உங்களுடைய ஆவிக்குரிய பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? — டஸ்டின் பென்ஞ்

Published November 22, 2021 by adming in Pastor's Blog
Deceive, Deception, Lies

How to Develop Your Spiritual Discernment – Dustin Benge.

நாம் உலகத்தையே ஒரு கைக்குள் அடக்கி செல்லுகிறோம். உலகத்தில் நிகழ்கிற அனைத்து நிகழ்ச்சிகள், அரசியல், கலாச்சாரம், கட்டுரைகள், எப்போதும் ஓயாத முக்கிய செய்திகள் ஆகியவற்றினால் நாம் முடிவில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். நமது கிரகத்தில் உள்ள 3.5 பில்லியன் மக்கள் இந்த வகை ஊடகங்களின் பயனர்களாகவும் நுகர்வோராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் அளிக்கிறது. உண்மையில், சொல்லப்போனால், நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று மணிநேரம் இந்த இடைவிடாத சரமாரியான தகவல்களுடன் ஈடுபடுகிறவர்களாய் இருக்கிறோம்.

கடந்த பல மாதங்களாக, செய்திகளும் சமூக ஊடகங்களும் எவ்வளவு விரைவாக அச்சத்தையும், கோபத்தையும், மற்றும் பல்வேறு இயக்கங்களை தூண்டும் விதத்தில் இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இந்த தகவல் சுமை சில சமயங்களில் நம்மால் தாங்க முடியாததை விட அதிகமாகவும், மேலும், நாம், எதை நம்புவது என்பதை அறிய முயற்சிப்பதினால், விசுவாசிகளையும், அவிசுவாசிகளையும் ஒரே மாதிரியாக விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் விழச் செய்கிறதாய் இருக்கிறது.

வேதம் முழுவதும், உண்மைக்கும் தவறுக்கும்  இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றிய கூர்மையான விழிப்புணர்வை பராமரிக்க விசுவாசிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்படுகிறார்கள். பவுல் இவ்விதமாக தெசலோனிக்க சபைக்கு அறிவுறுத்துகிறார். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.(1 தெச 5:21-22). இதேவண்ணமாக, பவுல், எபேசு சபைக்கு எழுதுகிறார், கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.   கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். ( எபே 5:10-11). எனவே, ஆவிக்குரிய பகுத்தறிவு விசுவாசிக்கு விருப்பமானதல்ல, சரியான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவசியமானதாய் தெளிவாக கட்டளையிடப்பட்டதாய் இருக்கிறது. இருப்பினும், உண்மையான, வேதரீதியான ஆவிக்குரிய  பகுத்தறிவை எவ்வாறு வளர்ப்பதை பற்றி பல விசுவாசிகள் ஒருபோதும் போதுமான அளவு அறிவுறுத்தப்படுகிறதில்லை. அபரிதமான தகவல்கள் கொண்ட இந்த நாட்களில், இத்தகைய அறிவுறுத்தல் இன்றியமையாததாய் இருக்கிறது.

ஞானத்தை விரும்பு

ஆவிக்குரிய பகுத்தறிவுக்குண்டான நம்முடைய ஆசை, ஆழமான அளவில், நாம் ஞானத்தை விரும்புவதற்கு நேரடியாக தொடர்புடையதாய் இருக்கிறது. இந்த வகையான ஞானம், ஒவ்வொரு விசுவாசியாலும், தேடப்படவும்,ஏங்கவும்,தொடரவும் வேண்டும். ஜோன் கால்வின் எழுதின “Institutes of the Christian Religion” என்ற புத்தகத்தில் முதல் வரிகள் இவ்விதமாக சொல்லுகிறது. “ஏறக்குறைய நம்மிடம் உள்ள அனைத்து ஞானமும், அதாவது உண்மையான மற்றும் சிறந்த ஞானமானது, இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: கடவுளை பற்றிய அறிவு  மற்றும் நம்மைப் பற்றிய அறிவு ஆகும். உண்மையான ஞானத்தை பெறுவது என்பது, பகுத்தறியும்படியான, ஆவிக்குரிய திறன், எங்கே ஆரம்பிக்கிறது என்றால், நம்முடைய சிருஷ்டிகரை பற்றிய சரியான அறிவில் ஆரம்பிக்கிறது என்று கால்வின் நமக்கு நினைவூட்டுகிறார். சந்தேகமேயில்லை, கால்வின் “கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 9:10) என்ற வசனத்தை, மனதில் கொண்டிருக்கலாம். சரியான சத்தியத்தை அறிந்து கொள்வதற்கு, பிழையிலிருநது உண்மையைக் கண்டறியும் தற்போதைய இயலாமை, மகிமையும், பரிசுத்தமும் நிறைந்த திரியேக கடவுள் மற்றும் மனிதனின் விழுந்துபோன பாவத்தன்மை ஆகியவற்றை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாததினால் ஆகும்.

