சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று. THE CHURCH’S AND OUR GREATEST NEED.
— Dr.Joel R Beeke
இன்றைய நாளில் நடைமுறைபடுத்தவேண்டிய பரிசுத்தம்.
Holiness In Practice Today
1. தேவன் உன்னை பரிசுத்தத்திற்கென்று அழைத்திருக்கிறார்.
“தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.” (1 தெச 4:7). கடவுள், நம்மை எதற்கு அழைத்தாலும் அது அவசியமானது, முக்கியமானது. அவருடைய அழைப்பே, பரிசுத்தத்தை நாடவும், அதை பயிற்சி செய்யவும் நம்மை தூண்ட செய்ய வேண்டும்.
2. உன்னுடைய நீதிமானாகுதல் மற்றும் தெரிந்துகொள்ளுதலில் பரிசுத்தமே அத்தாட்சியாய் இருக்கிறது.
பரிசுத்தமாகுதல், நீதிமானாக்கப்படுதலின் அபரிதமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாய் இருக்கிறது. (1 கொரி 6:11). இவை இரண்டும் தனக்குரிய தனித்துவத்தை கொண்டிருந்தாலும், ஒருபோதும் பிரிக்க முடியாதது. கிறிஸ்துவுக்குள், கிறிஸ்துவின் மூலமாய், நீதிமானாகுதலானது, தேவனுடைய பிள்ளையானவன், பரலோகத்திற்கு செல்லுவதற்கு தைரியத்தையும், அதற்குண்டான உரிமையையும் கொடுக்கிறது. பரிசுத்தமாகுதலானது, பரலோகத்திற்கு தகுதி உடையவனாக்கவும், தேவையான ஆயத்தத்தையும் கொடுக்கிறது.
தெரிந்துகொள்ளுதலில் கூட பரிசுத்தத்தை நாம் பிரிக்க முடியாது. “கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், ஆதி முதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே” (2 தெச 2:13). கடவுள் பக்கத்திலிருந்து பார்ப்போம் என்றால், எப்படி பரிசுத்தமாகுதல் நம்முடைய இரட்சிப்பின் அத்தாட்சியாய் இருக்கிறதோ, நமது இரட்சிப்புக்கு காரணமாயிருக்கிற தெரிந்துகொள்ளுதல் முதன்மையாய் இருக்கிறது. நம் பக்கத்திலிருந்து பார்க்கும்பொழுது, தெரிந்துகொள்ளுதலை நாம் கடைசியாகத்தான் பார்க்கிறோம். பரிசுத்தமாகுதல், கிறிஸ்துவின் ஆடுகளுக்குண்டான பிரத்தியேக குறியீடாய் இருக்கிறது. அதினால்தான் தெரிந்துகொள்ளுதலின் சத்தியமானது, சபைக்கு எப்பொழுதும் ஆறுதலான சத்தியமாய் இருக்கிறது. ஏனென்றால், விசுவாசிக்குள், கிரியை செய்யும் கர்த்தருடைய கிருபையை விவரிக்கும், நிச்சயமான, இளைப்பாறும் இடமாய் இருக்கிறது. அதினால்தான், நம்முடைய சீர்திருத்தவாதிகள் தெரிந்துகொள்ளுதலின் சத்தியம், சபைக்கு ஆறுதல் அளிக்கும் சத்தியம் என்று கூறினார்கள்.
இதைக்குறித்து, கால்வின் அவர்கள், தெரிந்துகொள்ளுதல் என்ற சத்தியம் எவரையும் அதைரியப்படுத்த கூடாது என்று தெளிவாக இருந்தார். ஏனென்றால், விசுவாசிக்கு இது ஒரு மிக ஆறுதலான சத்தியம். அவிசுவாசிக்கு இது சம்பந்தமில்லாமல் இருந்தாலும், மனந்திரும்பவே அழைக்கப்படுகிறான். தெரிந்துகொள்ளுதலின் சத்தியத்தினால் அதைரியப்பட்டு போனவர்களைக்குறித்து, நம்முடைய சீர்திருத்தவாதிகள், கற்றுக்கொடுத்தது என்னவென்றால், எவர்களெல்லாம், இந்த தெரிந்துகொள்ளுதல் சத்தியத்தினால் அதைரியப்படுகிறார்களோ, அவர்கள் இந்த அற்புதமான, உற்சாகமளிக்கும் சத்தியத்தை தவறாக பயன்படுத்த, சாத்தனுடைய இரையில், விழுகிறவர்களாய் இருக்கின்றனர்.
