போதகரின் தனிப்பட்ட பரிசுத்தம்- ஜாப் சாங். The Pastor’s Personal Holiness – Geoff Chang.

Published May 27, 2022 by adming in Pastor's Blog

போதக கல்லூரி மாணவர்களுக்கு, சி.எச்.ஸ்பர்ஜன் அவர்களுடன் கூடுகிற வெள்ளிக்கிழமை கூட்டங்கள் என்றாலே, மிகுந்த சந்தோஷமான நாள்தான். ஆனால், அதில் ஒரு கூட்டம், மிகுந்த வேதனையை தரும்படியாய் இருந்தது. அது என்னவென்றால், அவர் அதிகம் நம்பியிருந்த ஒரு ஊழியர், கல்லூரியை முடித்து, வெளியே சென்றவர்,  பெரிதான விதத்தில் வீழ்ச்சியை சந்தித்தார் என்ற ஒரு செய்தி ஸ்பர்ஜனிடத்தில் வந்து சேர்ந்தது. ஸ்பர்ஜன் அவர்கள் தனிப்பட்ட பரிசுத்தத்தை மிகுந்த கவனத்தோடு கையாளுவார் என்று மாணவர்களுக்கு தெரியும். இப்பொழுது, அச்செய்தியை கேட்டவராய், தன்னுடைய மாணவர்களுக்கு, அறிவுரை கொடுக்கும்படியாய் எழுந்தார்.

  “தன்னுடைய சட்டையின் கையை சுருட்டிக்கொண்டு, கனத்த குரலுடன், அவர், இவ்வாறு கூறினார், “சகோதரரே, இவ்வாறு நடப்பதற்கு பதிலாக என்னுடைய வலது கை வெட்டப்பட்டு இருந்தாலும் கூட நலமாக இருக்கும்.”

ஒரு ஊழியக்காரரின் வீழ்ச்சியானது, சபைக்கும், சுவிசேஷ பரவுதலுக்கும், மிகுந்த அவமானத்தை கொண்டுவரும் என்று ஸ்பர்ஜன் அறிந்திருந்தார். ஆண்டவருடைய பிள்ளைகளுக்கு, இப்படிப்பட்ட ஆவிக்குரிய தீங்கு வருவதைக் காண்பதை விட, ஊனமுற்றவராக இருப்பது நலம். எனவே, அவர், போதகரை பயிற்றுவிப்பதில் தன்னை அர்ப்பணித்தாலும், ஸ்பர்ஜன், தன் மாணவர்களுக்கு மீண்டும், மீண்டும் வலியுறுத்தி சொல்லுவது, தனிப்பட்ட பரிசுத்தத்திற்காக போராடுங்கள்.

பரிசுத்தத்தின் ஒரு மேலான அளவு

நீ எந்த காலகட்டத்திலாவது, ஊழியத்தில் இருந்திருந்தால், அந்த பதவியிலிருந்து வரும் குறிப்பிட்ட சோதனைகள் இருப்பதை நீ அறிவாய். இங்கே ஸ்பர்ஜன் சொல்லுவதை கவனியுங்கள்.

மொத்தத்தில், ஊழியத்தைப் போல எந்த இடமும் சோதனையால் தாக்கப்படுவதில்லை. நம்முடைய போதக ஸ்தலம், சோதனை இல்லாத இடம் என்ற    பிரபலமான கருத்து இருக்கும்போதும், சாதாரண கிறிஸ்தவர்களை விட நமக்குதான் ஆபத்துகள் அதிக எண்ணிக்கையாயும், நயவஞ்சகமானவையாயும் இருப்பதே உண்மை. நம்முடைய ஸ்தலம் உயரத்தில் இருக்கலாம், ஆனால் அந்த உயரம் ஆபத்தானது, மேலும் பலருக்கு ஊழியம் அழிவை நோக்கி செல்லும் பாதையாக கூட மாறி விடுகிறது. இந்த சோதனைகள் என்னவென்று நீ கேட்பாயென்றால், அதை குறிப்பிட்டு சொல்லுவதற்கு, காலம் போதாது. உன்னுடைய கண்கள் குருடாக்கப்பட்டால் தவிர, உன்னுடைய சொந்த ஆராய்ச்சி உனக்கு ஆயிரம் கண்ணிகளை விரைவில் வெளிப்படுத்தும்.

