தாழ்மையில்லாத இடத்தில், உண்மையான ஆசீர்வாதம் இல்லை. – Dr. பீட்டர் மாஸ்டர்ஸ்.

Published July 28, 2021 by adming in Pastor's Blog

NO HUMILITY, NO REAL BLESSING – Dr. Peter Masters

“அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்;பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5).

தாழ்மையானது, நம் சபைக்கும், நம்முடைய தனிப்பட்ட வாழ்விற்கும் மிகவும் அவசியமான ஒன்று. நாம், தாழ்மையில் குறைவுபடும்பொழுது, தேவனே நமக்கு எதிராக இருக்கிறார். (தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.) கிரேக்க பதத்தில் பார்க்கும்போது, ஒரு இராணுவ தளபதி தன்னுடைய எதிராளிக்கு எதிராக படையெடுத்து நிற்கும் நிலையை காட்டுகிறது.

ஒரு இரட்சிக்கப்படாத மனிதனுடைய வாழ்க்கையில், அவன் பெருமைகொண்டதற்கான, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, அவன் வாழ்நாளின் கடைசிக்கு ஒத்திப்போடபட்டிருக்கலாம். ஆனால், ஒரு விசுவாசிக்கோ, அவன், தன் தாழ்மையில் குறைவுபடுவதை, தேவன் காணும்போது, அவர் அதிகமாய் பாதிக்கப்பட்டு, அவனுக்கு எதிராக செயல்படுகிறார்.நாம் நம்மைநாமே உயர்த்திக்கொள்ளுகிற எந்த முயற்சியும், அதாவது  நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், அங்கீகாரம் பெற வேண்டும், அல்லது நம்மை குறித்து சிறப்பாக எண்ணிக்கொள்வது அல்லது மற்றவர்களை காட்டிலும் மேன்மையாக கருதுவது இப்படியாக, எந்த ஒரு போக்கையும் அவர் தடுக்கிறவராயும், எதிர்க்கிறவராயும் இருக்கிறார்.

ஒரு மனிதன், தன் மீது அதிகமாய், நம்பிக்கை கொள்ளும்போது, தேவனுடைய உதவியை நாடாதவனாயும், அவன் தன் சுயத்தையே சார்ந்திருக்கும்பொழுது, ஜெபத்தின் வல்லமையை அங்கீகரிக்காதவனாய் இருப்பதினால், தேவன் அவனுக்கு எதிராக இருக்கிறார். தேவன், கற்றுக்கொள்ளும் தன்மை இல்லாதவர்களை வெறுக்கிறார். அதினால், அனேக ஆசீர்வாதங்களை அவர்கள் இழக்கின்றனர்.

தாழ்மைக்கு மூல பாஷையான கிரேக்க மொழியில், ‘சிந்தையில் தாழ்மை’ என்று கூறப்படுகிறது. ஊழியர்களும், மூப்பர்களும் ‘சுதந்திரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக’ நியமிக்கப்படவில்லை, மாறாக ‘மந்தைக்கு மாதிரியாக’ இருக்கும்படியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இளம் வயதுள்ளவர்களும், இதினால் பாதிக்கப்படுகிறவர்களாய் இருப்பதினால்தான், அவர்களையும் பேதுரு குறிப்பிடுகிறார். “நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து” என்ற வசனமானது, பெருமைக்கு எதிரான ஒரு வல்லமையான நிவாரணமாக இருக்கிறது. நாம் அனேக சமயங்களில், பெருமையுள்ளவர்களாய் இருப்பதினால், நாம் சொல்லுவது மாத்திரம்தான் சரி என்றும், அதில் மற்றவர்கள் ஏதேனும் மாறுபட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாதவர்களாகவும் இருக்கிறோம். மேலும் “நான் சொல்லுவதுதான் சிறந்தது” என்று நினைக்கிறவர்களாய் இருக்கிறோம். இது பெருமையின் மிக மோசமான நிலையை காட்டுகிறது. அனேக சமயங்களில், அனேகர், நற்குணங்களை கொண்ட இளைஞர்கள், உலக கருத்துக்களை தங்கள் மனதில் ஆழமாய் ஏற்றுக்கொண்டு, அதினால் நிரப்பப்பட்டு, மற்றவர்கள் சொல்லுகிறதை கேட்ககூடாத நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள். இது ஒரு வெட்கத்துக்குரிய காரியமும், தாழ்மையின் தேவையை அதிகமாய் வலியுறுத்துகிறதாயும் இருக்கிறது.  ‘தாழ்மையின் சிந்தையை அணிந்துகொள்ளுங்கள்’ என்ற வசனமானது, எப்பக்கத்திலும், யார் நம்மை நோக்கினாலும், தாழ்மை என்கிற இந்த கிருபையை அவர்கள் காணும்படியாகதான் பேதுரு இப்படி சொல்லுகிறார். தாழ்மை என்கிற வஸ்திரத்தை நாம் அனுதினமும் ஒரு உடையை போல அணிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இங்கே, ‘பெருமை’ என்ற விஷத்தை முறித்து, தாழ்மையை வளர்த்துகொள்ளுவதற்குண்டான நிவாரணங்களை நாம் பார்க்கலாம்.

