ஏன் தேவன் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்க தாமதிக்கிறார்? – Dr.பீட்டர் மாஸ்டர்ஸ்.

Published September 18, 2019 by adming in Pastor's Blog

    நமக்கு தொடர்ச்சியாக, பல்வேறு சூழ்நிலைகளில், தேவனுடைய உதவி தேவையாயிருக்கிறது. ஆம், ஆத்துமாக்களுக்காக, இடைவிடாமல் ஜெபிக்கிறோம். ஆனால், தேவன் ஏன் ஒரு சில காரியங்களுக்காக, மறுபடியும், மறுபடியும் இன்னும் சொல்லப்போனால், நீண்ட காலமாக ஜெபிக்க வைக்கிறார்? உண்மைதான், தேவன், ஜெபத்திற்கு பதில் அளிக்கிறவராய், விசேஷமாக, அவசரமான வேளையில், உடனடியாக பதில் கொடுக்கிறவராய் இருக்கிறார். ஆனால், அதேசமயத்தில், ஒவ்வொரு ஜெபிக்கிற கிறிஸ்தவனும், தன்னுடைய ஜெப வாழ்வில் அதிக காலம் காத்திருக்கிறவனாயும், இன்னும் சொல்லப்போனால், அனேக வருஷங்கள் காத்திருக்கிறவனாயும் இருக்கிறான்.

    சில நேரங்களில், ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக அல்லது ஒரு ஆத்துமாவுக்காக, மறுபடியும், மறுபடியும் ஜெபிக்க வேண்டுமா என்று நாம் யோசிப்பது உண்டு. ஆம், கட்டாயம் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால், “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று கொலோ 4:2ல் படிக்கிறோம். ஆனால், ஏன்? இப்படியாக ஜெபிப்பதில் தேவனுடைய திட்டம் என்ன?

தேவன் தாமதிப்பதில் உள்ள ஐந்து காரணங்கள்

  1.  நம்முடைய நோக்கம் சரியான விதத்தில் அமையும்படியாக, தேவன் தொடர்ந்து, நம்மை ஜெபத்தில் தரித்திருக்கும்படி செய்கிறார். அவர், ஒருபோதும், நாம் கூப்பிட்டு அழைக்கும்படியான ஒரு சாதாரண வேலைக்காரனாக, அவரை அனுமதிப்பதில்லை. அப்படி நாம் செய்வோம் என்றால், நாம் காலப்போக்கில் ஜெபிக்கமாட்டோம். மாறாக, அதிகாரத்தோடு கேட்கிறவர்களாய் மாறிவிடுவோம். நம்முடைய ஜெபத்திற்கு உண்டான பதிலை, உடனே, உடனே  அவர் பதில் கொடுப்பாரென்றால், நாம் ஒரு எஜமானனாக, நம்மை நாமே பார்க்கவும், நம்முடைய வசதிக்கேற்ப, கடவுள் ஒரு வேலைக்காரராக பார்க்கவும் நமக்கு மனப்பான்மை வந்துவிடும். மேலும், அவரை உன்னதமான, சர்வ ஆளுகையுள்ள கடவுளாக கனப்படுத்த நாம் மறந்து விடுவோம். ஆகையால், அவர், நாம் ஜெபத்தில் காத்திருக்கவும், தொடர்ந்து தாழ்மையோடு ஜெபிக்கவும், மேலும் அவர் யார், நாம் யார் என்றும் அதாவது, நாம் கிருபையினால் மட்டுமே இரட்சிக்கப்பட்ட அபாத்திரமான சிருஷ்டிகள் என்றும் அறியச் செய்கிறார். ஆம், நம்முடைய விழுந்துப்போன இருதயத்தின் காரணமாக, ஜெபமானது, அடிக்கடி தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

  2. தேவன், நம்முடைய ஜெபத்திற்குண்டான பதிலை கொடுக்க தாமதிப்பதற்கு அடுத்த அழுத்தமான, உண்மையான காரணத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டும். நாம் ஒரு காரியத்திற்காக, அடிக்கடி, தொடர்ந்து ஜெபிப்பது எதை வலியுறுத்துவதென்றால், அப்படியான ஜெபத்திற்குண்டான பதில், சும்மா சாதாரண காரியம் அல்ல என்றும், மனுஷீக முறைக்கொண்டு நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அறிந்து கொள்ளவேண்டும். நாம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கும்படியான காரியமானது, அதற்குண்டான பதில் வரும் போது அதில் இருக்கும்படியான சிறப்பில் காணலாம்.

    ஒரு பாவியானவன், இரட்சிக்கப்பட நாம் ஜெபிக்கும்போது, அடுத்த நாளே, அந்த பாவியானவன் இரட்சிக்கப்பட்டுவிட்டான் என்றால், நாம் மொத்தமாக ‘மனிதனின் முழுமையான வீழ்ச்சி’ என்ற உபதேசத்தை ஏற்க மறுத்துவிடுவோம். மேலும், மனுஷ இருதயமானது, கல் நெஞ்சம் கொண்டவன், கலக குணமுள்ளவன், தேவனுக்கு எதிராளியானவன் என்ற மனுஷனை குறித்ததான எண்ணத்தையே எடுத்து விடுவோம். மாறாக, மனிதன், நமக்கு சாதகமானவன், இணங்கி வருபவன், சுவிசேஷத்திற்கு செவிகொடுப்பவன் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம். ஆகையால், தேவன், வேதப்பூர்வமான சத்தியத்தில் நிலைத்திருக்க, நம்முடைய ஜெபத்தில் தொடர்ந்து காத்திருக்க அனுமதிக்கிறார்.