சோதனைகளை பொறுத்தவரையில், அது வெளி உலக வாழ்க்கையிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ போதகர்கள் பரிசுத்தத்திற்காக கட்டாயம் போராட வேண்டும். அவர்கள் செய்கிற அனைத்திலும் அவர்கள் கடவுளுக்கு முன்பாக, சுத்த மனசாட்சியை காத்துக்கொள்ளுகிறவர்களாய் காணப்படவேண்டும். இது, சபையாரிடத்தில், நாம் எதிர்பார்க்கிற சாதாரண பரிசுத்தம் போன்று அல்ல, மாறாக, அனைத்து ஊழியர்களும், நாட வேண்டியதும், அடைய வேண்டியதுமான மேலான பரிசுத்தம். ஸ்பர்ஜன் இவ்விதமாக எழுதுகிறார்,

“மிக உயர்ந்த நல்லொழுக்க குணத்தை, மிகுந்த விழிப்போடு காத்துக்கொள்ள வேண்டும். சபையில் சாதாராண எளிய விசுவாசிகளாய் இருப்பவர்கள், அநேகர் இப்பதவிக்கு தகுதியற்றவர்கள். பரிசுத்தம் என்பது ஒரு ஊழியக்காராரின் மிக முக்கிய தேவையாயும், மிக சிறந்த அலங்கரிப்பாயும் இருக்கிறது. வெறும் ஒழுக்க மேம்பாடு மட்டும் போதாது, அதை விட மேலான ஒழுக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.”

  நிச்சயமாக, நல்ல நிலையில் உள்ள ஒரு சபையின் உறுப்பினராக இருப்பது, ஒரு அற்தமான பரிசு ஆகும். ஆனால், நீ ஒரு சபையின், உறுப்பினராக இருப்பதால், சபையை வழிநடத்த நீ தகுதி பெறுகிறாய் என்று அர்த்தம் இல்லை. மாறாக, போதகர்கள், மந்தைக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று பேதுரு எழுதுகிறார். இதில் உன்னுடைய குணமும், ஆவிக்குரிய வாழ்க்கையும் அடங்கும். ஆம், உன்னுடைய பரிசுத்தத்தில், நீ ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

போதகரின் அனேக சோதனைகள்.

இது எப்படியாக தோன்றுகிறது.  மேலே கூறியவற்றை, நீ கவனித்திருப்பாய். ஸ்பர்ஜன், ஊழியத்தில், காணப்படும் அனேக சோதனைகளை குறித்து, பட்டியலிட்டு சொல்லவில்லை. ஏனென்றால், அது ஆயிரக்கணக்கானவை என்று எனக்கு தெரியும். ஆனால் அவரது ஒரு விரிவுரையில், ஸ்பர்ஜன் தனது மாணவர்களுக்கு கவனிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் ஒன்றை கொடுக்கிறார், அது வெளித்தோற்றத்தில் காணப்படும்  “சிறிய பாவங்கள்” உட்பட்டதும் ஆகும்.

“என் அன்புச் சகோதரர்களே, உங்கள் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களிடம் கூறும்போது, ​​உங்கள் குணாதிசயங்களில் கூட கவனமாக இருங்கள் என்று அர்த்தம். சிறிய கடன்கள், நேரம் தவறுதல், அரட்டை அடித்தல், கேலி, கிண்டல் பண்ணுதல், சிறு சண்டைகள், மற்ற அனேக சிறிய பாவங்கள் கூட நறுமண தைலத்தில் விழுந்த செத்த ஈயை போல ஆகிவிடும். போதகரின் சுய திருப்தி, மற்றவர்களின் பெயரை கெடுக்கும் அளவிற்கு இருப்பதை  நாம் பொறுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் பழக்கவழக்கங்களை, நாம் கருத்தாய் தவிர்க்க வேண்டும். சிலவற்றை அருவருப்பானதாக ஆக்கிய கடுமையான போக்கையும், மற்றவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்கும்படியான முட்டாள்தனமான காரியங்களை நாம் தூக்கி எறிய வேண்டும்.  சிறிய விஷயம்தானே என்று நாம் நினைப்போம், அதுவே பெரிய அபாயங்களை சமாளிக்க முடியாதவர்களாய் வழிவகுத்திடும். “எந்த விஷயத்திலும் எந்தக் குற்றமும் செய்யாமல், ஊழியம் குற்றஞ்சாட்டப்படக்கூடாது” என்ற விதியின்படி செயல்படுவதே நமது அக்கறையாக இருக்க வேண்டும்.”

