கோவிட்-19 பற்றி 19 போதக பார்வைகள்

Published May 13, 2020 by adming in Pastor's Blog

கோவிட் 19 பற்றி   19 போதக பார்வைகள்

 – பாஸ்டர். கொன்ரட் ம்பெவே

 

19 Pastoral Thoughts On Covid-19

– Pastor Conrad Mbewe 

                    

 1

கோவிட் 19 யை கொண்டு கடவுள் என்ன செய்கிறார்?

 

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். (ஏசாயா 45:6-7).

 எந்த ஒரு மனிதனோ, சபையோ அல்லது தேசமோ, கடவுளுடைய சிந்தனைக்கு மேலாக எழும்பவே முடியாது. தற்போதைய உலகளாவிய பிரச்சனையான கொரொனோ வைரஸ் குறித்ததான எண்ணம், நிச்சயமாக இவ்வாறு காணப்படக்கூடும்: “கடவுள் தான் இந்த கொள்ளை நோயை அனுப்பியிருக்கிறாரோ?” பொதுவான பதில் என்னவாக இருக்கும், “ இல்லை, கடவுள் அன்புள்ளவராய் இருக்கிறார். அவர் ஒருபோதும் இப்படியான மரணங்களும், உபத்திரவங்களும் அனுமதிக்கமாட்டார்.”  ஆனால், வேத ரீதியான சரியான பதில், “ ஆம், அவர் கர்த்தர், சமாதானத்தையும், தீங்கையும் உண்டாக்குகிறவர்” கர்த்தர் சர்வ ஏகாதிபத்திய தேவன். வைரஸ் உட்பட அனைத்தையும் ஆளுகை செய்கிறவராய் இருக்கிறார்.சிலர் தேவனிடத்தில், தங்களுக்கு பிடித்த , பொருத்தமான குணங்களை மாத்திரம் எடுத்துக்கொள்வார்கள். நாம் அப்படியில்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கடவுளை, கடவுளாகத்தான் பார்க்க வேண்டும். நோவாவின் நாட்களில், கடவுள் பெருவெள்ளத்தை கொண்டு வந்தார். அப்பொழுது, அனேக அப்பாவியான குழந்தைகள் இறந்தனர். யோபு கொண்டிருந்த அனைத்து உடைமைகளையும் அழிப்பதற்கு, தேவன், சாத்தானுக்கு அனுமதி கொடுத்தபொழுது, பெருங்காற்று வந்து, அவனுடைய வீட்டையும், அவனுடைய பிள்ளைகள் அனைத்தையும் அழித்துப்போட்டது.

ஆகவே, இன்றைக்கும் இந்த கொரொனோ வைரசைக்கொண்டு, தேவன் என்ன செய்கிறவராய் இருக்கிறார்? இதற்கு பதில், “எல்லாவற்றையும்!” இங்கிருந்துதான் நாம் ஆரம்பிக்க வேண்டும். இதுவே, வேத ரீதியான சரியான பதில். இது சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு பதில்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் உண்மையாகவே விசுவாசிகளாய் இருப்போம் என்றால், கோவிட்-19 யை குறித்த எண்ணம், கடவுளிடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், தேவனே, இந்த ஆடுகளத்தில் பிரதானமானவராய் இருக்கிறார். இதைக்குறித்து, நீ இவ்விதமாக நினைக்கிறாயா?

  “அனைத்தையும் ஆளுகை செய்பவரே,

மா கிருபையும், ஞானமும் நிறைந்தவரே;

என் காலங்கள் அனைத்தும் உம் கரத்திலே,

நீர் கட்டளையிட அனைத்தும் நிகழுமே.

           (ஜான் ரேய்லாண்ட் 1753-1827).

    

2

வலி என்பது கடவுளுடைய ஒலிபெருக்கி

 “சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.” (லூக்கா 13: 4-5).

 கொரோனா வைரஸ் போன்ற அனைத்து உலகலாவிய பிரச்சனைக்கு, தேவன் ஒருவரே காரண கர்த்தாவாய் இருக்கிறார் என்று நாம் அறிந்து கொள்ளும்போது, இந்த மனுக்குலம் சந்திக்கிற பயங்கரமான உபத்திரவத்திற்குண்டான காரணத்தையும், சர்வத்தையும் படைத்த அந்த படைப்பாளி கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். இந்த மனுக்குலம் சந்திக்கும் உபத்திரவத்திற்கும், தேவனுக்கும் சம்பந்தமே இல்லை என்று ஒரு சாரார் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, நாமும் கூட, இப்படியான பேரழிவினால், பாதிக்கப்பட்ட மக்களை, தேவன் தண்டிக்கிறார் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கலாம். இப்படியாக எண்ணிக்கொண்டிருந்த தவறை, இயேசுவானவர், மேலே குறிப்பிட்ட வசனத்தைக் கொண்டு தெளிவு படுத்துகிறார். தேவனுடைய நீதியான தண்டனையானது, பரிசுத்தவான்களிடத்திலிருந்து பாவிகளை பிரித்தெடுத்து, தம்முடைய கடைசி நியாயத்தீர்ப்பு நாளிலே வெளிப்படும். அது இன்னுமாய் வெளிப்படவில்லை.

  தேவன், இப்படியான கடுமையான விதத்தில் அழிவுகளை ஏன் அனுமதிக்கிறார் என்றால், நாம் அவரோடு கொண்டிருக்கிற உறவை, மறுபடியுமாக ஆராய்ந்து பார்த்து, நம்முடைய கவனத்தை அவர் பக்கமாக திரும்ப பண்ணவே. சி.எஸ்.லூயிஸ் என்ற தேவ மனிதன், இவ்விதமாக கூறுகிறார், “ வலி என்பது காது கேளாத இந்த உலகத்திற்கு, தேவனுடைய ஒலிபெருக்கி…. ஆம், இவ்வுலகத்தில் உள்ள பொல்லாத மனிதர்கள், தங்களை சரிபடுத்திக்கொள்ளும்படியான ஒரே சந்தர்ப்பமாய் இருக்கிறது….. இது, கல்லான இருதய கோட்டையில் பதிக்கும் படியான சத்திய கொடியாய் இருக்கிறது.”

  இயேசுவானவர், தம்முடைய வார்த்தையை கேட்பவர்களிடத்தில், மரணம் அவர்களை ஆட்கொள்ளும் முன்பாக, அப்படியான அழிவானது அவர்கள் மனந்திரும்பும்படியான கடவுளுடைய அழைப்பாக பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பமாய் இருக்கிறது என்று கூறினார். இதே நிலைமைதான், இந்த உலகலாவிய பிரச்சனையின் மத்தியில் இன்றைக்கு நாம் கற்றுக்கொள்ளும் பாடம். உன்னுடைய வாழ்க்கையில் இன்னுமாய் மனந்திரும்பாத பகுதி இருக்குமென்றால், அதைக்குறித்து வருத்தப்பட்டு, மனந்திரும்புகிறாயா? அல்லது இன்னுமாய் கடின இருதயத்தோடு கடந்து போகிறாயா? அப்படியென்றால், இந்த கொரொனோ வைரஸ் கால சூழ்நிலையின் அனுபவங்களை வீணடிக்காதே. ஆம், காலம் கடந்து போகும் முன்னே, உன்னை நீயே தாழ்த்தி மனந்திரும்ப பார்.

 

  “தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும்,

   என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துக்கொள்ளும்;

   வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பாரும்;

   ஒவ்வொரு பாவத்திலிருந்து, என்னை சுத்திகரித்து, என்னை விடுதலையாக்கும்.

 

3

ஓ! நீ கதவுகளை பூட்டுவாய்!

  உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. (மல்கியா 1:10).

உலகம் முழுவதும், ஞாயிற்றுகிழமைகளில், சபைகள் வெறிச்சோடி காணப்படுவதும், ஆலய கதவுகள் மூடப்பட்டதை நான் பார்த்தபொழுது, இந்த வசனம் என் மனதில் தோன்றினது மாத்திரமல்ல, என்னுடைய இருதயம் ஆழமாய் பாதிக்கப்பட்டு, கண்ணீரோடு கடந்து போனேன். தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் நாட்களில், ஆசாரியர்கள், தேவனை ஆராதிக்கும் விஷயத்தில் கண்டும் காணாதவர்கள் போல இருந்தனர். ஆராதிக்க வருபவர்கள், பீறுண்டதையும்,கால் ஊனமானதையும் நசல் கொண்டதையும் கொண்டு வந்து காணிக்கையாகச் செலுத்தினதுமல்லாமல், ஆசாரியர்களும் அதனை ஏற்றுக்கொண்டவர்களாய் இருந்தனர். தேவன், மல்கியா மூலமாய் அம்மக்களிடத்தில் இவ்விதமாக சவால் விட்டார். “ அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன் மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ?” நிச்சயமாக, அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். கடைசியாக, தேவன் அந்நியர்களை, அதாவது பாபிலோனியர்களை வரவழைத்து, நிரந்திரமாக, ஆலய கதவுகளை மூடிப்போட்டார்.