 3. சந்தேகமின்றி, தேவன் நம்முடைய ஜெபத்திற்குண்டான பதிலை தாமதிப்பதில் உள்ள அர்த்தம் என்னவென்றால், நம்முடைய சொந்த பலவீனத்தையும், நாம் அவர் பேரில் சார்ந்திருப்பதையும் ஞாபகப்படுத்துகிறது. நாம் ஒரே ஒரு முறை மட்டும், ஜெபத்திற்கு போவோம் என்றால், நிச்சயமாக, நாம், முடியாமை தன்மை கொண்டவர்கள் என்ற அறிவை இழந்து விடுவோம். ஒரு வருஷத்தில், நம்முடைய ஜெபத்திற்கு ஆயிரம் பதில்களை கொண்டிருப்போம் என்றால், நிச்சயமாக, நம்முடைய வாழ்வு வெற்றிகரமாகவும், மேலும், நமக்குள் ஆவிக்குரிய பெருமையை கொண்டவர்களாயும், மாத்திரமல்ல, ‘இவை அனைத்தும், ஆண்டவரிடமிருந்து சிறிய உதவியைப்பெற்றுக்கொண்டு முடித்தேன்’ என்ற நினைப்பில் வாழ்கிறவர்களாயும் இருப்போம்.

   இன்று அனேக சபைகள், இவ்விதமான தாமதத்தை அனுபவிக்கிறதை நாம் பார்க்கலாம். ஆம், ஆத்துமாக்களை சந்தித்து சுவிசேஷத்தை சொல்லுகிற காரியத்தில், கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், ஒருவரும் செவிகொடுத்தபாடில்லை. பிறகு, கடவுளுடைய வார்த்தைக்கு ஆத்துமாக்களை இணங்கசெய்வது நம்மால் முடியாத காரியம் என்று ஏற்றுக்கொள்ளுகிறோம். அப்பொழுது, நமதாண்டவர் கிரியை செய்ய ஆரம்பிக்கிறார்.

4. நாம், நம்முடைய ஜெபத்தில், தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, ஜெபிப்பதில் உள்ள மற்றுமொரு காரணத்தை நாம் இங்கே பார்க்கலாம். ஆம், நாம், தொடர்ச்சியாக நம்முடைய ஜெபத்தில், நம்முடைய ஆசை விருப்பங்களையும், நமக்குரிய பல்வேறு விண்ணப்பங்களை மேலும் மேலும் வைத்து ஜெபித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு காலக்கட்டத்தில், நாம் இவ்விதமான கேள்விகளை எழுப்புகிறவர்களாய் இருக்கிறோம். ‘நான் பரிசுத்த வாழ்க்கை வாழ முயற்சிக்காததினால்,அவர் என்னுடைய ஜெபத்திற்குண்டான பதிலை கொடுக்க மறுக்கிறாரா? அல்லது நான் சாட்சியாக வாழாதபடி, அவருடைய வார்த்தையை எடுத்து படிக்காமல், பிறர் எனக்கு தீங்கு செய்தாலும், அவர்களை மன்னிக்காமல் போவதினாலும், அல்லது என்னை நானே, அந்த ஆண்டவருக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்து உண்மையாய் வாழாதபடி இருப்பதினாலோ? என்று பல்வேறு கேள்விகளை கேட்பதற்கு, நம்மை நாமே நிர்பந்திக்கப்படுகிறோம். இவ்விதமாக, நம்முடைய ஜெபத்திற்குண்டான பதிலை பெறுவதற்கு தடையாய் காணப்படுகிற, அனைத்து காரியங்களையும், தாமதித்திற்குண்டான அனைத்து காரியங்களை அலசி ஆராய்ந்துப்பார்த்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்கிறவர்களாய் காணப்படுகிறோம்.

5. தாமத்திற்குண்டான மற்றுமொரு காரணம் என்னவென்றால், நாம் எது அவசியம், எது அவசியமில்லை என்று அறிந்துக்கொள்ளுகிறோம். ஆம், நாம் விண்ணப்பிக்கும் அனைத்திற்கும் கடவுள் உடனடியாக பதில் கொடுப்பாரென்றால், நம்முடைய ஜெப விண்ணப்பமானது, ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வாங்க வேண்டிய அத்தனை பொருட்களும், இன்னும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளையும் உட்பட்டு பட்டியலிட்டது போல ஆகிவிடும். ஆனால், நாம் மாதக்கணக்காக, தொடர்ச்சியாக ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, நாமே, எது தேவை, எது அவசியமில்லாதது, எது நமக்கு பொருத்தமானது அல்ல, எது வேண்டாதது என்று நம்மை நாமே நிதானித்து, ஆராய்ந்து பார்க்க உதவி செய்கிறது. மேலும், நம்முடைய சுயநலம், உலகப்பிரகாரமான விண்ணப்பங்களை வடிகட்ட உதவி செய்கிறது.

(Dr. Peter Masters has been Minister of the Metropolitan Tabernacle in central London since 1970, and has authored many books.)

No Response to “ஏன் தேவன் நம்முடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்க தாமதிக்கிறார்? – Dr.பீட்டர் மாஸ்டர்ஸ்.”

Leave a Comment