வரலாற்றைப் படிப்பதன் நன்மைகளில் ஒன்று, நாம் விஷயங்களை பல்வேறு கண்ணோட்டத்தில் பார்க்க உதவி செய்வதாகும். இங்கே ஸ்பர்ஜன், இவ்விதமான சோதனைகளை கவனத்தில் கொள்ளுமாறு ஊழியர்களை வலியுறுத்துகிறார், ஏனெனில் அவன் கவனமாக இல்லாவிட்டால், அவை அவனுடைய ஊழியத்தை சேதப்படுத்தும். பின்வரும் ஒவ்வொரு குறிப்புகள் ஒவ்வொன்றும் நம்மை நாமே பரிசோதிக்க வாய்ப்பளிக்கின்றன.

  • சிறிய கடன்கள் – உன்னுடைய பொருளாதாரம் எவ்விதமாக உள்ளது? உன்னுடைய வரவுக்குள்ளாக நீ செலவு பண்ணுகிறாயா? உனக்கு இருக்கிறதை கொண்டு திருப்தியாய் இருக்கிறாயா?
  • நேரம்தவறுதல் – உன்னுடைய நேரத்தை ஒழுங்காக கையளுகிறாயா? சரியான நேரத்தில் உன் வேலையை முடிக்கிறாயா? கூட்டங்களுக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறாயா?
  • அரட்டை அடித்தல் – உன்னுடைய நாவை எவ்வாறு பாதுகாக்கிறாய்? பிற போதகருடைய நெருடலான விஷயங்களை நீ எவ்வாறு கையாளுகிறாய்?
  • பட்டப்பெயர் சூட்டி அழைத்தல் – மற்றவர்கள் புண்படும்படியாக,அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி அழைக்கிறதில் கருத்தாய் இருக்கிறாயா? மற்றவர்களை மரியாதையுடன் நடத்துகிறாயா?
  • சிறு சண்டைகள் – நறுமண தைலத்தில் விழுந்த செத்த ஈயை போன்ற சிறு பாவங்கள். – நீ சண்டையிட்டு கொண்டிருக்கிற நபரா? (முக்கியமாக சமூக வலைதளங்களில்) நீ சொல்லுவதுதான் சட்டம் என்று நினைக்கிற நபரா? நீ பொறுமையற்று பேசுகிறவனாய் இருக்கிறாயா? சமாதானத்தை நாடுகிறவனாய் இருக்கிறாயா?
  • அநேகருடைய நற்பெயரை கெடுக்கிற போதகரின் சுய திருப்தியை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இரகசியமாக நீ பெற்று அனுபவிக்கிற சுய இலாபங்கள் என்ன? நீ ரசிக்கும் கேள்விக்குரிய நிகழ்ச்சிகள் அல்லது பொழுதுபோக்குகள் யாவை? நீ ஏதேனும் இரகசிய பாவங்களில் அடிமையாய் இருக்கிறாயா?
  • உன்னுடைய  முரட்டுத்தனத்தினால், வெறுப்பை சம்பாதிக்கிறாயா? நீ பொறுமை மற்றும் சுய கட்டுப்பாட்டிற்கு பெயர் பெற்றவனாய் இருக்கிறாயா? அல்லது மற்றவர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறாயா?
  • மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத விதத்தில் காணப்படும் உன்னுடைய வெளித்தோற்றம் மற்றும் உடை அலங்கரிப்பை நீ உதறி தள்ள வேண்டும். ஊழியத்தில் உன்னை ஒரு பெரியவனாக காண்பிக்கும் தோற்றத்திற்குண்டான சோதனையை சந்திகிறாயா? உன்னை நீயே உயர்த்தி காண்பிக்க, ஊழியத்தை பயன்படுத்துகிறாயா?