 நான் அடிக்கடி திகைப்பது உண்டு, எவ்வளவாய், இன்றைய கால கிறிஸ்தவர்கள், கூட்டத்தை சேர்ப்பதற்காக, தேவனுடைய ஆராதனையை  பொழுதுபோக்காகவும், பிரசங்கத்தை, கிளர்ச்சியூட்டும் பேச்சாகவும் மாற்றிவிட்டனர். விசுவாசிகள் சபை ஆராதனைக்கு கால தாமதமாக வருவதும், ஆராதனையை தவிர்ப்பதும், தசம பாகத்தை கொடுப்பதில் உண்மையற்றவர்களாயும், சபை போதகர்கள் இதை குறித்து பேசாதவர்களாயும் இருக்கின்றனர். சபை போதகர்கள், வெளிப்படையாகவே காணிக்கைகளை தவறாக பயன்படுத்துவதும், பெண் அங்கத்துவர்களை தகாதவர்களாயும், இழிவாகவும் நடத்துகின்றனர். இதையெல்லாம், கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? இந்த கொரொனோ வைரஸ் கால கட்டத்தில், நாம் இன்னுமாய் மனந்திரும்பாமல், அவரை ஆராதிக்கும் விஷயத்தில், பரிசுத்த கனத்தோடு செயல்படாமல் இருப்போமானால், சபையானது, இன்னும் பெரிதான தீங்கை சந்தித்தாலும் ஆச்சரியமில்லை. ஞாயிற்றுகிழமைகளில் சபை ஆராதனை நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு கிடக்கிறதை பார்க்கும் பொழுது, இன்னும் என்னை அதிகமாய் யோசிக்க செய்கிறது.

எனக்கு நெருங்கிய பாவம்

 அது எதுவாயினும்,

 அதை தூக்கியெறிந்து என்றும்

உம்மையே ஆராதிக்க உதவி செய்யும்.

             –வில்லியம் கூப்பர் (1731-1800)

 

4

நாம் உண்மையாகவே தூளும், சாம்பலுமான பலவீனமானவர்கள்

“இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின பாபிலோன் அல்லவா” (தானியேல் 4:30).

  இந்த வார்த்தைகள், பாபிலோன் பேரரசின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், தான் சாதித்தவைகளை எண்ணி பேசிய வார்த்தைகள். இப்படியாக பேசின, அடுத்த நேரத்தில், தேவன் அவனை தாழ்த்திப்போட்டார். அவன், தன்னுடைய நிலையை உணரும் மட்டும், அவன் மிருகங்களோடே சஞ்சரித்தான். மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான். இது எதை காண்பிக்கிறது? நம்மில் பலமுள்ளவர்கள், எவ்வளவு தூளும், சாம்பலுமான பலவீனமானவர்கள் என்று அறிந்து கொள்கிறோம். நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் எவையுமே இல்லை, அனைத்தும், தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளன என்று அறிந்துக்கொள்ளவேண்டும். ஆம், கோரோனோ வைரஸ் இதே பாடத்தைத்தான் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

நம்முடைய சரீரம் நன்றாய் இருக்கும் பொழுதும், நம்முடைய வேலைகள் பாதுகாப்பாய் இருக்கும் பொழுதும், நம்முடைய தொழில்கள் நன்றாய் போய்கொண்டிருக்கும் பொழுதும், நம்முடைய திருமண பந்தம் நெருக்கமாய் இருக்கும் பொழுதும், நாம் நம்முடைய மனுஷீகமான பலவீனத்தை மறந்து விடுகிறோம். நாம் தேவனை ஆராதிக்கும் ஆராதனையை சங்கடமாக நினைக்கிறோம். நாம் மிகுந்த அலுவல்களை கொண்டிருப்பதினால், அவருக்கு நேரத்தை கொடுப்பதை யோசிக்கிறோம். நம்மில் இருக்கிற பெருமை, கடவுள் இல்லாமல், நாம் நினைத்ததை சாதித்துவிட்டோம் என்று எண்ணுகிறோம். இது வெறுமனே நம்மீது வைக்கும்  பொய்யான நம்பிக்கையே தவிர வேறொன்றுமில்லை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள்தான், ஜெபம் பண்ண வேண்டியவர்கள் என்று நாம் நினைக்கிறோம்.

கோரோனோ வைரஸ் வந்தது. வந்து அனைத்தையும் மாற்றிப்போட்டது. இந்த கிருமியானது, அரண்மனையில் இருக்கிறவர்களையும், தேசத்தலைவர்களையும் பாதித்தது. இதினால், முழு தேசமும், அதில் உள்ள அனைத்து போக்குவரத்துகளும், தொழில்களும் முடங்கிப்போயின. உலகத்திலே வல்லரசு நாடாய் திகழ்ந்த நாட்டின் சிறப்பான பொருளாதாரமெல்லாம் கவிழ்ந்து போயின. இதிலிருந்து, ஒன்று மட்டும் தெளிவாகிறது. நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் எதுவுமே இல்லை. அனைத்தும் தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என்ற தெளிவான சிந்தையுடன் நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும். நான், ஒன்று மட்டும் தாழ்மையுடன் உங்களிடம் கேட்கிறேன். ஒரு தனி நபராக, இருதய பூர்வமான ஆராதனை மூலம், தேவன் பேரில், உன்னுடைய முழுமையான சார்ந்திருத்தலை காண்பிக்கிறாயா? நீ  மனத்தாழ்மையுடன் தேவனுடைய சமூகத்தில் சென்று தினமும் ஜெபிக்கிறாயா?

தூளும்,சாம்பலும்

பலவீனமானவர்கள்,

உம்மில் எப்போதும்

நம்புவோம்,

உம் கனிவான இரக்கங்களுக்கு,

எப்போதும் முடிவில்லை;

எங்கள் சிருஷ்டிகரே, பாதுகாப்பவரே;

மீட்பரே, நண்பணுமானவரே.

     –ரொபேர்ட் கிரான்ட் (1779 -1838).

 

5

உலகத்தின் ஒரே ஒரு நற்செய்தியை பகிர்ந்துக்கொள்

 

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய  வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.” (ஏசாயா 9:2)

 இன்னும் 3 மாதத்தில் மட்டும், உலகம் முழுக்க 1 மில்லியன் மக்கள் கோரோனோவினால் பாதிக்கப்படுவார்கள் என்று  நான் கேள்விபடுகிறேன். இது எவ்வளவு வருத்தமான செய்தி. இன்றைக்கு ஊடகங்கள் பல்வேறு வாயிலாக, இப்படியான வருத்தமளிக்கும் செய்திகளை அளித்துக்கொண்டே இருக்கின்றனர்.

  இது மக்கள் மத்தியில் எவ்வளவு மன உளைச்சலை உண்டாக்குகிறதாய் இருக்கிறது.  இது, ஏசாயா சொன்ன மரண இருளில் வாழ்கிற மக்களை குறித்து எனக்கு நினைவுக்கு வருகிறது. இங்கு இருள், துயரமும், துக்கமும் நிறைந்த காரியத்தை காண்பிக்கிறது. இப்படித்தான், இன்றைக்கு மக்களுடைய மனநிலையும் இருக்கிறது.  முன் எப்போதுபோல இல்லாத இந்த உலகலாவிய அழிவு, இன்றைக்கு மக்கள் மத்தியில் பயங்கரமான பயமும், பீதியும் உண்டாக்கியுள்ளது.