3. பரிசுத்தமில்லாமல், அனைத்தும் அசுத்தமாயிருக்கிறது.
“அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது.” (தீத்து 1:15). கிறிஸ்துவின் மூலமாய், தேவன் தம்முடைய பிள்ளைகளை பரிசுத்தப்படுத்துகிறார். மேலும் அவனுடைய ஜெபங்களையும், நன்றிகளையும் ஏற்றுக்கொள்ளுகிறார். தொமஸ் வாட்சன் கூறுகிறபடி, “பரிசுத்த இருதயம் ஒரு பலிபீடமாய் இருந்து, அந்த காணிக்கையை சுத்திகரித்து, அது பரீபூரணமாய் இல்லாமல் இருந்தாலும் அதை ஏற்புடையதாய் மாற்றுகிறது.
4. பரிசுத்தமானது, உன்னுடைய ஆவிக்குரிய சுகத்தை மேம்படுத்துகிறது.
ஜோன் ப்ளவேல் குறிப்பிடுவது போல, “இருதயத்திற்கு சுகம் தேவையானது போல, ஆத்துமாவிற்கு பரிசுத்தம் அவசியமாயிருக்கிறது.” மேலும் தேவன், ஆவிக்குரிய சுகத்திற்குண்டான பரிசுத்தத்தை, ஒழுக்க நெறிகளின் மூலமாக செயல்படுத்துகிறார். “இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபி 12:10,11) “பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (வச.14). கிறிஸ்துவின் நீதிமானாக்கும் வல்லமையினாலே, தேவனுக்கு முன்பாக, நீ குற்றமற்றவனாய் காணப்படுகிறாய். அவருடைய பரிசுத்தமாக்கும் வல்லமையினாலே, சுத்த மனசாட்சி கொண்டவனாய் காணப்படுகிறாய். இரண்டுமே ஆவிக்குரிய சுகத்திற்கு மிகவும் அவசியமாய் இருக்கிறது.
5. பரிசுத்தம், இரட்சிப்பின் நிச்சயத்தை வளர்க்கிறது.
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத்தேயு 7:16) அனைத்து சீர்திருத்த பரிசுத்தவான்கள் ஒத்துக்கொள்வது என்னவென்றால், அனைத்துவிதமான, அளவுகள் கொண்ட அனுதின நிச்சயத்தை, உண்மையான விசுவாசிகள், ஆண்டவருடைய வார்த்தையை படிப்பதினாலும், கிருபையின் எத்தனங்களை கையாள்வதினாலும், அதற்கு கீழ்படிவதினாலும், ஆகிய இவற்றை அனுதின வாழ்வில் கடைப்பிடித்து, பரிசுத்த வாழ்வை அனுபவிக்கின்றனர்.
பரிசுத்தத்தில் நாம் வளருவதை நிறுத்திவிட்டால், இரட்சிப்பின் நிச்சயத்தை அனுதினமும் இழக்கிறவர்களாய் காணப்படுவோம். விசுவாசிகள் ஏனோதானோ என்று வாழ்கிறவர்களாயும், பாவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுகிறவர்களாயும், அனுதின வேத தியானத்தை அலட்சியப்படுத்துகிறவர்களாயும், சுறுசுறுப்பற்றவர்களாய் இருக்கிற காரியம் (அதாவது, அரிதான சமயங்களில் நமக்குள் விசேஷமாக நடக்கிறபொழுது தவிர, பரிசுத்தம் பொதுவாக நமக்கு வெளியே நடக்கிறதாயும், பரிசுத்தமாகுதல் என்ற பகுதியில் நடக்கிறதற்கு ஒன்றுமில்லை என்று எண்ணிக்கொண்டு, பரிசுத்தத்தை நாடாதவர்களாய் இருப்பர்.) ஆவிக்குரிய மரணம், இருள், மற்றும் கனியற்ற வாழ்விற்கு தீனி போடுகிறதாய் இருக்கிறது.
