தேவனண்டை கிட்டி சேர உதவும் ஐந்து பெரிதான சிலாக்கியங்கள் – சி .எச். ஸ்பர்ஜன். Five Major merits that helps to draw near to God – C.H.Spurgeon.

Published November 30, 2023 by adming in Pastor's Blog

ஆண்டவரை அறிந்த எனக்கு அருமையானவர்களே! அவரண்டை கிட்டி வரும்படி உங்களை வேண்டுகிறேன். தைரியத்துடன் அவரண்டை கிட்டி சேர சந்தோஷப்படுங்கள். மற்றவர்களுக்காக, ஜெபிக்கும்படியான ஜெபத்தில், இருக்கும் சிலாக்கியம், அவரிடத்திலிருந்து தூரமாய் அல்ல, அவருக்கு அருகில், நெருங்கி வருவதே ஆகும். ஆபிரகாம், அவ்விதமாகத்தான், அவரண்டை, நெருங்கி, சேர்ந்து, சோதோம், கொமொராவுக்காக கெஞ்சிப் பிராத்தித்தான். பரிசுத்த ஆவியான கடவுள் தாமே, அவரண்டை கிட்டி சேர, நமக்கு உதவி செய்வாராக. அவரண்டை கிட்டி சேருவதற்கு உதவியாக, பின்வரும், பெரிதான ஐந்து சிலாக்கியங்களை நாம் பார்க்கலாம்.

முதலாவது, நாம் உண்மையாகவே எவ்வளவு அவருக்கு அருகாமை உள்ளவர்கள். ஆம், இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால், நம்முடைய ஒவ்வொரு பாவத்திலிருந்து, கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். உச்சதலை முதல் உள்ளங்கால் மட்டும்,  இம்மானுவேலாகிய, அவருடைய நீதியினால், பாவமற, கழுவப்பட்டவர்களாய் உள்ளோம். நாம், அன்புக்குரிய அவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம்! ஆம், இந்த நேரத்தில் நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாகவும், அவருடைய சரீரத்தின் அங்கங்களாய் இருக்கிறோம். நாம் எப்படி அருகில் இருக்க முடியும்? கிறிஸ்துவானவர் தேவனுக்கு அருகில் எவ்வளவாய்  இருக்கிறார்? அவ்வண்ணமாகவே நாமும் இருக்கிறோம். ஆக, அவரண்டை வாருங்கள். உங்கள் தனிப்பட்ட ஜெபங்களில், நீங்கள் உங்கள் உடன்படிக்கைப் பிரதிநிதிக்கு அருகில் இருக்கிறீர்கள். இயேசுவானவர், தெய்வீக தன்மையும், மனித தன்மையும் இணைந்தவராய், ஆம், சிறப்பான மற்றும் இணையற்ற இவ்விதமான உறவை இவ்வுலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது. “ஆதலால், தேவ தூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.” (எபி 2:16)

“எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்கு பிதாவாக இருப்பேன், அவர் எனக்கு குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?” (எபி 1:5) அவர் இதை முதலும், முக்கியமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் கூறினார்!  அடுத்ததாக, தம்முடைய சத்திய வார்த்தையினாலும், சுய சித்தத்தினாலும், மறுபடியும் ஜெநிபிக்கபட்ட தம்முடைய பிள்ளைகள் ஒவ்வொருவரிடத்திலும் இதை கூறுகிறார். ஆகவே, வாருங்கள், அவரண்டை வாருங்கள், ஓ! தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் வாருங்கள், அவரண்டை வாருங்கள். நீங்கள் அவருக்கு அருகானவர்கள். நீங்கள், உங்கள் மகனுக்குரிய ஸ்தானத்திலும், உங்கள் பிரதிநிதி உங்கள் சார்பாக நிற்கும் இடத்தில் நில்லுங்கள். மாம்சத்தின் அடிமைகளும், நியாயப்பிரமாணத்தின் அடிமைகளும் சீனாய் மலையிலிருந்து பேசும் கர்த்தரிடத்திலிருந்து தூரமாய் நிற்கட்டும். ஆனால் நம்மை பொறுத்தவரை, அவரண்டை கிட்டி சேருவது, நமக்கு பேரானந்தம். அன்பின் குரல் கல்வாரியிலிருந்து நம்மை அழைக்கிறது, அவருக்கு மிக அருகில் வருவதில் பெருத்த சந்தோஷம்.

