“Oh love the Lord all ye his saints.” — Psalm 31:23

Published January 31, 2023 by adming in Pastor's Blog

“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்.” சங்கீதம் 31:23

யேகோவா கடவுளை அன்பு கூறுங்கள் என்று இவ்விதமாக வசனம் கூறுகிறது. பிதாவாகிய கடவுள் உன்னுடைய அன்பை அவர் எதிபார்க்கிறவராயும், உன்னுடைய இருதயப்பூர்வமான அன்புக்கு பாத்திரராயும் இருக்கிறார். அவர், உன்னை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே தெரிந்து கொண்டார். உன்னை, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்வதற்காகவே, அவர் தம்முடைய சொந்த குமாரனை கொடுத்தார். தெய்வீக தன்மைகொண்ட தத்தெடுப்பினாலே, அவருடைய குடும்பத்தில் ஒருத்தனாய் உன்னை சேர்த்துக்கொண்டார். அவர், “இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி உன்னை மறுபடியும் ஜெநிப்பித்தார்.” உன்னுடைய ஜெபங்கள் அனைத்தும் அவரை நோக்கி இருக்கிறது. அவர் ஒருவர்தான், உன்னுடைய ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தியவர், அவரை உன்னுடைய பிரதிநிதியாக பரலோகத்திற்கு ஏற்றுக்கொண்டார்; ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கான வாசஸ்தலமாகிய பரலோகத்தில், உன்னை தம்முடைய எல்லா ஜனங்களோடும் கூட்டிச் சேர்த்து மீண்டும் அவரை மகிமைப்படுத்துவார். “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்.” குமாரனை நேசி!  தன்னுடைய மக்களுடன் மகிழ்ச்சியாக இருந்தவர், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக உத்தரவாதம் மற்றும் உடன்படிக்கைக்கான சம்பந்தத்தில் நுழைந்தார். அவருடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் நம் ஆத்துமாக்களை மீட்டு, “பாதாளத்தில் இறங்காதபடி” விடுவித்தவர். அவர் மூலமாக நாம் ஜெபிக்கும்படி நம்முடைய மத்தியஸ்தராகவும், நமக்காக ஜெபிக்கிற நம்முடைய பரிந்துரையாளராகவும் இருக்கிறார். அவர் நம்முடைய தலைவர், நம்முடைய கணவர், நம்முடைய ராஜா. அவர் தான், இயேசுவும் கூட, நம்மைபோலவே, சரீரத்தை கொண்டவராய், சரீர இயல்புகளை எடுத்துக்கொண்டார். இப்போது நமக்குத் தம் மனதைக் கொடுத்து, இனிமேலும் நாம் அவருடைய சாயலை அணிந்து மகிமையில் தங்குவோம் என்று வாக்குக் கொடுப்பவர். “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்.” பரிசுத்த ஆவியை நேசியுங்கள்! அவர் நமக்கு வெளிப்படுத்தப்பட்டார், மேலும் நம்மால் “ஆறுதல் கொடுப்பவர்” என்று அறியப்படுகிறார். எவ்வளவு அன்பானவர்!

