உன்னுடைய விசுவாசத்தை வளர்ப்பதற்குண்டான வழிமுறைகள். — ஜார்ஜ் முல்லர்.

Published June 23, 2021 by adming in Pastor's Blog

Guidelines To Build Your Faith

– George Muller.

1.  தேவனுடைய வார்த்தையை கவனமாய் படித்து, அதை தியானம் பண்ணுங்கள். தேவனுடைய வார்த்தையை படிப்பதின் மூலம், விசேஷமாக அதை தியானிப்பதின் மூலம், விசுவாசியானவன், தேவனுடைய குணாதிசயத்தையும், அவருடைய சுபாவத்தையும் மேலும் அறிந்து, அவற்றோடு ஒன்றிப்போகிறான். தேவனுடைய நீதி மற்றும் பரிசுத்தத்திற்கு அடுத்தபடியாக,  அவர் எவ்வளவு அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், தயையுள்ளவர், ஞானமுள்ளவர், உண்மையுள்ள பிதாவாய் இருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுகிறான். ஆகையால், பல்வேறு பாடுகள், இழப்புக்கள், பொருளாதார தேவைகள் மத்தியில் செல்லும் போதும், அவன், அவனுக்கு உதவி செய்யும் தேவனுடைய செயலாற்றும் தன்மையில் இளைப்பாறுகிறவனாய் இருக்கிறான். தேவன், வல்லமையில், சர்வ வல்லவராய் இருக்கிறார் என்றும், ஞானத்தில் முடிவற்றவராய் இருக்கிறார் என்றும், அவர் தம்முடைய மக்களை, விடுவிக்கவும், உதவி செய்யவும் ஆயத்தமாய் இருக்கிறார் என்றும் அவன் தேவனுடைய வார்த்தையில் கற்றுக்கொள்ளுகிறவனாய் இருக்கிறான். தேவனுடைய வார்த்தையை படித்து, அதை தியானம் செய்வது விசுவாசத்தை உறுதிபடுத்துவதற்குண்டான மிகச்சிறந்த வழியாய் இருக்கிறது.

2.  நாம் தேவனுடைய சிந்தைக்கு எதிராக, அறிந்தோ, அறியாமலோ செய்ய முற்படாதவாறு, எப்பொழுதும், உண்மையான இருதயத்தையும், நல்மனசாட்சியையும் காத்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மகிமையும் கொடுக்காமல், அவரை நான் துக்கப்படுத்துவேன் என்றால், எப்படி நான் தொடர்ந்து விசுவாசத்தில் எழும்ப முடியும்? நான் தொடர்ந்து குற்ற மனசாட்சியுடனும், பாவத்திலும் நிலைத்திருப்பேன் என்றால், இக்கட்டான வேளையில், தேவன் மேல் வைத்திருக்கும் என்னுடைய எல்லா நம்பிக்கை, அவரை சார்ந்திருக்கும்படியான காரியம் அனைத்தும் வீணாய் போய்விடும். என்னுடைய குற்றமனசாட்சியினால், நான் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்க முடியாதபடி இருப்பேன் என்றால், என்னுடைய விசுவாசம் பலவீனமானது என்று அர்த்தம்.

ஒவ்வொரு சோதனையிலும், ஆண்டவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையினிமித்தம், விசுவாசமானது அதிகரிக்கும், உதவி பெரும் அல்லது அவர் மேல் நம்பிக்கை இல்லாததினால், விசுவாசம் குன்றிப்போகும். ஆம், சுயத்தின் மேல் சார்ந்திருக்கும் காரியம் ஒன்று தோற்கடிக்கப்பட வேண்டும் அல்லது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாம் தேவனை நம்பும்போது, நமது சுயத்தின் மேலேயோ, மனுஷர்கள் மீதோ, சூழ்நிலை மீதோ அல்லது வேறு எவற்றின் மீதோ நம்பிக்கை கொள்ளமாட்டோம். இதில் ஏதோ ஒன்றில் பேரில் நம்பிக்கை கொள்வோமானால், நாம் தேவனிடத்தில் விசுவாசமாய் இருக்க முடியாது.