இரண்டாவதாக, அவரண்டை கிட்டி சேருவதில் உள்ள பெரிதான ஸ்லாக்கியம், நீங்கள் உங்கள் பிதாவண்டை வருகிறீர்கள். “பிதா தாமே உங்களை சிநேகிக்கிறார்.” (யோவான் 16:27) என்ற நம் ஆண்டவருடைய வார்த்தை எவ்வளவு ஆசீர்வாதமான வார்த்தையாக இருக்கிறது. ஓ! அவர், எவ்வளவு மேன்மையும், மகத்துவமான கடவுள். அவர், எவ்வளவு பயங்கரமானவராக இருந்தாலும், அவர் நம்முடைய பிதாவாய் இருக்கிறார். நிச்சயமாக என் பூமிக்குரிய தகப்பனார், எனக்கு நெருக்கமாக இருப்பதினால், நான் அவரிடம் அன்பான பரிச்சயத்துடன் வருவது போல, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் ஜீவனுள்ள நம்பிக்கைக்கு என்னை உயிர்பித்த என் பிதாவண்டை கிட்டி சேருவேன். ஆம், அவரை “அப்பா” “பிதாவே”  என்று கூப்பிடுவேன். அவர், என் கூப்பிடுதலை ஒருபோதும் அலட்சியப்படுத்தமாட்டார். அவர் எனக்கு புத்திர சுவிகாரத்தின் ஆவியை கொடுக்கவில்லையா? கொடுத்த அவர் எப்படி அலட்சியப்படுத்துவார்? ஆக, வாருங்கள். உம்முடைய பிதாவாகிய அவரண்டை கிட்டி சேர்ந்து, அவரிடத்தில், பேசுங்கள். ஓ! தேவப்பிள்ளையே, நீ ஒரு அந்நியனிடத்தில் பேசவில்லை. நீ எதிராளியிடத்தில் வாக்குவாதம் பண்ணவரவில்லை. உனக்கு பிடித்தம் இல்லாத நபரிடமிருந்து, ஆசீர்வாதம் பெற வரவில்லை. அவர், நீ பேசுகிற உன்னுடைய பிதாவானவர். அவருக்கு அருகில் வா. அவரண்டை வந்து, அவரை நோக்கி ஜெபம் பண்ணு, என்று உன்னை வேண்டிக்கொள்கிறேன்.

மூன்றாவதாக, தேவனுடைய மகிமைக்காகவும், அவருடைய சபையின் வளர்ச்சிக்காகவும், நாம் வேண்டுகிற வேண்டுதல், நம்முடைய விருப்பமானது, நம்முடைய இருதயத்தில் எழுதப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் விருப்பம். இப்பொழுது, அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, ஜெபத்தை செய்ய தூண்டுவாறென்றால், அவர் கடவுளின் மனதை அறிவார். தேவனுடைய சித்தத்தின்படி, அவர் நமக்காக, பரிந்து பேசுகிராறென்றால், நாம், நம்முடைய வாஞ்சைகளை வெளிப்படுத்த எந்த தயக்கமும் தேவையில்லை. நம்முடைய வாஞ்சைகள், நித்தியம் என்ற நோக்கத்தின் நிழலாய் இருக்கிறது. உண்மையான ஜெபம், மனிதனை ஆசீர்வதிக்க வேண்டும் என்று, தேவனுடைய நினைவாய் இருக்கிறது. இதுவே இரக்கத்தின் அறிவிப்பாய் இருக்கிறது. ஓ! தேவனுடைய பிள்ளையே, அவரிடம் சென்று மன்றாடு. ஏனென்றால், தேவ ஆவியானவர், உன்னில் வேண்டுதல் செய்கிறவராய் இருக்கிறார். அவர் உன்னில் பேசுகிறதை, பிதாவாகிய தேவனிடத்தில் வந்து சொல்லு. அவர்தாமே, தேவனுடைய சித்தத்தின்படி, உனக்காக, உன்னுடைய பலவீனங்களில், வேண்டுதல் செய்கிறவராய் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர், தூண்டுதல் செய்யும்போது, தயக்கப்பட அவசியம் ஏன்? அவர் நம்மை தட்டி எழுப்பும்போது, நாம் கட்டாயம் பேசியே ஆக வேண்டும்.

நான்காவதாக, நாம் கேட்பதை நினைவில் வைக்க வேண்டும். இப்பொழுது, நாம் அவருடைய சித்தத்தின்படி, தேவனுடைய ராஜ்யத்தை குறித்து மன்றாடப் போகிறோம் என்றால், நாம், அவருடைய சொந்த எண்ணத்தின்படி, இந்த விஷயத்தில், நாம் தேவனுடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று அர்த்தம். பாவிகள், மனந்திரும்ப வேண்டியது, கடவுளுடைய மகிமை இல்லையென்றால், நாம் அதற்காக ஜெபிக்க மாட்டோம். ஆயிரக்கணக்கான பாவிகள் கிறிஸ்துவிடம் மனம்திரும்புவதைக் காண விரும்புகிறோம். இந்தக் கண்ணோட்டத்தில்தான் தேவனுடைய  எல்லையற்ற இரக்கம், ஞானம், வல்லமை, அன்பு ஆகியவை அவர்களிடம் வெளிப்படும், அதனால், தேவன் மகிமைப்படுவார்.