1. எக்காரணத்தைக்கொண்டும் மாம்சத்தை பியப்படுத்தாதே. இதை குறித்ததான எடுத்துக்காட்டுகளை, வளர்ந்த நாடாகிய அமெரிக்க தேசங்களில் நாம் பார்க்கலாம். முக்கியமாக, நல்ல சம்பாத்தியத்தை கொண்டு, செல்வ செழிப்பாக வாழுகிற ஊழியக்காரர்கள் அங்கு உண்டு. அவர்கள் உழைப்புக்கு மேலேயே அதிக சம்பாத்தியத்தை, சம்பாதிக்கிற பழக்கம் கொண்டவர்களாகிவிட்டனர். ஏன் சீர்திருத்த சத்தியத்தை போதிக்கிற ஊழியர்கள் மத்தியிலும் இதை நாம் பார்க்கலாம். சத்தியத்தை நன்கு போதிக்கிறதில் பெயர் பெற்றவர்களாய் இருப்பர், ஆனால் மில்லியன்களை சம்பாதித்துவிட்டு மரித்து போகிறவர்களாய் இருக்கின்றனர். இங்கே பிரச்சனை என்னவென்றால், அவர்கள் கற்றுக்கொண்ட அனைத்தும் அவர்கள் தலையில் மட்டும் ஏறினதே ஒழிய, அவர்கள் நடைமுறை வாழ்வில், அதை அப்பியாசப்படுத்தாதபடி, மதியீனமானவைகளை பின்பற்றி, தங்களை வளர்த்துக்கொள்வதே காரணம். மேலும், செல்வம், அவர்களை மிகைப்படுத்திக்கொள்ள காரணமாக அமைந்திருக்கிறது. இது சிறப்பான நிலையையும், திறமையும் உனக்கு வந்ததுபோல் உணரச்செய்கிறது. அளவுக்கு அதிகமான சம்பாதிப்பு, ஆடம்பரத்தை குறித்து நீ மிகுந்த ஜாக்கிரதையாய் இரு.

2. மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்க எப்பொழுதும் ஆயத்தமாயிரு. உண்மைதான், வேதம் மட்டும்தான் நமக்கு வழிகாட்டியாய் இருக்கிறது. நாம் நம்முடைய வேதத்தின் உபதேசங்களிலும், கோட்பாடுகளிலும் உறுதியாய் இருக்கும்படியாக கட்டளையிடப்படுகிறோம். ஆனால், மற்ற எல்லா காரியங்களிலேயும், நாம் மற்றவர்களுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை காத்துக்கொள்வது மிக அவசியம்.

3. எப்பொழுதும் உன்னை குறித்து குறைவாய் எண்ணிக்கொள். “நான் எம்மாத்திரம், நான் ஒரு குறைவுள்ளவனாயும், தடுமாறி விழுகிறவனாயும், என் வாழ்வில் அனைத்து காரியங்களை புரிந்து கொள்வதில் தோற்றுவிடுகிறவனாயும் இருக்கிறேன் என்றும், “இந்த விலையேறப்பெற்ற சுவிசேஷத்தை சுமந்து செல்ல நான் எம்மாத்திரம்” என்றும், நாம் நம்மைக்குறித்து, நம்மை நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். நான் அதிகமாய் மிகுந்த ஜாக்கிரதையுடனும், விழிப்புடனும் இருக்கவேண்டும். ஏனென்றால்,என்னுடைய எதிராளியான பிசாசானவன், பெருமைக்குள் விழவைக்கவும், தேவனுக்காக என்னை உபயோகப்படுத்தாதபடி செயல்படுகிறவனாயும் இருக்கிறான்.