ஒரு தெய்வ பயமுள்ள விவசாயி,தன் நிலத்தை உழுகிறான், விதைக்கிறான், உரமிடுகிறான், பயிறுடுகிறான். இதனுடைய விளைவு, என்ன பலன் கிடைக்கிறதோ, அதுதான் கிடைக்கும் என்று அவனுக்கு நன்றாய் தெரியும். இவன் போய், விதையை உயிர்பிக்கவோ, மழையை வருவிக்கவோ, சூரிய வெளிச்சத்தை கொடுக்கவோ எதுவுமே இவனால் செய்ய முடியாது என்று நன்றாய் தெரியும். இருந்தாலும், தேவனுடைய ஆசீர்வாதத்தை சார்ந்து அவன் தன் வேலையில் மிகுந்த விழிப்போடு செய்கிறான். அவ்வண்ணமாக, ஒரு விசுவாசி, மிகுந்த விழிப்போடு, பரிசுத்தத்தை நாடவில்லையென்றால், அவனுடைய வாழ்வில் நிச்சயத்தை பார்க்கவும் முடியாது, பேதுரு கொடுக்கிற அழைப்புக்கு கீழ்ப்படியவும் முடியாது.(2 பேதுரு 1:10).
6. தேவனுடைய பணியில் வல்லமையாய் பயன்படுத்தப்பட பரிசுத்தம் அவசியமாய் இருக்கிறது.
அப்.பவுல் பரிசுத்தமாகுதலையும், உபயோகப்படுதலையும் ஒன்றாக இனைத்து பேசுவதை நாம் பார்க்கலாம். “ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.” (2 தீமோ 2:21).
7. பரிசுத்தம் உன்னை தேவனை போலாக்குகிறது.
தொமஸ் வாட்சன், இங்கே குறிப்பிடுகிறார், “பரிசுத்தத்தில் நாம் தேவனை போலாக காணப்பட அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். இது ஒரு கண்ணாடி போன்றது, இதின் வழியாய் ஒரு முகத்தை பார்க்கலாம். இது ஒரு பரிசுத்த இருதயம், இதின் வழியாய் கடவுளை காணலாம்.”
8. நீ நேசிக்கும் கடவுள், பரிசுத்தத்தை நேசிக்கிறார்.
வில்லியம் குர்னால், இதைக்குறித்து தெளிவாக கூறுகிறார், “ நம்முடைய சுபாவத்தில் படிந்திருக்கிற கரையை, அவர் கடினமாய் தேய்த்து, எடுத்து போட மாட்டார், மாறாக, தன்னுடைய பிள்ளைகளுடைய ஆடைகளில், கரையை பார்ப்பதை விட, அந்த ஆடையில் கிளிசலை பார்ப்பதையே விரும்புகிறார். அந்த அளவுக்கு அவர் பரிசுத்தத்தை விரும்புகிறார்.”
9. பரிசுத்தம் உன்னுடைய உண்மைத்தன்மையை பாதுகாக்கிறது.
இது உன்னுடைய போலித்தனமான கிறிஸ்தவ வாழ்விலிருந்தும், “ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ” வாழ்விலிருந்தும் உன்னை காப்பாற்றுகிறது. இது அனுதின கிறிஸ்தவ வாழ்விற்கு வேண்டிய எழுச்சியையும், நோக்கத்தையும், அர்த்தத்தையும், வழிகாட்டுதலையும் கொடுக்கிறது.
10. பரிசுத்தம் உன்னை பரலோகத்திற்கு தகுதிபடுத்துகிறது.
“பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்(தொடருங்கள்); பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.” (எபி 12:14). ஜோன் ஓவன், இவ்விதமாக கூறுகிறார். “ இந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழாமல், பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் வாழ்க்கை, கற்பனையில்கூட எட்டாத முட்டாள்தனமான வாழ்க்கை. பரிசுத்தம் பூரணப்படுவது பரலோகத்தில் மட்டுமே. ஆனால், அதின் ஆரம்பம் இவ்வுலகத்திலே. தேவன், எவரையும் இவ்வுலகத்தில் பரிசுத்தப்படுத்ததாதபடி, பரலோகத்திற்கு அழைத்துச் செல்பவர் அல்ல. இந்த ஜீவனுள்ள தலைவர், மரித்துப்போன அங்கத்துவர்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.