 உண்மையாகவே, நம்முடைய இருதயத்தில் கொண்டிருக்கும் தேவனுடைய சபையை குறித்ததான செழிப்பு, அத்தகைய செழிப்பு, கடவுளை மகிமைப்படுத்தாது என்று நினைத்தால், நாம் ஜெபிக்க மாட்டோம். நம்முடைய வாஞ்சையானது, தேவனுடைய சத்தியம் மேலோங்கி நிற்க வேண்டும். தேவனுடைய திட்டத்தின்படியேயல்லாமல், நான் விசுவாசிப்பது, நீங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும், தங்கள் இருதயத்தை, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுடைய இருதயம், தூய்மையானதா என்றும், அல்பாவும், ஒமேகாவுமான, தேவனுடைய மகிமையை மட்டுமே கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவனுடைய சத்தியம், தேவனுடைய ராஜ்யம், தேவனுடைய மகிமை உயர்த்தப்படவே நாம் விரும்புகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில், நாம் தைரியமாக அவரண்டை கிட்டி சேரலாமே. நம்மிடம், ராஜாவின் கேட்கிற காது மாத்திரமல்ல, அவருடைய இருதயத்தையும் கொண்டிருப்பதினால், நாம் நம் வாயை விரிவாய் திறந்து, அவரை நோக்கி ஜெபிப்போம்.  இது தேவனுடைய சித்தமா என்று நமக்கு சந்தேகம் இருக்குமானால், “ என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே செய்வேன்” என்று சொல்வதை தாண்டி நாம் சென்றுவிடக்கூடாது. அதுவே, சந்தேகத்திற்கு, இடமில்லை என்றால், பரிசுத்த ஆர்வத்துடன், நாம் நம்முடைய ஜெபத்தில் முன்னேறி செல்லலாம்.

ஐந்தாவதாக, கடைசியாக, கர்த்தர், நாம், மன்றாட்டு ஜெபம் ஏறெடுப்பதை விருப்பம் கொள்கிறார். அவர், ஜெபம் இல்லாமல், உடன்படிக்கை ஆசீர்வாதங்களை கொடுத்திருக்கலாம். ஆனாலும், தம்முடைய பிள்ளைகள் ஜெபிக்க வேண்டும் என்று அவர் ஏன் விரும்புகிறார்? ஜெபத்தினால் மாத்திரமே, தம்முடைய ஜெபிக்கிற பிள்ளைகளை அவர் ஆசீர்வதிக்கவே, விருப்பம் கொள்கிறவராய் இருப்பதினால்,  தேவன் தம்முடைய சபைக்கு, அனேக ஆசீர்வாதங்களை கொடுத்திருக்கிறார். நம்முடைய சொந்த சபையே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆம், நாம் சபையாய் ஜெபித்த ஜெபங்கள் வீணாய் போகவில்லை, வெறுமையாய் திரும்பி வரவில்லை. நம்முடைய ஜெபம், சிங்கத்தை விட, தைரியமாய் இருந்தது, கழுகை விட வேகமானதாகவும், எதிராளிகள் அனைத்தையும் தூக்கியெறிந்து போட்டதாய் இருந்தது.

ஆம், இந்த நாள் மட்டும், நாம் ஜெபத்தினால் மாத்திரமே வாழ்கிறோம். ஜெபத்தினால் மாத்திரமே, தேவனுடைய சபை வெற்றி கண்டுள்ளது. சபை வரலாற்றை, நாம் பார்ப்போம் என்றால், ஜெபத்தை கேட்கும் கடவுளை போற்றுகிறதாய் இருக்கிறது. ஆகவே, எனக்கு அருமையான சகோதரர்களே! வாருங்கள், தேவன் நம்மை ஜெபிக்க அழைக்கும்போது, ஆம் நம்முடைய ஜெபத்தில், அவர் பிரியம் கொள்ளும்போது, நாம் சோர்ந்து போகாமல், நம்முடைய வேண்டுதலை பெரிதாக்கி, இன்னுமாய் ஊக்கமாய் ஜெபிப்போம். ஓ! அவருடைய இரக்கத்தை நாட, இப்பொழுதும், இந்த நாளிலும், இனிமேலும், அவரண்டை தைரியமாய் கிட்டி சேரக்கடவோம்.

This excerpt has been taken from SOLEMN PLEADINGS FOR REVIVAL by C.H.Spurgeon, delivered on JANUARY 3, 1875,

No Response to “தேவனண்டை கிட்டி சேர உதவும் ஐந்து பெரிதான சிலாக்கியங்கள் – சி .எச். ஸ்பர்ஜன். Five Major merits that helps to draw near to God – C.H.Spurgeon.”

Leave a Comment