3. நம்முடைய விசுவாசம் உறுதிபட வேண்டும் என்று நாம் ஆசை கொள்வோமானால், நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படுகிற சூழ்நிலைகளை நாம் தவிர்க்க கூடாது. எவ்வளவுக்களவு நான் சோதிக்கப்படுகிறேனோ, அவ்வளவுக்களவு தேவனுடைய உதவியையும், அவருடைய விடுதலையையும் நாடுகிறவனாய் இருப்பேன். அவ்விதமான வேளையில், அவருடைய உதவியையும், விடுதலையையும் பெறும்போது, என்னுடைய விசுவாசம் உயருகிறது. ஒரு விசுவாசியானவன், அவன் சோதிக்கப்படுகிற எந்த சூழ்நிலையும், எந்த வேளையும் விட்டு ஒதுங்கி விடக்கூடாது. இதுவே, கடவுளுடைய கரத்தை பார்ப்பதற்கும், அவருடைய உதவியையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ளுவதற்கும், ஏற்ற வேளை என்று எண்ணி, அதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நம்முடைய விசுவாசம் உறுதிப்படும்.

4.  நம்முடைய விசுவாசத்தை உறுதிபடுத்துவதற்கான கடைசி முக்கியமான குறிப்பு என்னவென்றால், நம்முடைய விடுதலைக்குண்டான வழியை நாமே முயற்சி செய்யாதபடி, அதை தேவனே செய்ய விட்டு விட வேண்டும். விசுவாசத்திற்குண்டான சோதனை வரும்போது, நாம் இயற்கையாக தேவன் மீது நம்பிக்கை வைக்காமல், சுயத்தின்மீதும், நண்பர்களின் மீதும், சூழ்நிலைகளின் மீதும் நம்பிக்கை வைத்து விடுகிறோம். நாம் தேவனை நோக்கி, அவருக்கு காத்திருந்து, அவரிடத்திலிருந்து விடுதலையை பெற்றுக்கொள்ளாமல், அவ்விடுதலையை பெற்றுக்கொள்ளுவதற்கு நம்மை நாமே முயற்சி செய்கிறவர்களாய் இருக்கிறோம். நாம் பொறுமையாய் தேவனிடத்தில் காத்திருந்து, அவருடைய உதவியை பெறாமலும், அல்லது விடுதலைக்குண்டான வழியை பெற நம்மை நாமே முயலுவோமெனில், அடுத்தடுத்து புதிதாக வருகிற விசுவாச சோதனையிலும், இவ்விதமாகவே செயல்படுவோம். ஒவ்வொரு புதிய விசுவாச சோதனையிலும், நம்முடைய விசுவாசம் குன்றிப்போகிறதாய் காணப்படும். இதற்கு நேர்மாறாக, கர்த்தருடைய விடுதலையை பார்ப்பதற்கு, அவரை மட்டுமே நம்பி, உறுதியாய் நிற்போம் என்றால், நம்முடைய விசுவாசம் மேலோங்கி வளரும். ஆம், விசுவாச சோதனையில், ஒவ்வொரு முறையும் தேவனுடைய கரத்தை நாம் பார்க்கலாம். நம்முடைய விசுவாசமும் இன்னும் மென்மேலும் வளருகிறதாயும் இருக்கும். மேலும், தேவன் சரியான நேரத்தில், அவருடைய விடுதலையை காண்பிக்கவும், உதவி செய்யவும் நிருபிக்கிறவராய் இருப்பார்.

உலக சம்பந்தமான அல்லது தொழில் ரீதியான பிரச்சனையை மேற்கொள்வதற்கு, வேத ரீதியான முறைகளை கையாளலாம். தேவ பிள்ளைகள், இவ்வுலகத்தில் அந்நியர்களும், பரதேசிகளுமாய் இருப்பதினால், இவ்வுலகத்தின் பாடுகளை எதிர்பார்க்க வேண்டும். அதேநேரத்தில், சூழ்நிலைகளை வெற்றிக்கொள்வதற்கு, தேவன் தம்முடைய வேதத்தில் நமக்கு அருமையான வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். ஆகவே, வேதத்தின்படி நாம் செயல்படும்போது, நம்முடைய அனைத்து பிரச்சனைகளையும் மேற்கொள்ளலாம்.

No Response to “உன்னுடைய விசுவாசத்தை வளர்ப்பதற்குண்டான வழிமுறைகள். — ஜார்ஜ் முல்லர்.”

Leave a Comment