பெரும் வீழ்ச்சியானது, ஒரு மிகப்பெரிய சோதனைகளிலிருந்து ஆரம்பமாவதில்லை என்று ஸ்பர்ஜன் அறிந்திருந்தார். ஆம், சிறிய சோதனைகளிளிருந்துதான் ஆரம்பமாகிறது. ஊழியர்களாக, நாம், இவ்விதமாக, சிறிய பாவம்தான் என்று சொல்லி கண்டுக்கொள்ளாமல் விடும்போது, அது, நாளடைவில், வளர்ந்து, மற்ற பாவங்களுக்கும் இடம் கொடுத்து, பெரிதான ஆபத்தில் முடிவடைகிறது.

பரிசுத்தம் அற்புதமான இனிமையான ஒன்று

இவ்விதமான குறிப்புகள் எல்லாம் கொடுத்ததினால், ஒரு ஊழியக்காரன், எப்போதும் தன்னைக்குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைகொண்டிருப்பான், என நீங்கள் தவறாக எண்ணலாம். ஆனால், உண்மை அது அல்ல. பரிசுத்தத்தை பின்தொடருவதற்கும், எழுதப்படாத மனிஷீகமான ஒழுக்க ஆசாரங்களை கடைப்பிடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஸ்பர்ஜன், வெறும் பாரம்பரியங்களை கடைபிடிக்கும், காரியத்தில் அதிகம் அக்கறை கொள்வதில்லை. அதினால், ஸ்பர்ஜனுடைய எளிமையான பேச்சு மற்றும் நடக்கையினால், லண்டன் மாநகரத்தில் அனேக உயர்தர மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே சமயத்தில், அவர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த அனேக போதகர்களிடத்தில் காணப்பட்ட கடுமையான போக்கு, தன்னுடைய மாணவர்களிடத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் எழுதுகிறார்,

“இதன் மூலம், நாம் உலக  போக்கின் விருப்பத்திற்கும், அதின்  நாகரீகத்திற்கும்  நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பொதுவாக நான், உலகபோக்கையும், பாரம்பரியத்தையும் வெறுக்கிறேன். மேலும் மனுஷ பாரம்பரியங்களையும், ஆசாரங்களையும் கடைப்பிடிப்பது சிறந்தது என்று நான் கருதினால், அதை செய்வதில் நான் மகிழ்ச்சியடைய வேண்டும். இல்லையே. நாம் மனுஷர்கள், அடிமைகள் அல்ல. மனுஷனுக்குரிய சுதந்திரத்தை விடுவிட கூடாது. வெறும் பாரம்பரியங்களை கடைபிடித்து, சமுதாயத்தில், தங்களை உயர்வாக காட்டிக்கொள்ளுபவர்களுக்கு, நாம் அடிமைகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், பாவத்திற்கேதுவான கடுமையான போக்கை, விரியன் பாம்பை போல முற்றிலும் தடுக்க வேண்டும். செஸ்டர் ப்பீல்டு நகரத்துடைய பாரம்பரியமான சட்டதிட்டங்கள் நமக்கு கேலித்தனமாய் இருக்கிறது. ஆனால், கிறிஸ்துவின் மாதிரி நமக்கு அப்படியில்லை. கிறிஸ்துவானவர், ஒருபோதும் கரடுமுரடானவராகவோ, பெருமைகொண்டவராகவோ, ஒழுக்கமற்றவராகவோ அல்லது கண்ணியமற்றவராகவோ இருக்கவில்லை.”

