யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்?

Published February 19, 2018 by adming in Pastor's Blog

 

யார்  ஆசீர்வதிக்கப்பட்டவன்?

இன்றைக்கு   பொதுவாக அநேகர் எண்ணுவது என்னவென்றால்,தான்  ஆசீர்வதிக்கப்பட்டவன்  என்று நினைக்கின்றனர். ஆனால், நம்முடைய வேதத்தில் மிக அழகாக யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்? என்று சொல்லப்படுவதை நாம் பார்க்கலாம். 32 ம் சங்கீதத்தை நாம் எடுத்துக்கொள்ளுவோம். இச்சங்கீதத்தின் தொடக்கத்தில் “மஸ்கீல்” என்ற எபிரேய பதத்தை பார்க்கலாம். அதாவது  தாவீதின் போதக சங்கீதம், அறிவுரை கூறும் சங்கீதம் என்று பொருள்படுகிறது. ஆம், நிச்சயமாக இச்சங்கீததின் மூலம் மிக உன்னதமான சத்தியத்தை கற்றுக்கொள்ளப்போகிறோம்.

பாக்கியவான்: முதல் இரண்டு வசனங்களில் “பாக்கியவான்” என்ற வார்த்தைகள் வருகிறதை நாம் பார்க்கலாம்.ஆங்கிலத்தில் “Blessed” என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. அதாவது “ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று அர்த்தம். யார் அந்த பாக்கியவான்? ஆம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனே பாக்கியவான். அங்கு பாருங்கள். ஒரு பாவியை எவ்வளவு பங்கரமான விதத்தில் சித்தரிக்கிறது. அந்த இரண்டு வசனங்களில், மூன்று விதமான பதங்களை நாம் பார்க்கலாம், எவனுடைய மீறுதல், எவனுடைய பாவம், எவனுடைய அக்கிரமம். இப்படிப்பட்ட கொடூரமான,துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற, தேவனுக்கு எதிராக காணப்படுகிற பாவியைதான், அந்த பரிசுத்த தேவன்தாமே கிறிஸ்துவின் மூலம்  மன்னிக்கிறார். தேவனுடைய மன்னிப்பை பெற்ற இவனே பாக்கியவான் என்று அழைக்கப்படுகிறான். இதை வாசிக்கிற நீ “பாக்கியவான்” என்று சொல்ல முடிகிறதா? இந்த ஆசீர்வாதத்தை பெற்ற மனுஷனாக இவ்வுலகத்தில் வாழ்கிறாயா? இவ்வுலகத்தில் அநேகர், இவ்வுலக ஆசீர்வாதங்களை கொண்டுள்ளனர்,ஏன்? அவர்கள் கிறிஸ்தவர்கள்கூட இருக்கலாம் ஆனால், தேவன் அருளும் இந்த முக்கிய ஆசீர்வாதத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லையென்றால், மேலே சொல்லப்பட்ட வண்ணமாக, அவர்கள் மீறுதல்,பாவம், அக்கிரமம் நிறைந்தவர்களாய், தேவனுக்கு எதிரானவர்களாய், பாவிகளாய், துன்மார்க்கமானவர்களாய் தேவனுடைய நீதியான தண்டனையாகிய நரக ஆக்கினையை அடைகிறவர்களாய் உள்ளனர். ஐயோ! இவ்விதமான கூட்டத்தில் நானும்  ஒருவனாய் இருக்கிறேனே என்று அங்கலாய்கிறாயா? இதிலிருந்து நான் தப்பிக்க வேண்டுமே என்று கலங்குகிறாயா? ஓ! இவ்விதமான உணர்வு உனக்குள் இருப்பது மிகவும் நல்லது. அருமையான சகோதரனே! சகோதிரியே! நீ, நீதான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை இதோ, சங்கீதக்காரன் கூறும் அறிவுரையை கேள்

