நமது இரட்சகரின் தனிப்பட்ட ஜெபம் || Our Saviour’s Private Prayer — Charles.H.Spurgeon.
“சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” (மத்தேயு 6:39).
நம்முடைய இரட்சகருடைய தனிப்பட்ட ஜெபத்தில், முக்கியமாக அவருடைய சோதனை வேளையில், கற்றுக்கொள்ளவேண்டிய அற்புதமான விஷயங்களை நாம் பார்க்கலாம்.
முதலாவது, அது தனிமையான ஜெபமாய் இருந்தது. ஆம், அவர், தனக்கு பிடித்த மூன்று சீடர்களிடமிருந்தும்கூட தனித்து ஜெபம் பண்ணினார். எனக்கு அருமையான விசுவாசியே, முக்கியமாக, சோதனை வேளையில், உன்னுடைய தனி ஜெபத்தில் அதிகமாய் தரித்திரு. குடும்ப ஜெபம், சபை ஜெப கூட்டம், இது மட்டும் போதாது. இவைகள் முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட ஜெபம் மட்டுமே, தேவன் தவிர, வேறு ஒருவரும் இதை கேட்காததினால் அதிக தாக்கமுள்ளதாயும், சிறப்பானதாயும் இருக்கிறது.
இரண்டாவதாக, அது தாழ்மையான ஜெபமாய் இருந்தது. லூக்கா, முழங்கால் படியிட்டார் என்று சொல்லுகிறார். மற்ற சுவிஷேகர்கள், “முகங்குப்புற விழுந்து” என்று சொல்லுகிறார். இதை பார்க்கும்பொழுது, அவருடைய பணியாளனாய் இருக்கிற உன்னுடைய இடம் எதுவாக இருக்க வேண்டும்? உன்னுடைய தலையில் புழுதியும், சாம்பலும் போட்டுக்கொண்டு எவ்வளவாய் உன்னை தாழ்த்த வேண்டும். தாழ்மையானது, ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்க அதிமுக்கிய அம்சமாய் இருக்கிறது. தேவன் நம்மை ஏற்ற நேரத்தில் உயர்த்தப்பட, நம்மை நாமே தாழ்த்தாவிட்டால், ஜெபத்தில் வெற்றி கொள்வதற்கு, வேறு நம்பிக்கையில்லை.
மூன்றாவதாக, அது ஒரு தகப்பன் – பிள்ளைக்குரிய ஜெபம். உன்னுடைய சோதனை வேளையில், இந்த உறவு, உன்னுடைய ஜெபத்தில் நீ போராடி ஜெபிப்பதற்கு பெரிய பிடிப்பாய், ஆதாரமாய் இருக்கிறது. இந்த உறவு இல்லாமல் இருக்கிற ஒரு சாதாரண மனுஷனுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், தேவனுடைய பிள்ளைக்குரிய உரிமையை, அப்பிள்ளை பெற்றிருக்கிற தகப்பனுடைய பாதுகாப்பை எவரும் பறிக்க முடியாது. ஆகவே, “என் பிதாவே, என் ஜெபத்தை கேட்டருளும்.” என்று பயப்படாமல், தைரியமாய் கேள்.
நான்காவதாக, அது தொடர்ந்து, விடாப்பிடியாய் ஜெபிக்கிற ஜெபமாய் இருந்தது. ஆம், அவர் மூன்று தடவை ஜெபித்தார். நீ மேற்கொள்ளும் வரை ஜெபம் செய்வதை விட்டு விடாதே. முதல் தடவை ஜெபித்த ஜெபம் வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்து, விடாப்பிடியாய் ஜெபித்து வெற்றி பெற்ற, அந்த ஏழை விதவை போல் இரு(லூக்கா 18:1-5). தொடர்ந்து ஜெபத்தில் தரித்திரு. ஸ்தோத்திரத்துடன், விழித்திருந்து ஜெபத்தில் தரித்திரு.
கடைசியாக, ஐந்தாவதாக, அது ஒப்புக்கொடுத்த ஜெபமாய் இருந்தது. “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” இணங்கு, கர்த்தர் உனக்கு இணங்குவார். தேவனுடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது அப்பொழுது, அவர் சிறந்ததையே தீர்மானிப்பார். உன்னுடைய வேண்டுதலை அவருடைய கரத்தில் சமர்ப்பித்து, அதில் திருப்த்தியாய் இரு. எப்பொழுது கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்ன கொடுக்க வேண்டும், எதை கொடுக்க கூடாது என்று அவருக்கு தெரியும். ஆகவே, ஊக்கத்தோடு, விடாப்பிடியாய், போராடி, அதே சமயத்தில், தாழ்மையோடு, ஒப்புக்கொடுத்த மனதோடு ஜெபி. அப்பொழுது நீ நிச்சயம் மேற்கொள்வாய்.
No Response to “நமது இரட்சகரின் தனிப்பட்ட ஜெபம் || Our Saviour’s Private Prayer — Charles.H.Spurgeon.”