நாம், பரிசுத்தத்தை தொடரும்போது, சாதாரண மக்களை விட, நாம் சிறந்தவர்கள் என்று நினைத்து, நம்மை ஒருவித கிறிஸ்தவ உயர் வகுப்பினராக பார்க்க தொடங்காமல் இருப்பது மிக முக்கியம். ஸ்பர்ஜன் எழுதுகிறார்,

“ஒரு போதகர் சக விசுவாசிகள் மத்தியில் எவ்வாறு தன்னுடைய வார்த்தையை கையாள வேண்டும்? முதலும் முக்கியமாக, நான் சொல்லவேண்டியது, நான் ஒரு ஊழியக்காரன், என்று தன்னை உயர்த்திக்கொள்ளும்படியான எந்தவித தோரணையும் அவனிடத்தில் இருக்ககூடாது. மேலும் அவன், பெருமை, அதிகார தோரணை, கடுகடுப்பு, நடிப்புத்தனம் ஆகிய அனைத்தையும் புறந்தள்ளவேண்டும். “மனுஷகுமாரன்” என்ற பதவி உன்னதமானது. அது எசேக்கியலுக்கு கொடுக்கப்பட்டது. அவனைவிட பெரியவரான இயேசு கிறிஸ்துவுக்கு  கொடுக்கப்பட்டது. பரலோகத்தின் ஸ்தானாபதி அந்த மனுஷகுமாரனைத் தவிர வேறில்லை. ஒரு காரியம் உண்டு, அளவுக்கு அதிகமாக தான் ஒரு ஊழியக்காரன் என இருக்க முயற்சிப்பவர்கள், கடைசியாய், மனுஷனுக்குரிய காரியங்களில் குறைபட்டு போகிறவர்களாய் இருப்பர்.

போதக கல்லூரிக்கான ஸ்பர்ஜனின் குறிக்கோள், பரிசுத்தமான மற்றும் பொதுவான போதகர்களை அதாவது, திரள் கூட்ட மக்களிடமும், பொதுவான மக்களிடமும், வேலைக்கு செல்லுகிற மக்களிடமும், அனைத்து விதமான மக்களிடமும் பழகுகிற போதகர்களை உருவாக்குவதாகும். பொதுவான மக்களிடமிருந்து, தனியாக பிரிந்து நிற்கிறவராகவோ, அல்லது மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதிக்கிறவராக அல்ல. ஏனென்றால், ஒரு போதகருடைய பரிசுத்த வாழ்வில், முக்கியமான நோக்கம், மக்களை நம்மிடமிருந்து, புறம்பே அனுப்புவது அல்ல, மாறாக, கிறிஸ்துவண்டை இழுத்துக்கொள்வதே ஆகும்.

  “பிரசங்கியின் வாழ்க்கை, ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் இழுக்கும்படியான ஒரு காந்தமாக இருக்க வேண்டும். அவர்கள், அவரிடமிருந்து, விலகி செல்லும் காரியம் மிகுந்த வருத்தமான விஷயமாய் இருக்கிறது. ஊழியர்களில், பரிசுத்தம் என்பது, பாவிகளை, மனந்திரும்புவதற்கான உரத்த அழைப்பாகும். ஆம், பரிசுத்த மகிழ்ச்சியுடன் செயல்படும்போது, மேலும் அற்புதமான இனிமையை கொடுக்கிறது.”

ஸ்பர்ஜன் பின்தொடர்ந்த பரிசுத்தமானது, நமது இரட்சகரை போல, தாழ்மை, மகிழ்ச்சி, மற்றும் “அற்புதமான இனிமையை” கொண்டதாய் இருந்தது.

இதைத்தான், தனது மாணவர்களுக்கு முன்பு முன்மாதிரியாக இருக்க முயன்றார். இதைத்தான், நம் வாழ்விலும் காணப்பட பிரயாசப்பட வேண்டும்.

The Pastor’s Personal Holiness – March 7, 2022 – Dr.Geoff Chang https://www.spurgeon.org/resource-library/blog-entries/the-pastors-personal-holiness/ Used by permission.


Geoff Chang serves as Assistant Professor of Church History and Historical Theology and the Curator of the Spurgeon Library. He is a graduate of The University of Texas at Austin (B.B.A.), The Southern Baptist Theological Seminary (M.Div.). Most recently, he completed his Ph.D. at Midwestern Baptist Theological Seminary, where he wrote his dissertation on Charles H. Spurgeon’s ecclesiology. 

No Response to “போதகரின் தனிப்பட்ட பரிசுத்தம்- ஜாப் சாங். The Pastor’s Personal Holiness – Geoff Chang.”

Leave a Comment