ஒரு தகப்பன், அவனுடைய மகனிடம் பேசுவது போல, நீதிமொழிகள் புத்தகத்தின் ஆசிரியர், இவ்விதமாக கூறுகிறார். “ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” (நீதிமொழிகள் 2:3-5). புதைக்கப்பட்ட புதையலைக் கண்டுபிடிப்பதைவிட ஞானம் மிக முக்கியமானதும், இப்பூமியில் உள்ள, மிக சிறந்த பொன் ஆபரணங்கள் காட்டிலும் மிகுந்த தீவிரத்துடனும் தேடப்பட வேண்டும். (மத்தேயு 13:44-45) ஞானக்களஞ்சியமாகிய தேவனை நாம் சரியான விதத்தில் அறியாவிட்டால், இந்த “உலகத்தின் அதிபதியாகிய” பிசாசை (2 கொரி 4:4) அறிந்து கொள்ள தவறி விடுவோம்.

சத்தியத்தை அறிந்து கொள்.

எல்லாம் “போலி செய்தி” என்று நினைக்கும் காலத்தில் சத்தியம் ஒரு அரிய பொருளாக காணப்படுகிறது. சரியான ஆவிக்குரிய பகுத்தறிவை விரும்பும், ஒருவருக்கு, இரண்டாவது பண்பு, சத்தியத்தை அறிவதாகும். மற்றுமொரு விதத்தில் கூறுவோமானால், நாம் அலசி ஆராயும் அனைத்தையும், தேவனுடைய வார்த்தை என்ற சத்திய கண்ணாடி வழியாக பார்க்க வேண்டும். பவுல், இளம் வாலிபனாகிய தீமோதேயுவுக்கு இவ்விதமாக அறிவுறுத்துகிறார், “ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொள்”  (1 தீமோ 6:20) மேலும் “நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.  உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்.” (2 தீமோ 1:13-14). நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு, எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, என்று இங்கு பவுல் இராணுவ மொழியை பயன்படுத்துகிறார். ஒவ்வொரு விசுவாசியும், தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை அறிய அழைக்கப்படுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், அவருடைய சத்தியத்தை, குறைத்தும் அல்லது எந்த விதத்திலும் அதை மீற முற்படும் அனைத்திற்கும் எதிராக, ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை நாம் பராமரிக்கிற அளவுக்கு ஆகும்.

விசுவாசிகளை குறித்து, நாம் ஆராயும் போது, அநேகர், அறிந்து கொள்ள வேண்டிய சத்தியத்தை அறியாததினால், அதிகரித்துவரும் அசத்தியத்தின் தாக்குதலுக்கு எதிராக, பாதுகாப்பற்றவர்கள் என்பதை ஆபத்தான வகையில் தெளிவாக்குகிறது. இந்த பற்றாக்குறையை சரி செய்வதற்கு ஒரே ஒரு வழி, நாம் தினமும் வேதத்தை உட்கொள்ளுவதே  ஆகும். நீங்கள் சமூக ஊடகங்களில் செலவு செய்யும்போதோ அல்லது உலக செய்திகளுக்கு நேராய்போகும்போதோ தேவனுடைய வார்த்தையை நினைவுகூறும் அளவிற்கு தேவனுடைய வார்த்தையால் உங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்பியிருக்கிறீர்களா? உங்கள் முதல் செயல் பயம் மற்றும் நம்பிக்கையின்மையா அல்லது கடவுளுக்குண்டான அமைதியான, நிச்சயமான இருதயமா? “உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” ( யோவான்14:27) சத்தியத்தை அறிந்து கொள்வதினால், உலக போதனை என்ற ஆக்கிரமிப்பிலிருந்து நம்மை விடுவித்து, கடவுள் இறையாண்மையுள்ளவர், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவர் என்ற மகிமைகரமான உத்திரவாதத்தை சந்தோஷமாய் அனுபவிக்க உதவி செய்கிறது. தவறுகள் நிறைந்த இந்த யுகத்தில், ஆவிக்குரிய ரீதியில், பகுத்தறிவதற்காக, நமக்கு  “ஒப்புவிக்கப்பட்ட” சத்தியத்தை மனதாலும், இதயத்தாலும் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் சோதித்தறியுங்கள்.