 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று ஏசாயா கூறுகிறார். நிச்சயமாக, இது அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும். அது என்னவிதமான வெளிச்சம்?  இதைக்குறித்து அதற்கு பின்வரும் வசனங்களில் ஏசாயா கூறுவதை நாம் பார்க்கலாம்.  “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.” (ஏசாயா 9:6)   ஆம், ஒட்டுமொத்தமாக, இயேசு கிறிஸ்துவே, இந்த உலகத்தில் காணப்படும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஒரே நற்செய்தியாய் இருக்கிறார். அவருக்குள், நாம் சந்தோஷம், சமாதானம், நம்பிக்கை அனுபவித்து, மரணத்தையும், நரகத்தையும் எதிர் கொள்வோம்.

 கிறிஸ்தவனே, இப்படிப்பட்ட மகிழ்ச்சியின் வெளிச்சத்தை, அநேகருக்கு சொல்லத்தக்க விதத்தில், எந்த எந்த விதத்தில் சொல்ல முடியுமோ, அந்த அந்த விதத்தில் சொல்ல பிரயாசப்படுகிறாயா? உலகத்தையே அழித்துக்கொண்டிருக்கிற இந்த கோரோனோ வைரஸை குறித்து, பயமும் பீதியும் கொண்ட மக்கள் மத்தியில், இந்த நற்செய்தியை சந்தோஷமாய் பகிர்ந்துக்கொள்.

 “களிப்புடன் பாடுவோம், நம் போராட்டத்தில்

இயேசு இரட்சிக்கிறார், இயேசு இரட்சிக்கிறார்;

அவருடைய வாழ்வு, மரணத்தினால்;

இயேசு இரட்சிக்கிறார், இயேசு இரட்சிக்கிறார்;

அவர் இரக்கத்தை நாடுகையில்,

அகமகிழ்ந்து பாடிடுவோம், இருள் சூழ்ந்த வேளையில்;

பாடிடுவோம், மரணத்தை ஜெயிப்பதினால்,

இயேசு இரட்சிக்கிறார், இயேசு இரட்சிக்கிறார்.

          –ப்ரிசிலா ஜேன் ஓவன்ஸ் ( 1829-1907)

   

6

 பொறுப்பாளியாய்  இரு, பொய்க்கு இடங்கொடுக்காதே

 

  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். (லூக்கா 18:20)

    பணக்கார வாலிபனாகிய தலைவனிடத்தில், இயேசுவானவர் அநேக கட்டளைகளை கூறினார். அதில் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, ‘பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக’. இது ஒன்பதாம் கட்டளையின் சாராம்சத்தை குறிக்கிறது. யாராவது ஒருவன் பொய்யை பரப்புவானென்றால், அவன் பொய்யனும், பொய்யுக்கு பிதாவுமாகிய சாத்தானுக்கு உடந்தையாய் இருக்கிறான். அவன் கடவுளை தவறான விதத்தில் சித்தரித்து, ஏவாளை வஞ்சித்தான். இதுவே முழு உலகமும் பாவத்தில் வீழ்ந்து போனதிற்கு காரணமாயிருந்தது.

 கிறிஸ்தவர்களாகிய நாம் எதையும் சரி பார்க்காமல், இதே தவறை மறுபடியும் செய்ய முற்பட கூடாது. கோரோனோ வைரஸ் என்பது உலகளாவிய அழிவு. இதினால், அநேகமாயிரமான ஜனங்கள் மரித்து விட்டார்கள். இந்த கிருமியானது, நம்முடைய தேசத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. ஜனங்கள் பயத்தினாலும், பீதியினாலும் நிறைந்திருக்கின்றனர். நாம் என்ன பார்க்கிறோமோ, அதை அப்படியே சொல்ல வேண்டும். அது தவறாக இருக்குமென்றால், நீங்கள் பொய்சாட்சிகாரர்களாய் இருப்பீர். இதை கேட்கிறவர்களும், மற்றவர்களும் பாதிப்புக்குள்ளாக்குகிற நபராயும் இருப்பீர்.

 சமூக வலைதளங்களில், நமக்கு வருகிற அனேக செய்திகளின் உண்மைத்தன்மையை நாம் அறியாதவர்களாய் மற்றவர்களுக்கு பரப்பும்போது அந்த செய்தி பொய்யானதாக இருக்குமாயின், நாம் பொய்சாட்சிகாரர்களாகிவிடுவோம். உதாரணமாக, இந்த நோய்க்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் உண்டு என்று அனேக பொய்யான பதிவுகளும் உண்டு. அவற்றை, நாம் பகிரும்போது, உண்மையாக, அதற்காக உழைப்பவர்களின் உழைப்பையே குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.

 சத்தியம் ஜெயிக்கும். நாம் பொறுப்பான கிறிஸ்தவர்களாய் இருப்போம். உணர்ச்சிவசப்பட நேரம் இது அல்ல. அதிக ஆபத்து உள்ளது. நாம் மற்றவர்களுக்கு எதை பகிருகிறோமோ, அது உண்மையானதா என்று சரிபார்த்து பகருவோம். இதில் உனக்கு நிச்சயம் இல்லையென்றால், அதை செய்யாதே. அப்படி செய்வாயென்றால், நீ பொய் சாட்சி கூருகிறவனாயும், தேவனுக்கு எதிராக பாவம் செய்கிறவனாயும் காணப்படுவாய்.

 

எந்த காரியமானாலும்,

சத்தியத்தையே பேசுவோம்;

பணியிலும், ஆடு களத்திலும்,

சத்தியத்தையே பேசுவோம்.

இதை எப்போதும் இருதயத்தில்

பதிய வைத்து, சட்டமாக்கிகொண்டு

சத்தியத்தையே பேசுவோம்.

            –ஆல்ஃபிரட் ஆர்த்தர் கிரேலி (1813-1905)

 

7

 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்

 

 “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

  ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.” (1 கொரி 15:9-10).

 இன்றைக்கு Rev.புகுடா ம்வன்சாஸ் சரீரம் அடக்கம் செய்யப்பட்டது. 1980-களின் ஆரம்ப கட்டத்தில், சாம்பியா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, நான் அவரோடு இருந்ததுண்டு. அவர், ஊழியத்தில், வல்லமையாய் எடுத்து பயன்படுத்தப்பட்ட தேவ மனுஷன். கான்சர் வியாதியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மரித்துப்போனார். ஏன் உனக்கும், எனக்கும் இந்த நிலைமை ஏற்படவில்லை.?

இந்த எண்ணம், முக்கியமாக கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த  நாட்களில்,  நாம் அதிகமாக யோசிக்க வேண்டும். இந்த வாரத்தில், நமது சுகாதார அமைச்சரவை, இந்த வைரசினால் பாதிக்கப்பட்டு, இறந்து போன முதல் நபர் என்று பதிவு பண்ணியிருக்கிறது. அந்நபர், சவுத் ஆப்பிரிக்கா நாட்டிற்கு போன பொழுது, இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஏன் அவருக்கு மட்டும் வந்தது? உனக்கும், எனக்கும் ஏன் வரவில்லை

 இதற்கெல்லாம் ஒரே ஒரு பதில்: நம்முடைய பாவத்திற்கு மேலாக, சர்வத்தையும் ஆளுகை செய்கிற கர்த்தர் பெரியவராய் இருக்கிறார். நம்முடைய பாவத்தின் காரணமாக, நம் வாழ்வுக்குண்டான சுதந்திரத்தை பறிக்கொடுத்துவிட்டோம். வேதம் இவ்விதமாக சொல்லுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்”. நாம் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில், இந்த கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தவர்கள்தான். ஆக மொத்தம், உலகத்தில் காணப்படும் இறப்பை குறித்து, அது கொரொனோ வைரஸினால் கூட இருக்கலாம். நாம் சொல்ல வேண்டியது, “நான் இருக்கிறது தேவகிருபையினால் இருக்கிறேன்.”

 ஆம், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், ஆண்டவர், நமக்கு ஒவ்வொரு நாளும் கூட்டி கொடுத்து வருவதை குறித்து நன்றியுள்ளவர்களாய் இருப்போம். அப்.பவுலை போல, நாம் திரும்பவும் ஆண்டவருக்கு நம்மைநாமே அர்ப்பணிப்போம். அப்பொழுது பவுலை போல இவ்விதமாக சொல்லுவோம், “ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை.

 

பாவ அகோரம் கடல்

அலையை போல் வந்தாலும்,

ஆத்துமாவை நஷ்டப்படுத்தினாலும்,

சொல்லிமுடியாத,பெரிதான கிருபையினாலும்,

சிலுவை எனும் அடைக்கலத்தில் நடத்துமே.