பரிசுத்தத்தை நாடி, பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் பத்து குறிப்புகள்.
How Must We Pursue Holiness? Briefly, here are ten hints of assistance:
1. வேதத்தை அறிந்து, அதில் மகிழுங்கள். இதுதான் பரிசுத்தத்திற்குண்டான, கடவுளுடைய பிரதானமான பாதை. இங்குதான், அவருடைய வார்த்தையில், ஆவியானவரின் ஆசீர்வாதத்தை பார்க்கலாம். இயேசுவானவர் இவ்விதமாக ஜெபிக்கிறார், “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17). வேத வசனத்தை மனப்பாடம் பண்ணுங்கள். அதை ஆராய்ந்து பாருங்கள். அதின்படி வாழுவதற்குண்டான கிருபையை நாடுங்கள். வாழ்க்கையின் பல்வேறு போராட்டங்கள், சீற்றங்கள் மத்தியில் வேதம் உங்கள் வழிகாட்டியாய் இருக்கட்டும். இந்த அசுத்தமான உலகத்தில், நம்முடைய இருதயமானது, பரிசுத்தத்தை விட்டு வழிவிலகி போகிறதற்கு ஏதுவான இருதயமாய் இருக்கிறதினாலே, இந்த வேதம், உங்களை நடத்துகிற வழிகாட்டியாய் இருக்கட்டும்.
2.கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்திற்குள் வளர பிரயாசப்படுங்கள். கிறிஸ்துவை நோக்கி அடிக்கடி ஓடுங்கள். அனைத்துவிதமான அசுத்தத்திலிருந்து உங்களை விலக்கி பாதுகாக்கப்பட, சுத்திகரிக்கப்பட, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொடுவதற்கு பிரயாசப்படுங்கள். கிறிஸ்துவில் உள்ள விசுவாசம், பரிசுத்தத்தில் வளர உதவும் ஊக்குவிப்பு ஆகும். ஏனென்றால் விசுவாசமும், பாவத்தை நேசிக்கும் அன்பும் இரண்டும் சேர்ந்து கலக்க முடியாது. ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுடைய பரிசுத்தத்தை, கிறிஸ்துவை குறித்ததான உங்களுடைய அனுபவங்களில் நாடாதேயுங்கள். கிறிஸ்துவிலிலேயே நாடுங்கள். வில்லியம் குர்னால் இங்கே அழகாக குறிப்பிடுகிறார்.
“ஒரு மனவாட்டியானவள், தன்னுடைய மணவாளனின் புகைப்படத்தை மிகவும் விரும்புவாள். அதுவே, அந்த மணவாளனை விட அந்த புகைப்படத்தை அவள் நேசித்து தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் அப்புகைப்படைத்திடம் சொல்லி பெற்றுக்கொள்ள வாஞ்சித்தால் எவ்வளவு மதியீனமாய் இருக்கும். அதேபோல் நாமும் நம்முடைய கற்பனையில் உள்ள கிறிஸ்துவை நாடாதபடி, வேதத்திலுள்ள கிறிஸ்துவையே நாடுவோம்.”
3. நீங்கள் பரிசுத்தத்தில் வளருவாயானால்,
இக்கேள்வியை எப்பொழுதும் கேளுங்கள். நீங்கள் பரிசுத்தத்தில் வளருவாயானால், “கிறிஸ்துவானவர் என்ன செய்வார்?” என்ற கேள்வியை எப்பொழுதும் கேளுங்கள். பவுலை போல, கிருபையை நாடுங்கள்; “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.”(1கொரி 11:1).