நாம் பாவங்களில் மரித்தபோது அவர் நம்மை உயிர்ப்பித்திருக்கிறார்; அவர் நமக்கு மனந்திரும்புதல் மற்றும் விசுவாசத்தின் கிருபைகளைக் கொடுத்துள்ளார்; அவர் நம்மைப் பரிசுத்தமாக்கி, இதுவரை பாதுகாத்து வைத்திருக்கிறார். அவர் கிறிஸ்துவின் காரியங்களை எடுத்து நமக்குக் காட்டினார்; அவர் நம்முடைய ஏழை இதயங்களில் குடியிருக்கிறார்; அவர் நமக்கு ஆறுதல் அளிப்பவராகவும், பயிற்றுவிப்பவராகவும், தினசரி ஆசானாகவும் இருந்து வருகிறார்; பாவத்தின் தீமையை நாம் இன்னும் உணராதபோது, ​​பாவத்தின் அகோரத்தை குறித்து உணர்த்தினவர். மேலும் அவர் மட்டுமே நம்முடைய இருதயங்களையும், ஆத்துமாக்களையும் இயற்கைக்கு மேலான சித்தம் மற்றும் அவருக்கே முழுமையாக வாழும்படியாகச் செய்கிறார். பரிசுத்த ஆவியானவராலேயே நாம் மறுபடியும் பிறந்து புதிய சிருஷ்டிப்பில் பங்கு பெறுகிறோம். அதே ஆவியானவராலே நாம் இறுதியில் மகிமையின் மேல் மகிமை அடைந்து நம் ஆண்டவரின் சாயலாக மாற்றப்படுகிறோம். “கர்த்தருடைய பரிசுத்தவான்களெல்லாரும் அவரிடத்தில் அன்புகூருங்கள்.” ஒரு குருட்டு உலகம் அதன் கடவுளின் அழகைக் காணவில்லை, எனவே அவரை நேசிக்கவில்லை என்றால், ஓ பரிசுத்தவான்களே, உன்னுடைய ஆண்டவரை நேசி. உன்னதமானவரின் எதிரிகள் வேறு தெய்வங்களை நிறுவி, அவர்கள் முன் பணிந்து, கோணலான வழிகளை விட்டு, தங்கள் பொய் தெய்வங்களைப் பின்பற்றி வேசித்தனம் செய்தால், அவருடைய பரிசுத்தவான்களாகிய நீங்கள் உறுதியாக நின்று உங்கள் யெகோவாவிடம் திரும்பி, இன்னும் அதிகமாய் அவரை நேசியுங்கள். வெறுமனே அவருக்கு சேவை செய்யாமல், அவரை அன்பு கூறுங்கள். இஸ்ரவேல் வீட்டாரே! அவருடைய அடிமைகளாக இருக்காதீர்கள்; புறஜாதிகள், அவர்களுடைய கடவுளை ஒருவித பயமும், நடுக்கமும் கொண்டு சேவித்தது போல, சேவிக்காமல், “பரிசுத்தவான்களே, கர்த்தரிடத்தில் அன்புகூருங்கள்.” பார்வோனுக்கு கீழாக வாழும் மக்கள், சாட்டையால் அடிக்கப்பட்டு வேலை செய்தார்கள். அப்படியில்லாமல், உங்கள் அன்பான பிதாவுக்கு செய்யும் கடமையுள்ள பிள்ளைகளாக இருங்கள். அவரை சேவியுங்கள், நான் சொல்கிறேன், அவருக்கு முன்பாக மகிழுங்கள். அன்பு உங்கள் சேவைகளை இனிமையாக்கட்டும்; உங்கள் இருதயங்களை அவருக்குக் கொடுங்கள்; உங்கள் இருதயத்தின் அனைத்து விருப்பங்களுக்கும் மேலாக அவரை உயர்ந்த பொருளாக ஆக்குங்கள். நீங்கள் அவரால் வாழ்வது போல் அவருக்கு என்றும் வாழுங்கள்.

இயேசுவின் மீது அன்பு கூறுவதிலுள்ள மேன்மைகள்.