 

கிருபை, கிருபை, தேவனுடைய கிருபை,

அக்கிருபையே பாவத்தை மன்னிக்கும்,

கிருபை, கிருபை, தேவனுடைய கிருபை,

நம் பாவத்தை காட்டிலும் கிருபை பெரிதே.

             – ஜூலியா எச் ஜான்ஸ்டன். (1849-1919)

 

 8

நீ உன்னை நேசிக்கிறதுபோல, பிறனையும் நேசி

 

“உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (ரோமர் 13:9).

 

இன்றைய நாட்களில், நம்மையும், பிறனையும் நேசிப்பதில் இருக்க வேண்டிய சமநிலைப்பாட்டை கற்றுக்கொள்ளும்படியான காரியமானது, மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முக்கியமாக, இப்படியான  ஆட்கொல்லி நோய் பரவும் காலகட்டத்தில், அதுவும் நம்முடைய வாழ்க்கை அபாயத்தில் இருக்கிறபடியினால், இச்சவாலானது இன்னும் அதிகரிக்கிறதாய் இருக்கிறது. நாம் நம்மில் அன்பு கூறும்வண்ணமாக, பிறனிடத்திலும் அன்பு கூறும் விஷயத்தில் உள்ள சமநிலைபாட்டை எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்?

 உன்னை நீ நேசிப்பது போல, பிறனையும் நேசிப்பது என்பது, தியாகம், அசொளகரியம், ஆபத்தை சந்திப்பது இவையெல்லாம் அடங்கியிருக்கிறது. நல்ல சமாரியன் கதையை நாம் நினைவு கூறுவோம். அந்த கள்ளர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய் கிடந்த அந்த மனுஷனை ஏன் அந்த வழியாய் வந்த லேவியனும், ஆசாரியனும் உதவி செய்யவில்லை? அவர்கள் அவசரமாக தங்கள் வேலைக்கு செல்கிறவர்களாய் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் தங்களுடைய பணியை முடித்து மிகுந்த களைப்புள்ளவர்களாய் இருந்திருக்கலாம்.  கொள்ளையர்கள் நிறைந்த பகுதியாய் இருந்ததினால், தங்கள் உயிருக்கு ஆபத்து என்று நினைத்திருக்கலாம். கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க, பிறருக்கு நம்முடைய உதவி தேவைப்படும்பொழுது, மேற்சொன்னவைகள் எல்லாமே, நம்முடைய சுயத்திலிருந்து வெளிவரும் சாக்குபோக்குகள்.

 ஆம், சரித்திரம் சான்று பகருகிறது.  உலகலாவிய பிரச்சனையான கோவிட்-19 போன்று, பல்வேறு இக்கட்டான கால கட்டத்திலும் உண்மை கிறிஸ்தவர்கள், தைரியமாய் எழும்பி நின்று, தங்களுடைய பணியை சிறப்பாய் செய்து முடித்திருக்கின்றனர். இன்றைய நாளிலும் கூட, அநேகர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். நீ உன்னை நேசிக்கிறது போல, பிறனையும் நேசிக்கும்படியான காரியம், இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு இறங்கி உதவி செய்கிறதை குறிக்கிறது. மிகுந்த தேவையுள்ள மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு எவ்வாறெல்லாம் நடைமுறை ரீதியாக உதவி செய்யலாம் என்று ஆராய்ந்து, கிறிஸ்துவின் அன்பை நாம் காண்பிப்போம்.  ஆம், இது ஆபத்தானதுதான். ஆனால், உண்மையான அன்பு, ஆபத்தை சந்திக்காமல், சிரமம் இல்லாமல் இருக்குமா?

 

சகோதரனே! நான் உனக்கு

பணி செய்யவே, இயேசுவை

போலாவேனே!

நீயும் எனக்கு உதவி செய்யவே

கிருபை தாரும் என

வேண்டிடுவேனே!

 

மோட்சப் பிரயாணிகள் நாமே,

பிரயாணத்தில் சகோதரர்களாமே;

இங்கே வாழும் நாமே,

ஒருவருக்கொருவர் பாரத்தை சுமப்போமே.

             –ரிச்சர்ட் கில்லர்ட் (1953)

 

 9

தேவனை நம்பு, உன்னுடைய பொடியை உலர்வாக வைத்துக்கொள்

 

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். (நீதி 21:31)

 

 கோரோனோ வைரஸ் என்ற ஆட்கொல்லி நோயை எதிர்த்து, நாம் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியம் மற்றும் மனிதனுடைய உத்திரவாதத்தை, நாம் தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது, நம்முடைய பயத்திலிருந்து வெளியே வந்து விசுவாசத்தில் வளருவோம். இதனால், மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் நாம் குறைவுபடக்கூடாது.

     “குதிரை யுத்த நாளுக்காக ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்” என்கிற வசனத்தில்  ஒரு ஆழமான அழுத்தம் இருக்கிறது. போர்வீரர்கள், தங்களுடைய முழு பெலத்தையும் கொண்டு ஒரு போரை ஜெயிப்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். ஆனாலும், அதேசமயத்தில், அப்போரின் முடிவானது, சர்வ ஆளுகையின் தேவனுடைய அநாதி திட்டமாகவே இருக்கும் என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

 17 ஆம் நூற்றாண்டில்  நடந்த பிரிட்டிஷ் சிவில் போரின் போது, அயர்லாந்து தேசத்தை இங்கிலாந்து படையெடுத்தது. அப்பொழுது, அதை  வழிநடத்தி வந்த ஆலிவர் க்ரோம்வேல் என்பவர்,

 “தேவனை நம்புங்கள் சகோதரரே, உங்கள் பொடிகளை உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதன் அர்த்தமாவது, போரின் முடிவை கர்த்தர் கையில் ஒப்புக்கொடுத்தாலும், அப்போரை வெல்வதற்கு கடைசிவரையில் அவ்வீரர்கள் என்ன செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும் என்று அர்த்தமாம்.

 அவ்வண்ணமாகவே, இந்த கோவிட்-19 என்ற வைரஸினால் ஏற்பட்டிருக்கிற இந்த அசாதாரணமான சூழ்நிலையை தேவன் அனுமதித்திருக்கிறார் என்றும், தமக்கு சித்தமானால், மகிமைக்குள்ளாய் சிலரை எடுத்துக்கொள்ள கூடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், நம்மால் இயன்ற வரை, பொறுப்புள்ளவர்களாய், கோவிட்-19 பரவுவதை தடுக்கிறவர்களாயும், அதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும். ஆம், கர்த்தரை நம்பி பொடியை உலர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

தடுமாறாதே, தைரியம் கொள்ளும்!

 உன் பாதை இரவைப்போன்றும்

 இருளாய் இருந்தும்,

 இரவின் நட்சத்திரம் உன்னை நடத்தும்,

 ‘தேவன் பேரில் நம்பி, நன்மை செய்யும்.

 

பாதைகள் கரடு முரடாயிருந்தாலும்,

பிரயாணம் வெகு தூரமாயினும்,

தைரியமாய் முன்னேறிச் செல்லும்,

தேவன் பேரில், நம்பி நன்மை செய்யும்.

           –நோர்மன் மெக்லொட் (1812-1872)

 

 

10

 பயப்படாதேயுங்கள்

 

  “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” (யோசுவா 1:9).

  நம்முடைய வேதாகமத்தில் பல இடங்களில் காணப்படும், அழுத்தமான கட்டளை “பயப்படாதேயுங்கள்” ஆம், இவ்விதமான கட்டளை, தலைவனாகிய யோசுவாவுக்கு கொடுக்கப்பட்டது. கலங்கிப்போய் கிடந்த யோசேப்புவின் சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு, முக்கியமாக, இயேசுவின் தாயாருக்கு கொடுக்கப்பட்டது. நீ தேவனுடைய பிள்ளையாய் இருப்பாயென்றால், உனக்கும் ஆண்டவர் “பயப்படாதேயுங்கள்” என்று வலியுறுத்தி பேசுகிறார்.

 பயமுள்ள இருதயத்தோடு கடந்து போகிற ஒவ்வொருவருக்கும் இவ்விதமான வார்த்தை கொடுக்கப்படுகிறது. மோசே இறந்து போனார், கலக குணமுள்ள தேசத்தை, தலைமை பொறுப்பெடுத்து நடத்த வேண்டியதாயிருந்ததினால், யோசுவாவுக்கு கொடுக்கப்பட்டது. தந்தையும் இறந்து விட்டார்.  இப்பொழுது யோசேப்பு, நமக்கு சரியான பதிலடி கொடுக்கபோகிறார் என்று சந்தேகித்த வேளையில் யோசேப்பின் சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்டது.

