யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? – டஸ்டின் பென்ஜ். Who Was David Brainerd? – Dustin Benge.

Published October 28, 2022 by adming in Pastor's Blog

யார் அந்த டேவிட் பிரைனெர்ட்?

1747 ஆம் ஆண்டு ஒரு வசந்த நாளில், தனது குதிரையின் மீது ஏறி, பலவீனமான இருபத்தி ஒன்பது வயதான டேவிட் பிரைனெர்ட் (1718-1747) நியூ இங்கிலாந்து போதகர் ஜொனதன் எட்வர்ட்ஸின் நார்தாம்டன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இந்த நாளுக்கு முன்பு, பிரைனெர்டும் எட்வர்ட்ஸும் ஒருவருக்கொருவர் கேள்விபட்டிருந்தும், சந்திக்காதவர்களாய் இருந்தனர். இருப்பினும், 1747 ஆம் ஆண்டு கோடை காலம், அமெரிக்க சுவிசேஷத்தின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க மிஷனரி வாழ்க்கை வரலாற்றில் உச்சக்கட்டமாக, இந்த இரு ஆண்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பை வளர்த்தது.

குழந்தைபருவம் மற்றும் விவரிக்க முடியாத மகிமை

ஏப்ரல் 20, 1718 ஈஸ்டர் ஞாயிறு அன்று கனெக்டிகட்டில் உள்ள ஹடாமில், டேவிட் பிரைனெர்ட்,  ஏசேக்கியா மற்றும் டொரத்தி பிரைனெர்டுக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஒருவர். பிரைனெர்ட் குடும்பமானது, பக்தி வைராக்கியத்தின் வழியில் வந்த குடும்பம்.  டேவிட் பிரைனெர்டின் தகப்பனான எசேக்கியா, “மிகப்பெரிய தனிப்பட்ட கண்ணியமும் சுயக்கட்டுப்பாடும் கொண்டவர் . . . மற்றும் கிறிஸ்தவ வாழ்வில் மிகுந்த கவனமும், விழிப்பும் கொண்டவர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பெரும்பாலான நியூ இங்கிலாந்து குடும்பங்களில் பியூரிட்டன் (தூய்மைவாதிகள்) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், டேவிட் பிரைனெர்ட் மற்றும் அவரது எட்டு உடன்பிறப்புகள் தினசரி குடும்ப ஜெபத்திலும், சங்கீதம் பாடுவதிலும் கலந்துகொள்வார்கள். கூடுதலாக, அவர்கள் ஒவ்வொரு நாளும், அதிகாலையில் எழுந்திருப்பதினால், வீடு மற்றும் பண்ணையைச் சுற்றியுள்ள பல வேலைகள் காத்திருக்கும்.

டேவிட் பிரைனெர்ட், தான் வெறும் ஒன்பது வயது மாத்திரம் இருக்கும்போது, அவரது தந்தையை இழந்தார். அவரது பதினான்காவது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அவரது தாயார் இறந்தார், இது இளம் டேவிட்டை நம்பமுடியாத அளவிற்கு வருத்தமடையச் செய்தது. அவரது பலபக்கங்கள் அடங்கிய நாட்குறிப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் இருந்து அவரது வாழ்க்கையின் இறுதி வரை, டேவிட் பிரைனெர்ட் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆவிக்குரிய இருளுக்கு இடையில் உள்ள நிலையை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்துடன் வாழும் இரு வகைகளை அனுபவித்தார். அவரது தாயாரின் இறப்புக்கு பிறகு, அவர், தன் அக்காவுடன் வாழ்வதற்கு, ஈஸ்ட் ஹெடம் என்ற நகருக்கு நகர்ந்தார். அவர் பத்தொன்பது வயதை எட்டியபோது, ​​அவர் ஒரு பண்ணையை குடும்ப வழி சொத்தாக பெற்றார், ஆனால் ஒரே ஒரு வருட விவசாயத்திற்குப் பிறகு, அவர் கிறிஸ்தவ ஊழியத்தில் நுழைய தயாராவதற்கு கல்வி முக்கியமானது என்று முடிவு செய்தார். அவர், மறுபடியும் ஈஸ்ட் ஹெடம் நகருக்கு திரும்பினார். ஆனால், மனந்திரும்பாத இருதயத்தோடேயே இருந்தார். இருப்பினும், கர்த்தருடைய நாளாகிய, ஒரு ஓய்வுநாள் ஜூலை 12, 1739 அன்று, கடவுளின் இறையாண்மை மற்றும் மூல பாவத்தின் கோட்பாடுகளுக்கு எதிரான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பிரைனெர்ட் பின்வருமாறு எழுதினார்:

   “நான் நம்புகிற கடவுள், அவரை உயர்த்துவதற்கும், அவரை அரியணையில் அமர்த்துவதற்கும், “முதலில் அவருடைய ராஜ்யத்தைத் தேடுவதற்கும்”, அதாவது பிரதானமாகவும் இறுதியில் பிரபஞ்சத்தின் ராஜாவாகவும் இறையாண்மையாகவும் அவருடைய மரியாதை மற்றும் மகிமையைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்ற இருதயப்பூர்வமான ஆசைக்கு என்னைக் கொண்டுவந்தார். , இதுவே இயேசுவானவர் காட்டும் பக்தியின் அடித்தளம். . . நான் ஒரு புதிய உலகில் என்னை உணர்ந்தேன்.”