“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்.” அன்பினால் வரும் மேன்மைகள் நிறைய உண்டு. அன்பு, நறுமணத்தை வீசும் தைலம். இதைவிட மேலாக, குணப்படுத்தும் அம்சத்தை கொண்டுள்ளது. அன்பு அற்புதமான வல்லமை கொண்டது. பார்க்கிறதிற்கு சிறிதானாலும், அது ஒரு மனிதனை பலவானாக்குகிறது. சகோதரனே, கிறிஸ்துவினால் கொண்ட அன்பினால் வரும் மேன்மைகளில் முதலாவது, அது உன்னை கிறிஸ்துவுக்காக துன்பங்களை மகிழ்ச்சியுடன் தாங்கும்படி செய்கிறது. கத்தோலிக்க மத தலைவர்களால், உயிருடன் எரித்து கொல்லப்பட்ட, கிறிஸ்துவுக்காக மரித்த முதன்மையானவர்களில் ஒருவரான லம்பேர்ட்டை (Lambert) நினைவுகூற வேண்டும். அவர் கடுமையாக கொடுமைப்படுத்தப்பட்டார். மரத்திலே கட்டப்பட்டு, எரித்து கொன்றனர். அவ்வாறு நெருப்பு பற்ற வைத்து, அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்த வேளையில், அவ்விதமான கொடிய வேதனையில் மத்தியிலும், “இயேசுயல்லாமல் வேறொருவருமில்லை; இயேசுயல்லாமல் வேறொருவருமில்லை” என்று கூறிக்கொண்டே தன் ஜீவனை விட்டார். ஒருவேளை, நீ கிறிஸ்துவுக்கு பணியாற்றுவதினால், சிரமத்தை சந்திக்கலாம். ஆனால் நீ அவரை நேசித்துப்பார். அப்பொழுது அச்சிரமம் உனக்கு இன்னும் இலகுவாக மாறிவிடும். உண்மையிலேயே, அவருக்காக பாடுபடுவதிலும், சந்தோஷத்தை காணுவாய். அன்பு உபத்திரவத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், மேலும், அவருக்கு பணியாற்றுவதை மகிழ்ச்சியாக மாற்றுகிறது. இன்றைக்கு அநேகர், சபைக்கு தங்களை அர்ப்பணித்து, பணியாற்ற முன்வராமல், மற்றவர்கள் மீது அப்பணியை சுமத்திவிட்டு செல்ல பார்க்கின்றனர். காரணம், கிறிஸ்துவின் மீது வைத்துள்ள அன்பின் குறைவே ஆகும்.

உன்னுடைய இருதயம் கிறிஸ்துவின் மீது ஆழமான அன்பினால் நிறையட்டும். அப்பொழுது, நீ அவருக்காக செய்கிற பணியும் அற்புதமாக இருக்கும். மொரேவியன் மிஷினெரிகள் எவ்வளவாய் கிறிஸ்துவுக்காக தங்களையே அர்பணித்து வாழ்ந்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் தென்னிந்திய தீவுகளில் ஒன்றான பகுதிகளில், அடிமைகளாக வாழும் கறுப்பின மக்கள் மத்தியில், சுவிசேஷத்தை பிரசங்கிக்க தீர்மானித்தனர். அவ்விடத்திற்குள் செல்வதற்கு உண்டான நிபந்தனை என்னவென்றால், அதாவது, அங்கு செல்லுகிற மக்கள், அவர்களைப்போலவே அடிமைகளாக மாற வேண்டும் என்ற நிபந்தனையை கேட்டனர். ஆகவே, இரண்டு மிஷினரிமார்கள் அங்கு போக தீர்மானித்து, அவர்களைப்போலவே அடிமைகளாக மாறினர். அடிமைத்தனத்தில் வாழும் அம்மக்கள் மத்தியில் சுவிசேஷம் சொல்லுவதற்காகவே, அவர்களும் பல வேதனைகள் அனுபவிக்கவும், பல சாட்டையடிகளுக்குள்ளாக்கப்படவும் காணப்பட்டனர். ஆப்பிரிக்காவில், தொழு நோயாளிகள் நிறைந்த இடம், அவர்கள் மாத்திரம் இருக்கும் இடம். சொல்லப்போனால், நாற்றத்துடன் கூடிய வியாதி கொண்டவர்களாய், அழுகிய சரீரத்துடன் கொண்ட மக்கள். அப்படிப்பட்ட மக்கள் மத்தியிலும், அந்த இரண்டு மிஷினரிகள், அங்கு போனால், உயிரோடு திரும்ப வர முடியாது என்றும், அவர்களும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தும், அவர்களுக்குள் சென்றனர். மொரேவிய மிஷினரிகளின் அன்பை பாருங்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனின் அன்பும் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதற்கு இது நல்ல ஒரு முன்மாதிரி. நாம் இயேசுவுக்காக எதையும் செய்ய ஆயத்தமாய் இருக்கிறோமா? அவர், நான் உயிரோடு இருப்பதை காட்டிலும், மரிப்பத்தின் மூலம் அவர் மகிமைப்படுவதற்கு என்னை பயன்படுத்துவாரென்றால், மரிப்பதற்கும் நான் ஆயத்தமாய் இருக்கிறேனா? செல்வ செழிப்போடு வாழ்வதற்கு பதிலாக, நான் ஏழ்மையில் வாழுவதின் மூலம் மகிமைப்படுவாரென்றால், ஏழ்மையாக இருக்க ஆயத்தமாய் இருக்கிறேனா? நான் சுகத்துடன் வாழ்வதற்கு பதிலாக, சரீரத்தில் வியாதியுடனும், பல உபத்திரவங்களுடனும் கடந்து போவதின் மூலம் அவர் மகிமைப்படுவாறென்றால், அதற்கும் நான் ஆயத்தமாய் இருக்கிறேனா? இயேசுவானவர்தாமே, தன்னுடைய பிதாவுக்கு முற்றிலுமாய் கீழ்படிந்தது போல, நானும், அவருடைய கரத்துக்கு முற்றிலுமாய் கீழ்படிந்து என்றென்றுமாய் வாழுவேன். இயேசுவின் மீதுள்ள அன்பு அவருக்கென்று செய்யும் அனைத்து ஊழியமும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும்.