நம்முடைய ஆவிக்குரிய பகுத்தறிவை வளர்ப்பதில் மூன்றாவது, எல்லாவற்றையும் சோதிக்கக் கற்றுக்கொள்வது. சபைக்குள்ளாக இருக்கும், தவறுகள் மற்றும் பிழைகளை எதிர்த்து, யோவான், தனது வாசகர்களுக்கு தெளிவான அறிவுரைகளை வழங்குகிறார். “நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1). சோதித்தல் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் ஒரு கவர்ச்சிகரமான வார்த்தையாகும், மேலும் “உலோகத்தின் வலிமையை சோதித்தல்” என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து வந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவோமானால், இவ்வகையான பகுத்தறிவு சோதனைக்கு நெருப்பு தேவைப்படுகிறது – அதாவது, கடவுளைப்பற்றிய  நமது அறிவின் நெருப்பு மற்றும் அவருடைய வார்த்தையின் அறிவு ஆகும். கலாச்சார அங்கீகாரத்திற்காகவோ அல்லது எல்லாவற்றையும் ஒத்துப்போகும் மனோபாவத்தை கொண்டவர்களாக இருப்போமானால், நாம் ஒருபோதும் பகுத்தறியும் நபர்களாக இருக்க மாட்டோம். இந்த யுகத்தின் ஊடகங்களுக்கு உங்கள் மனதை ஒருபோதும் அடிபணியச் செய்யாதீர்கள் மற்றும் நம்முடைய ஆத்துமாவின் எதிரியாகிய பிசாசு விரிக்கும் வலைக்கு கண்மூடித்தனமாக விழாதீர்கள். இங்கு, ஜோன் மெக்கார்த்தர் சரியாக கூறுகிறார், “எல்லாவற்றையும் கவனமாக ஆராய நாம் தயாராக இல்லாவிட்டால், பொறுப்பற்ற விவாசத்திற்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் நாம் எதிர்பார்க்க முடியாது.” கவனமாக ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே இருளிலிருந்து ஒளியை நாம் பகுத்தறிய முடியும்.

நாம் ஞானத்தை வாஞ்சித்து, சத்தியத்தை அறிந்து, அதின் வழியாய் எல்லாவற்றையும் சோதித்து பார்க்கும் போது ஆவிக்குரிய பகுத்தறிவில் வளர்கிறவர்களாய் இருப்போம். எனவே, அடுத்த முறை நீங்கள் எண்ணற்ற தகவல்களைப் படிக்கத் தொடங்கும் போது, ​​உங்கள் நம்பிக்கை கிறிஸ்துவின் திடமான பாறையிலோ அல்லது இந்த உலகத்தின் மாறிவரும் மணலிலோ நங்கூரமிடப்பட்டுள்ளதா என்பதை பகுத்தறிவின் வளர்ச்சி தீர்மானிக்கும்.

Taken From https://www.ligonier.org/learn/articles/how-develop-your-spiritual-discernment Used by permission.


Dr. Dustin W. Benge is provost and professor at Union School of Theology in Bridgend, Wales, visiting professor at Munster Bible College in Cork, Ireland, and associate editor of OnePassion Ministries’ magazine, Expositor. He is author of many academic articles and books including, Pulpit Aflame.

No Response to “உங்களுடைய ஆவிக்குரிய பகுத்தறிவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? — டஸ்டின் பென்ஞ்”

Leave a Comment