கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தல்

Published January 1, 2018 by adming in Pastor's Blog

“உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம் 37:5).இவ்வசனத்தில் இரண்டு எபிரேய பதங்கள் காணப்படுகின்றன. ஒன்று “galal” (கலால்) “roll, roll away”, அதாவது “சுருட்டுதல்” இரண்டாவது “al’ (ல்) “upon” அதாவது ’மேலே’. ஆக இது எவ்விதமாக அர்த்தம் கொள்ளுகிறது என்றால் ‘Roll your way upon the Lord’ –‘தேவன் மேலே சுருட்டி வைத்துவிடு’ என்று பொருள்படும். ஆக இவ்வசனம் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நம்முடைய வழிகள் அனைத்தையும், நம்முடைய வாழ்வின் அனைத்து காரியங்கள், சிறிதோ, பெரிதோ, ஏனென்றால், நம்முடைய வாழ்வில், என்ன செய்ய வேண்டும்?, ஏது செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை குறித்து நாம் அறீவீனர்கள், பலவீனர்கள். நம்முடைய வாழ்வில் (எதிர்பாராதவிதத்தில்) நிகழும் அனைத்தும் புரிந்துக்கொள்ள முடியாது, விளக்கப்படுத்தவும் முடியாது. ஆகவே, அனைத்தையும் அவர்மேலே ‘சுருட்டி’ போட்டு விடவேண்டும்.
இதே அர்த்தத்தில்தான் நீதி 16:3 சொல்லுகிறது “ உன் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” இங்கே நம்முடைய ‘செயல்கள்’ அனைத்தையும் என்று சொல்லுகிறது. மற்றவர்கள் பாராட்டுகிறார்களோ, இல்லையோ, நம்முடைய செயல்கள் கர்த்தருக்கு பிரியமான விதத்தில் இருக்கும் பொழுது, நம்முடைய எண்ணங்கள் உறுதி படுகிறது. அதாவது நம்முடைய இருதயத்தில் சமாதானத்தை பார்க்கலாம்.
இவ்விதமாக மேலே கண்ட இரண்டு அருமையான ஆண்டவருடைய வாக்குகள் நமக்கு இருக்கும்பொழுது, நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை, கிறிஸ்துவுக்கு ஒப்புவித்த மனதோடு வாழ்வது மிக மிக அவசியம். அதாவது Living for the Lord with commitment. இன்றைக்கு சபை வளராததற்கும்,விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சி குன்றிப்போவதிற்கும், தோல்விகளுக்கும் காரணம், ஒப்புக்கொடுத்த மனது இல்லாததே. என்றைக்கு ஆண்டவருக்கு முதலிடத்தை (மத்தேயு 6:33) கொடுத்து, சுயத்தை சாராதபடி, முழு இருதயத்தோடு (நீதி 3:5,6) அவருடைய ஆளுகைக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்து வாழும்பொழுது, அங்கு ஆசீர்வாதமாய் இருக்கும்.

என்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் அனேக முறை, ஒப்புக்கொடுத்த மனதோடு செய்வேன், ஆனால் விட்டுவிடுவேன். ஏனென்றால் விருப்பமில்லாமல் இருக்கும் அல்லது கடினமாய் இருக்கும் அல்லது முழு மனதை கொடுத்து செய்யாமல் இருந்திருப்பேன். இதற்காக நான் வருந்துகிறேன். என் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கிறேன். இதன்நிமித்தம் எவ்வளவோ ஆசீர்வாதங்களை இழந்துவிட்டேன். ஆக இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் commitment – ஒப்புகொடுத்தல் என்பது உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை, உறுதித்தன்மை, விடாமுயற்சி, சுயத்தை வெறுத்தல், வலியை ஏற்றுக்கொள்ளுதல், அதாவது வெறுப்பாக (Boring) இருக்கிறது, சோர்பாக இருக்கிறது என்று நினைத்து, விட்டு விடுகிறது அல்ல. இதைத்தான் ரோமர் 12:1 சொல்லுகிறது “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்: இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” ஆம், பழைய ஏற்பாட்டுக் காலத்தில், தேவனுக்கு பலி செலுத்தப்பட வேண்டிய ஆடானது பழுதற்றதாய் காணப்பட வேண்டும். அதுவே தேவனுக்கு ஏற்றதாய் காணப்பட்டது. அதைதான் நாம் இங்கே பார்க்கிறோம், ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கிற வாழ்வில் தியாகம்(பலி) இருக்க வேண்டும், இழக்க வேண்டும், சுயத்துக்கு மரிக்க வேண்டும். பரிசுத்தம் இருக்க வேண்டும், அவருக்கு பிரியமானதாய், அவரை பிரியப்படுத்த வேண்டும்.