கிறிஸ்துவின் மீதுள்ள அன்பு, அவருக்கு கீழ்படியும் கீழ்படிதலும் இனிமையாக இருக்கும். அவர் மீதுள்ள அன்பு, அவருக்கு விரைவாக பணியாற்ற உதவுகிறது. எவர்மீதாவது நாம் அன்பு கொண்டிருப்போம் என்றால், அவருக்காக எதையும் செய்யாமல் இருப்போமா? கிறிஸ்துவின் மீது நாம் அன்பு செலுத்துவோம் என்றால், நாம் எதையும் யோசிக்காமல், சுயத்தை ஆலோசிக்காமல், எவ்வளவாய் அவருக்கு பணிசெய்ய ஒப்புக்கொடுக்க வேண்டும். “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்” என்ற கட்டளையை நாம் மனதில் எப்பொழுதும் வைத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவின் மீதுள்ள அன்பு, அவரோடு கொண்டுள்ள ஐக்கியம் இனிமையானதாக இருக்கும். நாம் அன்பு கொண்டிருக்கும் நண்பர்களோடு பேசும்போது எவ்வளவு இனிமையானதாக இருக்கிறது. நான் பாவிகளோடு உயர்வான ஸ்தலத்தில் உட்காருவதை காட்டிலும், இயேசுவோடு தாழ்வான இடத்தில் உட்காருவதையே விரும்புவேன். மார்டின் லூதர் இவ்விதமாக சொல்லுவதுண்டு, “நான் சீசர் மன்னனோடு நிற்பதை காட்டிலும், இயேசுவண்டை வீழ்ந்துகிடப்பதையே விரும்புவேன்.” ஒருமுறை கிறிஸ்துவை நேசித்தால், நீங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதில் திருப்தி அடைய மாட்டீர்கள். நண்பனே, நீ கிறிஸ்துவுடன் ஐக்கியம் கொண்டு எவ்வளவு காலம் ஆகிறது? இந்த கேள்வியை அடிக்கடி உன்னை நீயே கேட்டுக்கொள். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நீ ஒரு விசுவாசி, உன்னுடைய விசுவாசம் கிறிஸ்துவில் உள்ளது; உன் எஜமானனைப் பார்த்து எத்தனை நாளாகிறது? நீ அவருடன் எவ்வளவு நேரம் பேசினாய்? அவர் உன்னிடம் பேசி எவ்வளவு நேரம் ஆகிறது? இந்தக் கேள்வியை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள் என்று நான் சொல்கிறேன், ஒவ்வொரு மனிதனும் இதற்கு பதிலளிக்கட்டும். சில கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் மாத கணக்காய் பழகாமல் இருப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன், ஏன், வருடங்களாக கூட பழகாமல் இருக்கலாம். நீ எவ்விதமான கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்? வருடம் முழுவதும் கணவனின் புன்னகையை விரும்பாத அந்த மனைவியினிடத்தில் அன்பு எங்கே காணப்பட முடியும்? ஒரே வீட்டில், பேசாமல் வாழக்கூடிய இரு நண்பர்களிடையே அதிக பாசம் இருக்குமா? ஓ! எனக்கு அருமையான சகோதரனே, சகோதரியே, நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ளாமல் என்ன சந்தோஷத்தை பார்க்க முடியும்? கிறிஸ்து ஒரு விசுவாசிக்கு விலையேற பெற்றவராய் இருக்கிறார். கிறிஸ்துவும், விசுவாசியும் இரண்டு (Turtle Dove) புறாக்களை போன்றவர்கள். ஒன்றோடொன்று ஐக்கியப்பட்டாலொழிய அவைகளால் வாழ முடியாது. அதினுடைய துணை இல்லையென்றால், மற்ற எந்த புறாவை கொண்டும் ஐக்கியப்படுத்த முடியாது, திருப்திபடுத்த முடியாது. அது, தான் மரிக்கும் வரை, தன் துணைக்காக ஏங்கி தவித்து கொண்டிருக்கும் தனி புறாவாகத்தான் இருக்கும். அவ்வண்ணமே, ஒரு கிறிஸ்தவனிடமிருந்து, இயேசுவை எடுத்துவிட்டால், அவனால் நிம்மதியாக வாழவே முடியாது. அவனை ஆறுதல் படுத்த எத்தனை பேர் துணையாக வந்தாலும், அவனால் வாழவே முடியாது. நாமும் அந்த புறாவை போல, கிறிஸ்துவை முழு இருதயத்தோடு பற்றிக்கொள்வோம்.