 உங்களுடைய நிலைமை எவ்வாறு உள்ளது? கோரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட இந்நாட்களில் ஏன் உங்கள் இருதயம் பயத்துடன் இருக்கிறது. நம் தேசத்தை காட்டிலும், வல்லரசான நாடுகளையே இது உலுக்கி போட்டதினால்,அவ்வாறாக இருக்குமோ?

 ஏன்? இந்த உண்மை சம்பவத்தின் வெளிச்சத்தில், கிறிஸ்தவனாய் இருக்கிற நீ ஏன் பயப்படவேண்டும்.  உன் பரம பிதாவானவர் ஒரு நுண் கிருமி உட்பட சகலத்தையும்  ஆளுகை செய்கிறவராய் இருக்கிறார். ஆம், அனைத்து காரியத்தையும், இந்த கோரோனோ வைரஸ் தாக்கம் உட்பட, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டு, அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. “பயப்படாதேயுங்கள்” என்ற வார்த்தையை கேட்கும் மட்டும்மாக, தேவனுடைய வார்த்தையை தியானம் செய்யுங்கள்.

 

 உன் பயத்திற்கு இன்றே விடைகொடு,

தைரியமும், நம்பிக்கையும் கொண்டிரும்

 உன் ஜெபத்தை கேட்பவர் உனக்குண்டு,

 உன் கண்ணீரை கணக்கில் வைப்பவரும்,

உயர்த்தி வாழ வைப்பவர் அவருண்டு.

 

புயல் சீற்றங்கள் வாழ்வில் வந்தாலும்,

அவர், அனைத்தும் மாற்ற வல்லவரே!

காத்திரு, அவர் நேரம் வரைக்கும்,

இரவும் களிப்பாக மாறுமே.

       –பாலஸ் கெர்ஹாட் (1607-1676)

   

11

கடந்த கால துன்பங்கள் நம்மை இரக்கமுள்ளவர்களாய் மாற்ற வேண்டும்

 

“நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரை சிநேகிப்பீர்களாக” (உபா 10:19)

 

கர்த்தர்  சோதனைகள் ஊடாய்  நம்மை நடத்த ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால், அவ்வாறு கடந்து செல்பவர்களுக்காக, நாம் பரிதபிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும். அப்பொழுதுதான், நாம் அந்த கஷ்டத்தை புரிந்துக்கொண்டு, நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து, அவர்களுக்கு உதவி செய்கிறவர்களாய் இருப்போம். தேவன் நம்மை தேற்றின வண்ணமாக, நாம் அவர்களை தேற்றுகிறவர்களாய் இருப்போம்.

    இஸ்ரவேல் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்த பாடம் இதுதான். ஒரு அந்நிய நாட்டில், புறஜாதிகளிடத்தில், அனேக துன்பங்களை, இஸ்ரவேல் மக்கள் அனுபவித்தார்கள். ஆகவே, அவ்வாறு கடினமுள்ளவர்களாய் இல்லாமல், தங்களிடத்தில் உள்ள புறஜாதிகளை, இவர்கள் இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார்.

   அவ்வாறுதான், நம்முடைய தேசம் அனேக இயற்கை சீற்றங்கள், காலரா போன்ற கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட பொழுது, நமக்கு உதவி செய்த அனேக தேசங்கள், இப்பொழுது கொரோனாவினால் உலுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்காய் நாம் பரிதபிக்க வேண்டும்.

     நாம் பொருளாதாரரீதியாக உதவி செய்ய முடியாமல் போனாலும், நம்மால் முடிந்த ஒரு பெரிய உதவியை அவர்களுக்கு செய்ய முடியும். ஆம், அதுதான் நம்முடைய ஊக்கமான ஜெபம் ஆகும். நாம் இந்த உலகத்திற்காக ஊக்கமாக ஜெபிப்போம்.

 

கஷ்ட நஷ்ட முண்டானாலும்

யேசுவண்டை சேருவோம்;

மோச நாசம் நேரிட்டாலும்

ஜெப தூபங் காட்டுவோம்;

நீக்குவாரே நெஞ்சின் நோவை

பெலவீனம் தாங்குவார்;

நீக்குவாரே மனச்சோர்வைத்

தீய குணம் மாற்றுவார்.

     – ஜோசப் ஸ்க்ரீவன் (1819-1886)

                                

12

அன்புள்ள தேவன் எப்படி கோவிட் –19 யை அனுமதிக்க முடியும்?

 

        பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.  (ஆதி 3:17-19)

   கோவிட்-19 என்ற வைரஸானது உலகமெங்கும் பரவி, பயங்கரமான அழிவை சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், நம்மில் எழும் முக்கியமான கேள்வி, இதுவாகத்தான் இருக்கும், “அன்புள்ள கடவுள் எப்படி கோவிட்-19 யை அனுமதிக்க முடியும்.?” கிறிஸ்தவர்களாக, நாம் கடவுளை இவ்விதமாக பாவிப்போமென்றால், உலகத்திலே எந்த வியாதியும், அழிவும் இருக்க கூடாது.

  தங்கள் அன்புக்குரியவர்கள் மரிக்கும் முன்பு அவர்கள் கடந்துபோகும்  வேதனைகள், வலிகளை பார்த்திருக்கலாம்.  அப்படிப்பட்டவர்கள் தீடீரென்று இறந்துபோகும் வேளையை கூட பார்த்திருக்கலாம். அவர்கள் “இது எப்படி?” கேள்வி கேட்கும்போது, அது வலியாகத்தான் இருக்கிறது.

 இக்கேள்விக்கு சிறந்த பதில், படைப்பின் ஆரம்ப பகுதிக்கு செல்ல வேண்டும். அத்தருணமானது, எந்தவித மரணமும், வலியும் இல்லாத பரீபூரணமான  உலகமாய் இருந்தது. நமது ஆதிப்பிதாவாகிய ஆதாம்,ஏவாள் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தனர். இதின் விளைவாக, மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி, முழு உலகத்திற்கும் பாவத்தின் தண்டனையான உபத்திரவமும், மரணமும் வந்தது.

 ஆகையால், அன்புள்ள கடவுள், ஏன் இந்த கொரோனோ வைரஸை அனுமதிக்க முடியும்? சொல்லப்போனால், நாம், அவருடைய நீதியான நியாத்தீர்ப்புக்கு கீழாக இருக்கிறபடியினால், இதை விட மோசமான விளைவை மட்டுமே பெற தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோம். அவர், அன்புள்ள கடவுள் மாத்திரமல்ல, பரிசுத்த கடவுளாயும் இருக்கிறார். கிறிஸ்துவுக்குள், நம்முடைய பாவக்கடன் செலுத்தப்பட்டுவிட்டது. விசுவாசிகள், இனி ஒருபோதும், அவற்றுக்காக நரகத்திற்கு போய் தண்டிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், இந்த உலகத்தில் நாம் இருக்குமட்டும், உபத்திரவங்கள், பாடுகள், வேதனைகளை தேவன் அனுமதிக்கிறார்.

 

ஓ! இரக்கமே! இன்னும்

 இரக்கம் எனக்கு கிடைக்குமா?

ஓ! மா பாவியான என்னையும்

உம் கோபம் என்னை தப்புவிக்குமா?

 

எனக்காக இரட்சகர் ஒருவர் இருக்கிறார்.

அவர் தம் காய கரங்களை நீட்டி,

தம் அன்பை என்றும் எனக்கு காட்டி

இயேசு ஜீவிக்கிறார், இன்னும் என்னை நேசிக்கிறார்.

     – சார்ல்ஸ் வெஸ்லி (1707-1788).

 

 

13

பேரழிவுகள், நம்மை தாழ்த்துவதற்கான அழைப்பு

 

“அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனை விட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.” (2 நாளா 12:12)

 

 நம்முடைய முற்கால கிறிஸ்தவர்கள், ஒரு அழிவை சந்திக்கும்போதெல்லாம், தங்களை தாழ்த்துவதற்குண்டான நேரம்  அதுதான் என்று உணர்ந்துக்கொண்டார்கள். அவர்களுடைய இருதயம், கர்த்தரிடத்தில் திரும்புவதற்காகத்தான் தேவன் இவ்வாறு அழிவையும், ஆபத்துக்களையும்  அனுமதித்து  இருக்கிறார் என்று எண்ணி அவரோடு ஒப்புரவானார்கள்.