4. பரிசுத்த ஆவியானவரை சார்ந்து வாழுங்கள். தொமஸ் வாட்சன், இவ்விதமாக எழுதுகிறார், “அச்சானது, தன்னுடைய பதிவை, மெழுகு மேல் பதிக்கப்படுவது போல, பரிசுத்த ஆவியானவரும், தன்னுடைய பரிசுத்தத்தை இருதயத்தில் பதிக்கிறார். தேவ ஆவியானவர், ஒரு மனிதனில், பரிசுத்தம் என்கிற வாசனையை வீசச் செய்து, அவனுடைய இருதயத்தை பரலோக பிரசன்னத்தினால் நிரப்புகிறார்.”
5. பரிசுத்தத்தில் வளரும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிற பரிசுத்தவான்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள். (1 கொரி 11:1) உங்களுடைய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாய் காணப்படுகிற தெய்வ பயமுள்ள விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுங்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்.” (நீதி 13:20). ஐக்கியம் ஒருங்கிணைப்பை கொடுக்கிறது.
6. பரிசுத்ததிற்காக ஜெபியுங்கள். அசுத்தத்திலிருந்து சுத்தமானதை, கடவுள் தவிர ஒருவரும் கொடுக்க முடியாது. (யோபு 14:4). ஆகையால், தாவீதோடு சேர்ந்து ஜெபியுங்கள், “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்.”(சங்கீதம் 51:10).
7. “அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.”(ரோமர் 6:11). கடவுள் எதை வெறுக்கிறாரோ, அதை நீங்களும் வெறுக்க பழகிக் கொள்ளுங்கள். கடவுள், நியாயாதிபதியாய் இருப்பதினால் மாத்திரமல்ல, அவர் அன்புக்குரிய தகப்பனாயும் இருப்பதினாலும் கீழ்படிவதற்கு பாத்திரராய் இருக்கிறார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சோதனை வேளையில், யோசேப்போடே சேர்ந்து சொல்லுங்கள், “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?”(ஆதி 39:9). மேலும், கிறிஸ்துவானவர், உங்களை உயிரோடு பாதுகாக்க வல்லவராய் இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் அவருடன் கொண்ட ஐக்கியத்தில் வாழுங்கள். உங்களுடையடைய அநீதிக்கு மேலாக, அவருடைய நீதி பெரிதாய் இருக்கிறது. உங்களுடைய பாவத்தன்மைக்கு மேலாக, அவருடைய இரட்சிக்கும் தன்மை பெரிதாய் இருக்கிறது. சோர்ந்து போகாதேயுங்கள்; நீங்கள் அவருக்குள் பலசாலியாய் இருக்கிறீர்கள், உயிர்ப்பிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள், ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறீர்கள். பிசாசு, பல சண்டைகளில் ஜெயிக்கலாம், யுத்தம் உங்களுடையது, வெற்றி உங்களுடையதாய் இருக்கிறது. கிறிஸ்துவில் எதிர்மறையான காரியம் ஒன்றுமில்லை, நேர்மறையான காரியமே ஆளுகை செய்கிறது. (ரோமர் 6:11)
8. தனிப்பட்ட ஒழுக்கத்தை, விடாமுயற்சியுடன் வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சில நேரங்களில் பலவீனகளினிமித்தமாக, பாவத்தில் விழுவீர்களானால், கடவுளுடைய இரக்கத்தை பெற விரக்தியடையவோ அல்லது தொடர்ந்து பாவத்தில் நிலைத்திருக்கவோ தேவையில்லை. மாறாக, ஜோனத்தான் எட்வர்ட்ஸ் உடன் சேர்ந்து தீர்மானம் எடுத்துக்கொள்ளுங்கள்: “ தீர்மானம் எடு, ஒருபோதும் விட்டு விடாதே, நான் என்னதான் தோல்வியை சந்தித்தாலும், என்னில் இருக்கும் பொல்லாத குணத்தினால் சோர்ந்துவிடாதபடி, போராடி முன்னேற வேண்டும்.”
