூலமும் நாம் பயபக்தியுடன் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு பிரதிபலிப்பும் அவரை ஆராதிக்கும் செயலாகும்.
கிறிஸ்துவின் ராஜரீக அதிகாரத்திற்கு நீங்கள் பயபக்தியுடன் பதிலளிக்கிறீர்களா? கடவுளுக்கு நீங்கள் செய்யும் சேவை அவருக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பு என்று சொல்ல முடியுமா? நீங்கள் அவருடைய அதிகாரத்திற்கு அடிபணிவீர்களா? உங்கள் முதலாளியின் அதிகாரத்திற்கு நீங்கள் பணிவுடன் கீழ்ப்படிகிறீர்களா? மனைவிகளே, நீங்கள் உங்கள் கணவரின் அதிகாரத்திற்கு பணிவுடன் பணிந்து நடக்கிறீர்களா? குழந்தைகளே, உங்கள் பெற்றோரின் அதிகாரத்திற்கு நீங்கள் பணிவுடன் பணிந்து நடக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஞ்சாங்க அதிகாரத்திற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதற்கான துல்லியமான காட்சி ஆகும்.
முடிவுரை
நாம், கிறிஸ்துவானவர் ஆட்சி உரிமை செய்வதற்கும், அவருடைய இராஜாங்க அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிக்கவும், அங்கீகரிக்கவும் வேண்டும். மேலும், கிறிஸ்துவுக்குச் சேவை செய்வதன் மூலமும், அவருக்கு கீழ்ப்படிவதன் மூலமும், கிறிஸ்துவில் நாம் திருப்தியைக் கண்டறிவதன் மூலமும் அவருடைய இராஜாங்க அதிகாரத்திற்கு நாம் பயபக்தியுடன் பதிலளிக்கிறவர்களாய் இருக்கிறோம்.
கிறிஸ்துவின் ஆட்சி உரிமையை அங்கீகரிப்பதும், அவருடைய இராஜாங்க அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிப்பதும், நீங்கள் தேவன் மேல் விசுவாசம் வைக்கிறீர்கள் என்று கூறுவதற்கான மற்றொரு வழியாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சபையில் பணியாற்றினேன். அச்சபை கட்டிடம், அஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட கட்டிடம். அபாயகரமான பொருட்களை அகற்ற ஒரு நிறுவனத்தை நாங்கள் பணியமர்த்தினோம். அவர்கள், எங்களிடம் கூறப்பட்டது: வளாகத்தில் உள்ள எவரும் தன்னிச்சையான சுவாசக் கருவியுடன் இணைந்த hazmat (அபாயகரமான பொருட்கள்) உடையை அணிய வேண்டும்.
கிறிஸ்துவின் மீது விசுவாசம் என்பது தேவனுடைய கோபத்திலிருந்து நம்மைக் காக்கும் “ஹஸ்மட் சூட்”(Hazmat Suit) ஆகும். கடவுளின் கிருபையை துணிகரமாக அலட்சியம் பண்ணாதீர்கள். கீழ்படியாத அனைவரும் கடவுளின் சர்வவல்லமையுள்ள கோபத்தை எதிர்கொள்வார்கள். ஆனால் கிறிஸ்துவையும் சிலுவையில் அவருடைய வெற்றிகரமான வேலையையும் விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை அறிந்து பாதுகாப்பு மண்டலத்தில் (Safety Zone) பத்திரமாக நிற்பார்கள்!
நாம், கிறிஸ்துவானவர் ஆட்சி உரிமை செய்வதற்கும், அவருடைய இராஜாங்க அதிகாரத்திற்கு பயபக்தியுடன் பதிலளிக்கவும், அங்கீகரிக்கவும் வேண்டும். மேலும், கிறிஸ்துவுக்குச் சேவை செய்வதன் மூலமும், அவருக்கு கீழ்ப்படிவதன் மூலமும், கிறிஸ்துவில் நம் திருப்தியைக் கண்டறிவதன் மூலமும் அவருடைய இராஜாங்க அதிகாரத்திற்கு நாம் பயபக்தியுடன் பதிலளிக்கிறவர்களாய் இருக்கிறோம். அப்போதுதான், நாம் பாதுகாப்பு பகுதியில் நிற்கிறவர்களாய் காணப்படுவோம்.
எல்லா மகிமையும் தேவனுக்கே!!
- Wlwell, W.A., & Beitzel, B.J. (1988). Baker Encyclopedia of the Bible (782). Grand Rapids: Baker Book House.
Dr.David S.Steele earned BS and MA degrees from Multnomah University and Multnomah Biblical Seminary and Doctor of Ministry from Bakke Graduate University in Seattle, Washinton. He serves as senior pastor at Christ Fellowship in Everson, Washington.
No Response to “நீங்கள் பாதுகாப்பான பகுதியில் இருக்கிறீர்களா? – Safety Zone. – Dr.David S.Steele.”