   உலகில்  அநேக உயிர்களை கொரோனோ வைரஸ் குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும், நம்முடைய மனநிலைமையும் அவ்வாறே காணப்பட்டால்  நலமாயிருக்கும். அவிசுவாசிகள் இது ஒரு இயற்கையின் செயல் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதே குருட்டாடமான எண்ணத்தில்தான் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றும் நம்புகிறார்கள் .

  2 நாளா  7:14ல் உள்ள வசனம், தாழ்மையினால் வரும் ஆசீர்வாதத்தை காண்பிக்கிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.”

 நாம் மேலே பார்த்த வசனத்திலும் இதைதான் பார்க்கிறோம். ரேகொபெயாம் ராஜா, தேவனுக்கு கீழ்படியாதவனாய், கட்டளையை மீறினவனாய் காணப்பட்டான். அதனால், இவர்களை அழிக்க தேவன் எகிப்தியர்களுக்கு கட்டளையிட்டார். ஆனாலும், ரெகொபெயாமும், அவனுடைய தலைவர்களும், தங்களை தாழ்த்தி மனம்திரும்பினபொழுது, தேவன் அந்த சூழ்நிலையை தலைகீழாக மாற்றிப்போட்டார்.

   நாம் உண்மையாகவே, ஒரு நீதியின் தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்று விசுவாசிக்கிறோமா? அவர் இவ்வாறான அழிவுகளை  அனுமதிக்கிறார் என்று நம்புகிறோமா? நம்முடைய தலைமுறை  அவரின் நியாயத்தீர்ப்புக்கு பாத்திரமாய் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ளுகிறோமா? இதை நாம் ஏற்றுக்கொண்டு, அவருக்கு முன்பு நம்மை தாழ்த்துவோம். விசுவாசிகளாய், இந்த சூழ்நிலையில் ஜெபத்திற்கும், உபவாசத்திற்கும், தாழ்மைபடுதலுக்கும் நம்முடைய நேரத்தை ஒதுக்குவோம். ஆண்டவர் நம்முடைய தலைமுறைமீது இரக்கம் கொள்ளலாம்.

 

இம்மானுவேல் எம் ஜெபத்தை கேளும்;

உம் தொடுதலை வாஞ்சிக்கிறோம்;

உடைப்பட்டவர்களாய் உம்மண்டை வருகிறோம்,

ஓ! இரட்சகரே! எம் ஜெபத்தை கேளும்,

எம், அற்பவிசுவாசத்தை அறிக்கையிடுகிறோம்,

உம் வார்த்தையே நம்புகிறோம்;

எம்மேல் இரக்கம் கொள்ள மாட்டிரோ?

அது உமக்கு தூரமாய் இருப்பதாக!

     – வில்லியம் கூப்பர் (1731-1800)

   

14

 கொரொனோ வைரஸை குறித்ததான நம்முடைய பிரதிபலிப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும்

       

 நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். (பிலி 2:14-16)

 

முகம் சுழிக்கும் சம்பவங்கள் நடக்கும்போது, நம்முடைய பெருமையானது, முறுமுறுக்கவும், மற்றவர்களோடு வாதாடவும் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையானது நியாயமில்லாதது போலவும், அதினால் எல்லாவற்றையும் குற்றசாட்டுகிறவர்களாய் இருக்கிறோம். மற்றவர்கள் முன்பு, நம்மில் இருக்கிற விரும்பத்தகாத சுபாவத்தை வெளிப்படுத்துகிறோம். இவ்வாறான நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில்தான் நம்முடைய மேலோட்டமான பக்தியை உலகுக்கு வெளிப்படுத்துகிறோம். இப்படி நாம் செய்யும்போது, நமக்கும், அவிசுவாசிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போகிறது.

 நம்முடைய முறுமுறுப்புக்கள் அநேகந்தடவை இவ்விதமாக இருக்கின்றன. “சீனாதான் இதை வேண்டுமென்றே செய்துவிட்டான்”,  “நம்முடைய அரசாங்கம் இந்த விஷயத்தில் எவ்வளவு மெதமெதப்பா இருக்குது”, “நம்முடைய பக்கத்து வீட்டுகாரர்கள் எல்லாம் அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள்.” “டாக்டர்களும், நர்ஸ்களும் கண்டுக்கிறதே இல்லை.” “நம்முடைய டிவி நியூஸ் காரர்களெல்லாம் உண்மையை சொல்றதே இல்லை.”  “கூட வேலை பார்க்கிறவர் ரொம்ப இருமிக்கிட்டே இருக்கிறார்.”

 விசுவாசிகளாய், இவ்விதமான வார்த்தைகள் எல்லாம், நம்முடைய வாயிலிருந்து வருமென்றால், நமக்குதான் பெருத்த அவமானம். கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நாட்களில், தேவ ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுகிறார் என்று உலகத்தார் பார்க்கிறவன்னமாக நம்முடைய பிரதிபலிப்பு காணப்படவேண்டும். ஆம், குற்றமற்றவர்களும் கபடற்ற தேவனுடைய பிள்ளைகளாய் நாம் இந்த உலகத்தாரை காட்டிலும் வித்தியாசமானவார்களாக காணப்பட வேண்டும். இப்படியான இக்கட்டான காலகட்டத்தில், நாம் தேவனை மகிமைப்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். நாம் இப்படி சிந்திப்போமானால், மற்றவர்கள் காட்ட தவறிய அக்கறையை நாம் காட்டுவதற்கு ஏதுவுள்ளவர்களாக இருப்போம்.  இங்கேதான் நம்முடைய அக்கம் பக்கத்தினர்  நம்மை பார்க்கும்போது, நம்முடைய வாழ்வில் உள்ள சந்தோஷத்தை காணமுடியும். ஆம், நிச்சயமாக, இந்த உலகத்தில் நம்மை வெளிச்சமாக்குகிற அந்த இரட்சகரை காண்பிக்க முடியும்.

 

எல்லாருக்கும் முன்பாக, எரிந்து பிரகாசிக்கிற

விளக்காக இருக்க இயேசுவானவர் கட்டளையிடுகிறார்:

 

எந்நேரமும் என் விளக்கு பிரகாசிக்கட்டும்,

அப்பொழுது என்னில் இரட்சகரை பார்த்து,

என் ஆண்டவரை அறிந்து கொள்ளட்டும்.

 

அனைவருக்கும் முன்பு என் வாழ்வு

காணப்படுவதினால், எந்நாளும்

விழிப்பாய் இருந்திடுவோம்.

 பெயர்தெரியாத எழுத்தாளர்.

 

 15

கொரோனோ வைரசே! உன்னுடைய கூர் எங்கே?

  

“இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;   உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” (யோவான் 11:25,26)

       

 கொரோனோ வைரஸ் என்பது ஏன் ஒரு பீதியை உலகமெங்கும் ஏற்படுத்துகிறது? ஏனென்றால், அதில் மரித்தவர்களின் எண்ணிக்கையினால்தான். ஒரு முழு தேசத்தையே ஒரு சில மாதங்களுக்குள்ளாய் முழுவதுமாக அழிப்பதை போன்று இருப்பதினால்தான் நாம் இதை குறித்து கலங்குகிறோம்.

 பாவத்தின் சம்பளம் மரணம். பயத்தின் உச்சம் மரணம். அதுவே நம்முடைய கடைசி சத்துரு. நம்முடைய நெருங்கிய உறவுகள் மரிக்கும் போது, நாம் ஏதும் செய்ய முடியாமல் இருக்கிறோம். அவர்கள் ஆறு அடி நிலத்திற்குள் புதைத்துவிட்டு, அவர்கள் இல்லாமலே, நம்முடைய எஞ்சிய வாழ்க்கையை கடத்திச்செல்ல கட்டாயப்படுத்துகிறோம். எவ்வளவு மோசமான ஒரு எதிரி – மரணம்!

 உயித்தெழுதல் மாத்திரமே நமக்கு நம்பிக்கை கொடுக்கிறதாய் இருக்கிறது. அது மாத்திரமே மரணத்தை வீழ்த்த வல்லமையாய் இருக்கிறது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரித்தார், ஆனாலும், மரணம் அவரை மேற்கொள்ளவில்லை. உயிர்த்தெழுதலின் காலை வந்த போது, அவர் மரண கட்டுகளை அவிழ்த்து எறிந்து, மறுபடியும் ஜீவனுள்ளவராய், சாவாமையுள்ளவராய் எழுந்தருளினார்.