ஆசீர்வாதத்தை அடைய, செய்ய வேண்டியது : வச 3 5, “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்றுநான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”  நாம்  நம்முடைய வாழ்க்கையில் பாவத்தை வைத்துக்கொண்டு நிம்மதியை பார்க்கவே முடியாது. அதைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம். ஒருவன் தன் பாவத்திலே வாழ்ந்து கொண்டிருப்பானென்றால், அவன் தேவ கோபத்தை அனுதினமும் சுமந்துகொண்டிருக்கிறான். அதினால்தான், “உம்முடைய கை பாரமயிருந்ததினால்” என்று சொல்லுகிறான். சங்கீதம் 38:1,6-9ம் வசனங்களிலும் நாம் பார்க்கலாம். பாவத்தை அடக்கி வைக்கிறதினாலோ, மறைக்கிறதினாலோ ஒருபோதும் ஆசீர்வாதத்தை பார்க்க முடியாது. இதைத்தான் நீதி 28:13 சொல்லுகிறது, “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்”. ஒருபோதும் சுகத்தையோ, சந்தோஷத்தையோ, நிம்மதியையோ பார்க்கவே முடியாது. நீ தேவனுடைய ஆசீர்வாதத்தை உன் வாழ்வில் பார்க்கவேண்டும் என்றால், நீ ஒன்றே ஒன்று மட்டும் செய்தால் போதும். நீ தேவனுக்கு முன்பாக உன்னை தாழ்த்த வேண்டும். உன்னில் இருக்கிற பெருமையை உடைத்துபோட்டு, உன் பாவத்தை ஒத்துக்கொண்டு “தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று தேவனை நோக்கி மன்றாடு.சங்கீதம் 41:4ம் வசனத்தில் தாவீது எப்படி ஜெபிக்கிறான் பாருங்கள். “கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவை குணமாக்கும்.” 32:5ம் வசனத்தில் இதைத்தான் நாம் பார்க்கிறோம். “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்.” நீதி 28:13ன் அடுத்த பகுதி இவ்விதமாக சொல்லுகிறது, “அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் எவனோ இரக்கம் பெறுவான்.” இதைத்தான் 1 யோவான் 1:8,9ல் நாம் பார்க்கிறோம். “நமக்கு பாவமில்லையென்போமானால்…….சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” இதுதான் மெய்யான மனந்திரும்புதல். எப்பொழுது நாம் உண்மையாகவே மனந்திரும்பி வருகிறோமோ, அப்பொழுது தேவன் நமது அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறார்.   வச. 5, “தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” என்று சங்கீதக்காரன் சொல்லுவது போல, நாமும் நிச்சயத்தோடு சொல்லலாம்.

   பெறும் ஆசீர்வாதம்: என்றைக்கு ஒரு பாவி, உண்மையாக மனந்திரும்பி, தேவனண்டை வருகிறானோ, அவன் தேவனுடைய மன்னிப்பை பெறுகிறான். மாத்திரமல்ல, அவன் ஒரு புதிய மனுஷனாக மாற்றப்படுகிறான். பாவ இருளில் மூழ்கி கிடந்த அவன், இன்றைக்கு வெளிச்சத்தில் வந்துவிட்டான். ஒருகாலத்தில் பிசாசின் பிள்ளையாக இருந்த அவன், இன்றைக்கு தேவனுடைய பிள்ளையாக மாற்றமடைந்துவிட்டான். 7ம் வசனத்தில், இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்று அனுபவிக்கிற மனுஷனாய், பிதாவானவர், தம்முடைய பிள்ளைக்கு பாதுகாப்பாய் செயல்படுவதை பார்க்கலாம். மாத்திரமல்ல, பிதாவானவர், தம்முடைய பிள்ளையை அனுதினமும் வழிநடத்துகிற ஆசானாய் இருப்பதை வசனம் 8 ல் நாம் பார்க்கலாம். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.” ஆஹா! என்ன ஒரு ஆசீர்வாதமான, பாக்கியமான வாழ்வு. இதை நீ பெற்று விட்டாயா? இல்லையேல்,  உன் துன்மார்க்கமான வாழ்வை விட்டு இப்பொழுதே மனதிரும்பு. ஆம், வசனம் 10 எவ்வளவு தெளிவாய் சொல்லுகிறது பார். “துன்மார்க்கனுக்கு அனேக வேதனைகளுண்டு, கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.”

No Response to “யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்?”

Leave a Comment