கடைசியாக, கிறிஸ்துவின் மீதான அன்பு, அவரில் வைத்திருக்கும் நம்பிக்கையை எளிதாக்கும். கிறிஸ்துவின் மீதான அன்பு, நம்பிக்கையை எளிதாக்கும் என்று நான் சொல்கிறேன். அன்பானது எந்த சூழ்நிலையிலும் நம்பும். ஒரு தாயானவள், தன் குழந்தையை வைத்துக்கொண்டு, வீடு திரும்புகிறாள். அவள் வருகிற வழியோ வனப்பகுதி, ஒரு பக்கம் காட்டு ஓநாய்களின் சத்தம், அபாயகரமான சூழ்நிலை. இதன் மத்தியிலும், அந்த குழந்தை தன் தாயின் மீதுள்ள பாசத்தினால், எதையும் பொருட்படுத்தாமல், எந்த பயமும் இல்லாமல், தன் தாயின் மீது முழுமையாய் நம்பி, சந்தோஷமாய் வரும். ஆம், அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கு நம்பிக்கையையும் இருக்கும். கிறிஸ்துவை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? அவரை இன்னும் அதிகமாக நேசி, அது உனக்கு எளிதாக இருக்கும். அனைத்தும் நன்மைக்காகவே நிகழ்கிறது என்று நினைப்பது உனக்கு கடினமாக இருக்கிறதா? அவரை அதிகமாய் நேசி. அவர் என்னை அடித்தாலும், கடிந்துக்கொண்டாலும், அக்கோபம் அன்பினிமித்தமாகவே. ஆம், “அவர் என்னை கொன்றுபோட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்.” என்று சொல்லுவாய்.

எனவே, சகோதரர்களே, கிறிஸ்துவை நேசிப்பதற்கு உங்களுக்குப் பல காரணங்களை நான் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன். உங்களில் எவரேனும் அவரை ஒருபோதும் நம்பாதவர்களாய் இருப்பீர்களென்றால், நான் அவரை நேசிக்கிறேன் என்று சொல்ல முடியாது; முதலில் அவரை நம்புங்கள், பிறகு நீங்கள் அவரை நேசிப்பீர்கள். உங்கள் ஆத்துமாவை அவர் கைகளில் கொடுங்கள். உங்கள் சுயநீதியைச் சாராமல், சிலுவையில் இரத்தம் சிந்திய கிறிஸ்துவிடம் ஓடிப்போய், அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டு, அவருடைய நீதியை அணிந்துகொள்ளும்போது, ​​நீங்கள் அவரில் அன்புகூருவீர்கள்.

(Excerpts from) Constraining Love!
June 3, 1860, by Charles H Spurgeon

No Response to ““Oh love the Lord all ye his saints.” — Psalm 31:23”

Leave a Comment