 லாசருவை, உயிரோடு எழுப்பின அவர் அன்றைய தினமே, ‘நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.’ என்றார். இதுவே கிறிஸ்துவத்தின் மகிமையான நம்பிக்கை.

   ஆகவே, இன்றைக்கே கொரோனோ வைரஸை பார்த்து நாம், “கொரோனோ வைரசே! உன் கூர் எங்கே? ஓ கொரோனோ வைரசே! உன் ஜெயம் எங்கே? என்று கூறலாமே”. கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு, சகல துதி, கனம், மகிமையும் சேரட்டும். ஆமென்!

  

மரித்து அடக்கம் பண்ணப்பட்ட, என் இயேசு இரட்சகரே,

உம் வருகைக்காக, காத்துக்கொண்டிருக்கிறேன், என் இயேசு ஆண்டவரே!

 

அவர் உயிரோடு எழுந்தார்,

நரகை ஜெயித்து எழுந்தார்;

இருளை வெற்றி சிறந்தார்,

அவர் தம் பரிசுத்தவான்களோடு

என்றும் ஆளுகை செய்யவே,

எழுந்தார்! எழுந்தார்! அல்லேலுயா!

கிறிஸ்து எழுந்தார்!

 — ரோபர்ட் லௌரி (1826-1899)

 

16

 சுகமளிக்கும் கூட்டத்தார்  – விவாதிக்கப்படவேண்டிய பெரும் பிரச்சனை

 

  “அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.”  (லூக்கா 5:13)

 

        நான் இதை கூறுவதினால், சில பிரச்சனைகளுக்கு உள்ளாவேன் என்று அறிந்திருக்கிறேன். ஆனாலும், ஒரு மேய்ப்பனாய், என்னுடைய ஆடுகளுக்கு இதை என்னால் கூறாமல் இருக்க முடியாது. கொரோனோ வைரஸ் இருக்கும் வரை, இந்த  பெரும் பிரச்சனையை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த  சமீப காலங்களில், இயேசுவின் நாமத்தை பயன்படுத்தி, அநேகரை சுகப்படுத்துதல் என்ற ஊழியம், டி. வி யிலும், இண்டர்நெட்டிலும், அனேக விளம்பரங்களிலும் பிரஸ்தாபபடுத்தப்படுகிறது.

 கோவிட்- 19 என்ற இந்த காலத்தில், லட்சக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இவர்கள், அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். என்னவிதமான கிறிஸ்தவ அன்பு இது? இதுவே அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரத்தை உபயோகப்படுத்தி, உயிருக்கு போராடும் அநேகரை சுகப்படுத்த வேண்டிய நேரம் அல்லவா? இப்பொழுது அவர்கள் அமைதியாக இருப்பது சரியில்லையே!

    இயேசு ஆண்டவர், இவ்வுலகத்தில் இருந்தபொழுது குஷ்டரோகம் சுகப்படுத்த முடியாததாய், அதிகமாய் பரவக்கூடியதாய் இருந்தது. அவர்களை யாரும் தொட மாட்டார்கள். தனிமைபடுத்தப்பட்டு, ஊருக்கு வெளியே இருப்பார்கள். ஆசாரியர்கள் அவர்கள் குனமடைந்தார்களா என்று அவர்களை சோதித்து சொன்ன பின்னரே அவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இயேசுவோ, அவர்களை தொட்டு குணப்படுத்தினார்.

   அன்பு என்ற பெயரிலாவது, சுகப்படுத்தும் வல்லமை பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று கூறுபவர்கள், சென்று  கொரோனோ வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மாத்திரமே தங்கள் உயிரை பணயம் வைத்து, இந்த சூழ்நிலையில் போராடிகொண்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த கொரோனோ முடிந்த பிறகு, எனக்கு சுகம் அளிக்கும் வரம் உண்டு என்று கூறி மக்களை ஏமாற்றுகிறவர்கள் இனியாவது அடங்கட்டும்.

 “ தந்திரமான கொள்கைகள் அழியும்,

 வெளிச்சத்திற்கு பயப்படுகிறவர்கள் அழிவர்,

 ஆதாயமோ, இழப்போ,

 தேவனை நம்பி நன்மை செய்.

 

 சிலர் உன்னை வெறுப்பர், சிலர் உன்னை நேசிப்பர்,

 சிலர் உன்னை புகழுவர், சிலர் உன்னை தள்ளுவர்,

 மனுஷனை பார்க்காதே, கடவுளை நோக்கிப்பார்,

 தேவனை நம்பி நன்மை செய்.

         — நோர்மன் மக்லொட் (1812-1872)

 

17

கொரோனோ வைரஸ் அனுபவத்தை வீணடிக்காதீர்கள்

 

 பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.  (நீதி 21:11)

 

நீ ஒரு வேதத்தை அறிந்த விசுவாசியாய் இருப்பாயென்றால், உமக்கு தெரியும், ஆண்டவர் கொரோனோ வைரசைகொண்டு பீதியடைகிறவர் அல்ல. அவர் அதை நடக்கும்படியாக திட்டம் பண்ணினார். அப்படியில்லையென்றால் அது நடந்திருக்காது.

 நாம் முன்பு பார்த்த வண்ணமாக, வலி என்பது பாவத்தில் தூங்கி கொண்டிருக்கும் மக்களை எழுப்பி விடும் ஒலிபெருக்கியாக இருக்கிறது.   ஆராய்ந்து பார்க்க முடியாத வழியில், கடவுள், அழிவை கொண்டுவரும்படியான இந்த ஒரே ஒரு சம்பவத்தை கொண்டு, பலவிதமான பாடங்களை, பல்வேறு மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ஆம், இப்படியான வேளையில், நாம் அதிகமாய் உணர்த்தப்பட்ட வர்களாய், ‘கடவுள், இங்கே எனக்கு என்ன பாடத்தை கற்றுக்கொடுக்கிறார்? என்று கேள்வி எழுப்ப வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

 வருத்தமான விஷயம் என்னவென்றால், பரியாசக்காரர்கள், தேவனால் தண்டிக்கப்படும்போது அல்லது சிட்சிக்கும்போது, அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கின்றனர் என்று நீதிமொழிகள் புஸ்தகம் கூறுகிறது. பரியாசக்காரன் தண்டணை பெறும்போது, பேதைதான்  கற்றுக்கொண்டு ஞானமடைகிறான்.

 “மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.” என்று நீதிமொழிகள் 17:10 கூறுகிறது. ஆம், இந்த கொரோனோ வைரசினால் ஏற்பட்ட அழிவு, பொருளாதார சீர்குலைவு, சமூக விலகல், ஊரடங்கு, ஆலயங்கள் மூடப்படுதல், வேலை இழப்பு போன்றவைகளெல்லாம் நமக்கு கடிந்து கொள்ளுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

 இப்பொழுது, சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, உன்னை நீயே யோசித்து, இப்படியான கேள்வியை கேட்டுப்பார். “கோரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த வேளையில், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்னவிதமான, ஆழமான ஆவிக்குரிய பாடம் கற்றுக்கொண்டேன்?  அழிந்து போகும் உலகதில்மேல் இருக்கும் என்னுடைய ஆசையைவிட்டு இது என்னை விலகச்செய்திருக்கிறதா? முக்கியமாக இந்த காலகட்டத்தில், என்னுடைய ஜெப வாழ்க்கை மேலும் வளர்ந்திருக்கிறதா?  இந்த இக்கட்டான வேளை, இன்னும் என்னை ஆண்டவரோடு கிட்டி சேரும்படியாக செய்திருக்கிறதா?

 இன்றைக்கு எத்தனையோ பேர், பலவிதங்களில் இக்கட்டான வேளையை சந்தித்தாலும், இன்னுமாய் கனியற்றவர்களாய் வாழும்பொழுது, மிகுந்த வருத்தமாய் இருக்கிறது. தயவு செய்து, பல பாடங்களை கற்றுத்தரும் கொரோனோ வைரஸ் காலகட்டத்தை வீணடிக்காதீர்கள்.