டேவிட் பிரைனெர்ட், சொல்லிமுடியாத, பேரின்பத்தை தன் ஆத்துமாவில் உணர்ந்தார். அவருக்கு வயது இருபத்தி ஒன்று ஆகும்.

யேழ் கல்லூரி மற்றும் எழுப்புதல்.

1739 ஆம் ஆண்டு, இரட்சிப்ப்படைந்த இரண்டே மாதங்களில், பிரைனெர்ட், கனக்டிகட், நியூ ஹவென் என்ற இடத்தில் உள்ள யேழ் கல்லூரிக்கு படிக்க சென்றார். முதலாம் ஆண்டிலேயே தட்டமை நோய் தொற்றிக்கொண்டதால், பல வாரங்களுக்கு அவர் வீட்டிலேயே இருக்க நேரிட்டது. இரண்டாம் ஆண்டில், அவருக்கு காச நோயின் முதல் அறிகுறியாக, அவர் எச்சில் துப்பும்போது, இரத்தமும் சேர்ந்து வந்தது. இந்த நோயே, அவருடைய இறப்புக்கு காரணமாய் அமைந்தது.

அவர் 1741 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வந்த, அனல் பறக்கும் பிரசங்கியான, ஜார்ஜ் விட்பீல்ட் மற்றும் நியூஜெர்சி, நியூ பர்ன்ஸ்விக் என்ற இடத்திலிருந்து வந்த, ப்ரிஸ்பிடேரியன் போதகரான  கில்பர்ட் டனன்ட், போன்றோர்களின் மூலம் வந்த எழுப்புதலை அவர் முதலாவதாக அனுபவித்தார். நியூ இங்கிலாந்தில், வெகுவாக பரவிய பெரிய எழுப்புதலில், (Great Awakening) அவர் வைராக்கியமாக தன்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தை காட்டினதினால், நாளடைவில், அவரை “புதிய ஒளி” (New Light) என்று அழைத்தனர். 1741 ஆம் ஆண்டு யேழ் கல்லூரியில், ஜொனாதன் எட்வர்ட்ஸ் ஆற்றிய ஒரு தொடக்க உரையானது, ‘பெரிய எழுப்புதலை’ அதிகளவில் எதிர்த்த ஆசிரியர்களிடமிருந்து மேலும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கொண்டு வந்தது. எட்வர்ட்ஸ் அவர்களோ, ‘பெரிய எழுப்புதலானது,’ கடவுளிடமிருந்து அனுப்பப்பட்டதும், மேலும் அவ்வெழுப்புதலை அனுபவித்த கல்லூரி மாணவர்களுக்கு நம்பகத்தன்மையை அளித்தது என்றும் வாதிட்டார்.

1742ம் ஆண்டு, எழுப்புதலினால் கொண்ட பக்தி வைராக்கியத்தின் விளைவாக, பிரைநெர்ட், ஒரு ஆசிரியரை பற்றி ‘இந்த நாற்காலிக்கு இருக்கும் கிருபையை காட்டிலும், பெரிய கிருபை அவருக்கு ஒன்றும் இல்லை’ என்று கூறிய விமர்சனத்திற்காக, யேழ் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பபட்டார். அவரை சுற்றி அனேக  கருத்துக்கள், விமர்சனங்கள் காணப்பட்டாலும், பிரைனெர்ட், அவருடைய ஆவிக்குரிய முதிர்ச்சியைக் குறித்தும், வளர்ச்சியை குறித்தும் இவ்வாறு எழுதினார்.

“ஒரு நாளை நான் நன்றாக நினைவுகூறுகிறேன் (அது ஜூன்1740 ம் ஆண்டு என்று நினைக்கிறேன்) நான் கல்லூரியிலிருந்து, கணிசமான தூரம், நண்பகல் வேளையில், வயல்வெளிகளில் தனியாக நடந்து சென்றேன், ஜெபத்தில், சொல்ல முடியாத இனிமையையும் கடவுளின் மகிழ்ச்சியையும் கண்டேன். நான் நினைத்தேன், நான் இந்த பாவ உலகில் இன்னும் தொடர்ந்து வாழ்கிறவனாய் இருப்பேனென்றால், அவருடைய மகிமையை கண்டு கொள்வதற்கே. என் ஆத்மா அனைத்து மனிதர்களையும் மிகவும் நேசித்தது, மேலும் நான் அனுபவித்ததை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று மிகவும் ஏங்கியது. இது கொஞ்சம் பரலோகத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றியது.”

அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் மிஷினெறி ஊழியம்

அவரது முறையான கல்வியை முடிக்க முடியாமல், பிரைனெர்ட் தனது ஊழிய அழைப்பை நிறைவேற்ற மற்ற வாய்ப்புகளை நாடினார். பிரசங்கிப்பதற்கான உரிமத்தைப் பெற்ற பிறகு, அவர் நவம்பர் 25, 1742 இல் மிஷனரி பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார். அவர் லாங் தீவில் உள்ள ஒரு சிறிய சபைக்கு அனுப்பப்பட்டார், அடுத்த வசந்த காலத்தில் இது பரந்த நியூ இங்கிலாந்து வனப்பகுதிக்கு ஒரு வாசலாக செயல்பட்டது. 1743 முதல் 1747 வரை, அவர் அமெரிக்க இந்திய பழங்குடியினர் மத்தியில் பணியாற்றினார். 1745 ஆம் ஆண்டில், அவர் நியூ ஜெர்சியில் உள்ள கிராஸ்வீக்சங்கில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

இங்குதான் தேவன், அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பெரிதான எழுப்புதலை ஏற்படுத்தினார், பிரைனெர்டின் வளர்ந்து வரும் சபையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்தனர். நோய், மிகுந்த சிரமம் மற்றும் தனிமை ஆகியவற்றை அனுபவிக்கும் போது, ​​பிரைனெர்ட் தனது ஊழிய பராமரிப்பில் உள்ள அமெரிக்க இந்தியர்கள் மீதான தனது அதீத அன்பைப் பற்றி அடிக்கடி எழுதுவார். வேதத்தின் பிரசங்கம் மற்றும் போதனையின் மூலம் கிறிஸ்துவின் மகிமையை அவர்களுக்குக் காட்ட அவரது இருதயம் ஏங்கியது. கிறிஸ்துவில், அவர்களது இரட்சிப்பு மற்றும் வளர்ச்சிக்காக, அவர் ஜெபத்தில் மணிக்கணக்கில் செலவிட்டார்.

இருப்பினும், நியூ இங்கிலாந்தின் அமெரிக்க இந்திய பழங்குடியினரிடையே அவரது காலம் கடுமையான மனச்சோர்வு மற்றும் நோயுற்ற காலங்களுடன் கலந்தது. அவரது நாட்குறிப்பு, இந்த ஆவிக்குரிய மற்றும் உடல் ரீதியான போர்களை விவரிக்கும் பதிவுகளால் நிரம்பியுள்ளது. இறுதியாக, கடுமையான நோயின் காரணமாக, தனது மிஷனரி முயற்சிகளை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லாதவாராக காணப்பட்டார். பிரைனெர்ட் 1747 இன் தொடக்கத்தில் தனது அமெரிக்க இந்திய நண்பர்களை இறுதியாக சந்தித்தபின்னர் நார்தாம்ப்டனில் உள்ள ஜொனதன் எட்வர்ட்ஸ் வீட்டிற்கு மே 28 ம் நாள் அன்று வந்து சேர்ந்தார். எட்வர்ட்ஸ் அவர்கள் மகளின் கனிவான கவனிப்பின் மத்தியில், பிரைனெர்ட் தனது இருபத்தி ஒன்பது வயதில் அக்டோபர் 9, 1747 அன்று எட்வர்ட்ஸ் வீட்டில் காசநோயால் இறந்தார்.

தாக்கம்

அவரது மரணத்திற்குப் பிறகு, ஜொனதன் எட்வர்ட்ஸ், பிரைனெர்டின் நாட்குறிப்புகளைக் கண்டுபிடித்தார், மேலும் அவை பரந்த கிறிஸ்தவ உலகிற்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும் என்று நம்பினார். 1749 இல், ஒரு அறிமுகத்துடன், எட்வர்ட்ஸ் அவர்கள், ‘போதகர். டேவிட் பிரைனெர்ட் அவர்களின் நாட்குறிப்பேடு மற்றும் வாழ்க்கை’ (The Life and Diary of the Rev. David Brainerd) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். பிரைனெர்டின் நாட்குறிப்புகள் அடங்கிய புத்தகம், மிஷனரிகளான ஹென்றி மார்ட்டின், வில்லியம் கேரி மற்றும் எண்ணற்றோர், பலவீனமான ஆனால் விருப்பமுள்ள இரக்கத்தின் பாத்திரங்கள் மூலம், தேவனால் செயல்படுத்த முடியும் என்பதற்குண்டான ஊக்குவிப்பை அவர்களுக்கு அதிகமாய் கொடுத்தது. குறுகிய வாழ்க்கை என்றாலும், அனைத்து விசுவாசிகள் மத்தியில் டேவிட் பிரைனெர்ட் கடவுளால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாத்திரமாய் நிற்கிறார்.

Dr. Dustin W. Benge is associate professor of biblical spirituality and historical theology at The Southern Baptist Theological Seminary in Louisville, Ky. He is author of several books, including The American PuritansSweetly Set on God, and The Loveliest Place.

Translated with permission. Taken From https://www.ligonier.org/learn/articles/missionary-david-brainerd

No Response to “யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? – டஸ்டின் பென்ஜ். Who Was David Brainerd? – Dustin Benge.”

Leave a Comment