4. மேலே குறிப்பிட்டதற்கு அடுத்தபடியாக, நீ சொன்னதினால், அது சரி என்று எந்த ஒரு காரியத்தையும் நிரூபிக்க பார்க்காதே. எந்த ஒரு காரியத்திலும், நீ சொல்லுவதுதான் சரியான முடிவு என்று எண்ணாதே. அதை பரிசோதிக்கவும், மறுபரீசீலனை செய்யவும் ஆயத்தமாய் இரு. நாம் அறியாத, கற்றுக்கொள்ள வேண்டிய அனேக காரியங்கள் இவ்வுலகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்.

5. உன்னை உயர்த்திக்காண்பிக்கிற – “நீ செய்ததிற்குரிய அங்கீகாரம் உனக்கு கிடைக்க வேண்டும்”, “நீ பாராட்டபட வேண்டியவன்”, “நீ செய்ததற்கு உனக்கென்று தனி அந்தஸ்து கிடைக்க வேண்டும்” என்று சொல்லுகிற இவ்விதமான உனக்குள் எழும்புகிற சத்தங்களை அமர்திப்போடு. உன்னை நீயே உயர்த்திக்காண்பிக்கிற எண்ணங்களை வேரோடு அறுத்துப்போடு.

6. கிறிஸ்துவின் தாழ்மையை நோக்கிப்பார். அவர் உண்மையாகவே, தொடர்ச்சியாக தன்னையே தாழ்த்தினவராய் காணப்பட்டார். ஆம், பேதுரு, பவுல் மற்ற அநேகர் மரண பரியந்தம் தங்களை தாழ்த்தினார்கள். தற்காலத்தில் காணப்படும் புகழ்பெற்ற போதகர்கள் கூட, இப்பரிசுத்தவான்களை பின்பற்றுவதுமில்லை, அவர்களைப்போல  வாழ்வதுமில்லை. நாம் எவ்வாறு இருக்கிறோம்?

7. நான் உனக்கு உறுதியாக கூறுகிறேன். சமூக வலைதளங்களில் உங்களுடைய ஞானத்தை வெளிப்படுத்தும்படியாக சொந்த கருத்துக்களை அதிகமாக பதிவிட வேண்டாம். ஏனென்றால், கடந்த பத்து வருடங்களில்
எனக்கு தெரிந்த அநேகர், அவர்கள் ஒருவேளை ட்விட்டர் (Twitter) கணக்கு வைத்திருப்பவர்களாக இருக்கலாம் அல்லது சொந்தமான வலைபதிவு (Blog) வைத்திருக்கலாம், இதினால், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த கருத்துக்களைத்தான் அதிகமாக வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கின்றனர். இதினால் தங்களுக்கு கிடைக்கும் பாராட்டையும், வரவேற்பையும் வைத்து தங்களை தாங்களே பெருமைக்குள்ளாக தள்ளப்படுகின்றனர். இதில் நாம் எவ்வளவு அதிக ஜாக்கிரதையும், விழிப்பும் கொண்டவர்களாய் இருக்க வேண்டும் அல்லவா?

நாம் மேலே கூறினவைகளின் தொகுப்பாக, மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இல்லாமல், மற்றவர்களுக்கு உபயோகரமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்க நாம் வாஞ்சிப்போம். தாழ்மையின் சிந்தையை அணிந்துக்கொள்வோம்.


Dr. Peter Masters has been Minister of the Metropolitan Tabernacle in central London since 1970, and has authored many books.

No Response to “தாழ்மையில்லாத இடத்தில், உண்மையான ஆசீர்வாதம் இல்லை. – Dr. பீட்டர் மாஸ்டர்ஸ்.”

Leave a Comment