 

பயமும், கலக்கமும் எழும்பும்போது,

உம் வழியை எனக்கு போதியும்,

வெள்ளம்போல் சீற்றங்கள் வரும்போது,

உம் வழியை எனக்கு போதியும்.

கவலையும், இன்னலும், வலியும்

மின்னலும்,காற்றும் கடந்து போகும்போதும்,

பிரகாசியும், என் வழியை தெளிவாக்கும்,

உம் வழியை எனக்கு போதியும்.

 — பெஞ்சமின் மன்செல் ராம்சே (1849-1923)

  

18

நீங்கள் மரிக்க ஆயத்தமா?

 

“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்…. தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.” (பிலி1:21,23)

 

இந்த கோவிட் -19 குறித்ததான போதக பார்வையில் ஒட்டுமொத்தமாக கேட்கவேண்டிய கேள்வி, “நீங்கள் மரிக்க ஆயத்தமா?” இன்னும் மூன்று மாதங்களில் மரித்தோர்களின் எண்ணிக்கை லட்சத்திற்கும் மேலே தாண்டும் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது, இந்த கேள்வி பலமாய் எழுப்பபடுகிறது. ஆம், இப்படியான கொடிய மரண வேளை எப்பவேண்டுமானாலும் நம்மை ஆட்கொள்ளும்.

 மரணம் எவர்களையும் ஆட்கொள்ளும். ஏழையோ, பணக்காரனோ. படித்தவனோ, படிக்காதவனோ. வாலிபனோ, வயதானவனோ. கிறிஸ்தவனோ, கிறிஸ்தவன் இல்லாதவனோ. எவர்களையும் சந்திக்கும். அதி நிச்சயமான ஒன்று என்னவென்றால் இயேசுகிறிஸ்துவின் வருகை முந்திகொள்ளாவிட்டால், நம்முடைய மரணம் முந்திக்கொள்ளும் என்பதே.

 இந்த நாட்களில், அனேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய மரண நாள் என்பது சீக்கிரமாக இருக்கலாம் என்று எண்ண விரும்பாதது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. நிச்சயமாக, அப்படிபட்டவர்கள், அப்.பவுலோடு சேர்ந்து சொல்ல இயலாது. “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்……….தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.”

 அதிக தொழில் நுட்பம்  நிறைந்த நாடுகளையே, கொரோனோ உலுக்கி கொண்டிருக்கும்போது, நீங்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்பதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மரிக்க ஆயத்தமா? நீங்கள் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவப்பட்டு, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதின் நிச்சயத்தைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது மாத்திரமே, இதற்குண்டான பதிலை உறுதியாய் சொல்ல முடியும்.

 உங்களுடைய சொந்த முயற்சியினால் அல்ல, கிறிஸ்துவின் இரட்சிக்கும்  கிருபையினாலே, நீங்கள் அந்த பரலோக மகிமைக்காக வாழும்போது மாத்திரமே, நீங்கள், ‘நான் மரிக்க ஆயத்தமாய் இருக்கிறேன்’ என்று சொல்ல முடியும். உங்களுடைய மனசாட்சியை ஏமாற்ற முடியாது. கொரோனோவினால் நிலவி வரும், இந்த இக்கட்டான சூழ்நிலையானது அனேக மாற்றங்களை உங்களுடைய வாழ்வில்  கொண்டு வந்து, இன்றைக்கே மரிக்க தயாரானவர்களாக உருவாக்கட்டும்.

 

நிலையான நகரம் இங்கில்லை,

இங்கு வருத்தம் சஞ்சலமே,

மேலான நகரம் நமக்குண்டு,

அங்கு இளைப்பாறுதல் சந்தோஷமே

 

நிலையான நகரம் இங்கில்லை,

நாம் ஒரு வழிபோக்கர்களே,

இவ்வுலகத்தில் இளைப்பாறுதல் இல்லை,

அம்மேலோகத்தையே நாடிடுவோமே.

  —  தொமஸ் கெல்லி (1769-1855)

 

19

கோவிட்-19 மத்தியில் ஒரு போதக ஜெபம்

 

“கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.” (ஆபகூக் 3:2).

 

நான் கோவிட்-19 குறித்ததான 19 போதகப்பார்வைகளை ஜெபத்தோடு முடிக்கிறேன். ஜெபிப்போம்:

 

மகிமை நிறைந்த எங்கள் பரம பிதாவே, அண்ட சராசரங்களையும் படைத்தவராய், அனைத்தையும் ஆளுகை செய்கிறவராய் இருக்கிற உம்மை வணங்குகிறோம். ஆயிரக்கணக்கான தேவ தூதர்கள் சூழ, சிங்காசனத்தில் வீற்றிருக்கிரீர். இந்த உலகலாவிய பிரச்சனை நிறைந்த சூழ்நிலையிலும், நீரே தேவன் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

 எங்கள் தேவனே, நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட மற்றும் சபையாருடைய பாவங்களை அறிக்கையிட்டு தாழ்த்துகிறோம். நாங்கள் உமக்கு கொடுக்க வேண்டிய கனமுள்ள ஆராதனையை,  பொழுதுபோக்காக மாற்றிவிட்டோம். உம்முடைய நீதியுள்ள நியாயப்பிரமாணத்தை எங்கள் காலின் கீழே மிதித்து போட்டோம். நாங்கள் சேர்த்து வைத்த பணத்தை, விக்கிரகமாக்கிகொண்டோம். கருவிலே வளருகிற குழந்தையை கொன்றுபோட்டோம்.

 ஆனாலும், நீர் மன்னிக்கிற தேவனாய் இருப்பதினால் உம்மை ஸ்தோதரிக்கிறோம். நீர் உம்முடைய சொந்த குமாரனை அனுப்பி, அவருடைய பாடுகள் மற்றும் மரணத்தின் மூலமாய் எங்களுடைய கொடிய பாவங்களை மன்னிக்க சித்தம் கொண்டீர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, அநேகருக்கு இந்த நற்செய்தியை அறிவிக்க எங்களுக்கு உதவி செய்யும்.

  “கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்” என்று ஆபகூக் ஜெபித்த வண்ணமாக, நாங்கள் எல்லா திசைகளிலும் இருந்து, உம்மிடத்தில் மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு தக்கதாக, எங்களை தண்டியாதிரும். அப்படி செய்வீரானால், இந்த உலகத்தில் உம்மை தொழுது கொள்ள ஒருவரும் இருக்க முடியாது.

 தேவனே, இவ்வுலகத்தில் நீர் எங்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு துன்பங்களானது, நித்திய நரக ஆக்கினைக்கு ஏதுவாக தண்டிக்கப்படாதபடிக்கு, நாங்கள் மனந்திரும்புவதற்கென்றே நீர் அனுமதிக்கிறீர். உம்முடைய ஆவியானவரைக்கொண்டு, துன்பப்படுகிறவர்களை தேற்றும், நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ள உதவி செய்யும். இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஒரு முடிவை கட்டளையிடும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்!

 

நாங்கள் உம்மை அறிய வேண்டிய விதத்தில் அறியாதவர்களாய்

உம்முடைய ஞானம், கிருபை, வல்லமையை கல்லாதவர்களாய்;

கடந்து போகும் உலக, அற்ப காரியத்தினாலும்

இருதயம் நிரப்பபட்ட  எங்களையும்

உம் வெளிச்சத்தின் சத்தியத்திலே நடத்தும்,

உம்மை அறிந்துக்கொண்ட ஞானிகளாய் மாற்றும்.

   —  தொமஸ்  பி பொல்லாக் (1836-1896).

   

ஆசிரியரைப்பற்றி:

 

பாஸ்டர்.கொன்ராட் ம்பெவே (Pastor. Conrad Mbewe) அவர்கள் 1987ம் ஆண்டு முதல் கப்வட்டா பாப்டிஸ்ட் சபையின் போதகராய் இருந்து வருகிறார். இவர் தென் ஆப்ரிக்கா, பிரிடோரியா பல்கலைகழகத்தின்  முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சாம்பியாவில் உள்ள ஆப்ரிக்க கிறித்தவ பல்கலைகழகத்தை தோற்றுவித்த வேந்தர் ஆவார். இவர் உலகமெங்கும் பல்வேறு இடங்களுக்கு சென்று கிருபையின் சத்தியத்தை போதித்து வருகிறார். இவர் பல்வேறு ஆக்கங்களை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

  

     

 

 

 

No Response to “கோவிட்-19 பற்றி 19 போதக பார்வைகள்”

Leave a Comment