நம் கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு இருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு நமது அருமை இரட்சகரான இயேசுகிறிஸ்து. சங்கீதம் 22:8 ம் வசனத்தை குறிப்பிட்டு பார்க்க வேண்டும். அதில் சந்கீதக்காரனையும், வருகிற மேசியாவையும் குறித்து பார்க்கலாம். “Commit(yourself) to the Lord; let Him deliver him: Let Him rescue him, because He delights in him.”(NASB) இங்கு நாம் மேலே சொன்ன ‘galal’-கலால் என்ற எபிரேய பதம் உபயோகப்பட்டுள்ளதை பார்க்கலாம். இதைத்தான் மத்தேயு 27:43ல் இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்ட பொழுது, அவருக்கு எதிராக சொல்லப்பட்ட வார்த்தைகளாக பார்க்கிறோம். இங்குதான் நாம் முக்கியமான பாடத்தை கற்றுக்கொள்ளுகிறோம்.மற்றுமொரு ஆங்கில மொழிபெயர்ப்பு இவ்விதமாக கூறுகிறது “He trusted and rolled himself on the Lord…” ஆம், இயேசுவானவர் தம்முடைய பரம பிதாவானவருக்கு தம்மையே முழுமையாக ஒப்புகொடுத்தார். இயேசுவானவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள், தம் பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்வதாய் இருந்தது. அவர், அவருடைய செயல்கள், வழிகள், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் தம் பிதாவானவருக்கு ஒப்புக்கொடுத்தார். இயேசுவானவருக்கு எதிராக, எவர்கள் இவ்வார்த்தைகளை சொன்னார்களோ, அவர்கள், அவருடைய நம்பிக்கை,ஒப்புக்கொடுத்தல் வீனாய் போய்விட்டது என்று நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு முழு நிலவரம் தெரியாது (பிலிப்பியர் 2:6-11).அவ்வண்ணமாகவே, நாம் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்கிற வாழ்க்கையில், உலகம் நமக்கு எதிராக செயல்படலாம், கேலி, கிண்டல் பண்ணலாம், பயித்தியக்காரன் என்று சொல்லலாம். கிறிஸ்தவனாய் இருக்கிற நீயும், நானும் இவற்றிக்கெல்லாம் செவி சாய்த்து பதில் சொல்லிக்கொண்டு இருக்காதப்படி கிறிஸ்து இயேசுவை நோக்கி மட்டுமே நாம் ஓட வேண்டும். இதைத்தான் வேதமும் போதிக்கிறது.(எபிரெயர் 12:1; ரோமர் 12:1,2). பிதாவான கடவுள், தம்முடைய குமாரனாகிய இயேசுவானவர், அவருக்கு எதை ஒப்புக்கொடுத்தாரோ அவர், அதற்கு உண்மையுள்ளவராய் இருந்தார். அவ்வண்ணமாகவே, நாமும், நமதாண்டவருக்கு எதை ஒப்புக்கொடுக்கிறோமோ, அதற்கு அவர் என்றென்றும் உண்மையுள்ளவராய் இருப்பார்.

ஆகவே, நாம் கர்த்தருடைய கிருபையினால் இப்புதிய ஆண்டை தொடங்கியிருக்கிறோம். இப்புதிய ஆண்டு கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆண்டாக, இப்புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் சங்கீதகாரனைப்போல, “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துக்கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.”(சங் 139:23,24; 143:10.) என்று நாம் ஜெபிப்போமாக.

உங்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்களும், ஜெபங்களும்.

-பாஸ்டர்.தாமஸ் எடிசன்.

No Response to “கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தல்”

Leave a Comment