பாவத்திற்கு எதிராக போராடுதல், வெற்றி இல்லாமை இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக தென்பட்டாலும், அவ்விதமாக ஒருபோதும் கிடையாது. ஒரு விசுவாசி, தான் அடிக்கடி தோல்வியை சந்திக்கிறவனாய் இருக்கிறான் என்று புரிந்துக்கொண்டு, தோல்விகளின் மத்தியிலும், விடாமுயற்சியை வளர்த்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறவனாய் இருக்கிறான். தோல்வி, அவனை விட்டு வெளியேற செய்கிறதில்லை. மாறாக, தேவ ஆவியானவரின் பெலத்தினால், மனந்திரும்பி முன்னேறிச் செல்கிறவனாய் காணப்படுகிறான். “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.” (நீதி 24:16).
9. பரிசுத்த நடக்கைக்கு வேத பூர்வமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ளுங்கள். 1 கொரிந்தியர் புத்தகத்திலிருந்து நாம் இதை காணலாம்: இது தேவனுக்கு மகிமையை தேடித்தருகிறதா?(10:31), இது கிறிஸ்துவான கடவுளோடு நிலைத்து இருக்கிறதா?(7:23), இது வேத பூர்வமான உதாரணங்களை கொண்டு நிலைத்து இருக்கிறதா?(11:1), இது எனக்கு சரீர ரீதியாய், ஆவிக்குரிய ரீதியாய், மன ரீதியாய் பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா?(6:9-12) இது மற்றவர்களுக்கு நேர்மறையான விதத்தில் உதவுகிறதா? மேலும் மற்றவர்களை அனாவசியமாக பாதிக்காமல் இருக்கிறதா?(10:33;8:13), இது என்னை அடிமையின் ஆதிக்கத்திற்குள்ளாக கொண்டுவருகிறதா? (6:12).
10. “நிகழ் கால” முழுமையான அர்ப்பணிப்புடன் வாழுங்கள். “இன்னும் ஒரு தடவை” என்ற பேச்சுக்கு இறையாகாதேயங்கள். நாளைய கீழ்படிதல், இன்றைய கீழ்படியாமையை காட்டுகிறது. நாளைய பரிசுத்தம், இன்றைய அசுத்தத்தை காட்டுகிறது. நாளைய விசுவாசம், இன்றைய அவிசுவாசத்தை காட்டுகிறது. பாவத்தை ஒருபோதும் செய்யாமல் இருக்க நோக்கம் கொள்ளுங்கள். (1யோவான் 2:1), உங்களுடைய எந்த சிந்தையையும் கிறிஸ்துவுக்குள் சிறைபடுத்திக்கொள்ள தேவ பெலத்தை நாடுங்கள்.(2 கொரி 10:5), வேதம் தெளிவாக கூறுகிறது, நம்முடைய ‘நினைவுகள்’ தான் நம்முடைய குணத்தை நிர்ணயிக்கிறது. “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்.” (நீதி 23:7). பழமையான வாசகம் இப்படியாக சொல்லுகிறது: “எண்ணத்தை விதை, செயலை அறுப்பாய், செயலை விதை, பழக்கத்தை அறுப்பாய், பழக்கத்தை விதை, குணத்தை அறுப்பாய்.”
பிலிப்பியருக்கு பவுல் சொன்ன ஆலோசனையை பின்பற்றுங்கள்: “சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”(4:8). பரிசுத்தம் என்பது, நிகழ் காலம், முழுமையான அர்ப்பணிப்பு, வெளிப்படையாக செயலில் காண்பித்தல் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. அதினால்தான், நம்முடைய மனதிற்கு எதை அனுமதிக்கிறோமோ, அதை மிகுந்த வைராக்கியத்தோடு, விழிப்புள்ளவர்களாய் கவனம் செலுத்த வேண்டும். நாம் படிக்கிற புத்தகம், நாம் கேட்கும் இசை, உரையாடல் அனைத்தும், நம் மனதை பாதிக்கிறதினால், பிலிப்பியர் 4:8 ன் பின்னணியில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
This excerpt has been taken from “Holiness” by Dr.Joel R Beeke,published by Chapel Library. He is president and professor of Systematic Theology and Homiletics at Puritan Reformed Theological Seminary, and a pastor of the Heritage Reformed Congregation of Grand Rapids, Michigan.
No Response to “சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று. THE CHURCH’S AND OUR GREATEST NEED.”