மூன்று முத்தான முத்துக்கள் – 7
நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், இயேசு ஆண்டவரை கொண்டவர்களாய், இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாய் இருப்போம் என்றால், பின்வரும் மூன்று முக்கியமான காரியங்களில் நாம் உடன் பங்காளர்களாய், அதாவது, அதோடு, நம்மை இணைத்துக்கொண்டு, அதில் நாம் பங்கு கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என்று வேதம் தெளிவாக போதிக்கிறது. ஆம், வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், யோவான், இதை தெளிவாக கூறுவதை நாம் பார்க்கலாம்.
“உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும், அவருடைய ராஜ்யத்திற்கும், அவருடைய பொறுமைக்கும், உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான்…….” (வெளி 1:9).
நாம் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும். இம்மூன்று காரியங்களும், இயேசுகிறிஸ்துவினிமித்தம், இயேசுவினால் வருகிற, இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற அம்சங்களாகும்.
முதலாவதாக, உபத்திரவம். ஆம், நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், உபத்திரவம், பிண்ணி பிணைந்து இணைக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. இவ்வசனத்தில், சொல்லப்பட்ட வண்ணமாக, இயேசு ஆண்டவருக்காக, நாம் பாடுகளும், உபத்திரவங்களும், சந்திக்கிற கிறிஸ்தவ வாழ்க்கையை கொண்டிருக்கிறோம். நம்முடைய வேதத்தில், பல்வேறு தேவப்பிள்ளைகளின் வாழ்க்கையிலும், ஆம், நமது ஆண்டவராகிய இயேசுவின் வாழ்வில் கூட உபத்திரவத்தின் பாதையில்தான் கடந்து வந்தார். மேலும், இது சம்பந்தமாக வேதத்திலிருந்து பல்வேறு வசனங்களை மேற்கோள் காட்டலாம். முக்கியமாக, பவுல் கூறுகிறார் “ சீஷருடைய மனதை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அனேக உபத்திரவங்களின் வழியாய், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.” (அப் 14:22). “இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.” (1 தெச 3:3). “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோ 3:12). மேலும், மற்றுமொரு அருமையான வசனத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பரலோகத்தில், ஆண்டவருக்கு முன்பு நிற்கும் தம்முடைய ஜனங்களை குறித்து இங்கே என்ன சொல்லப்படுகிறது பாருங்கள். “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான், ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்:…….” (வெளி7:13,14). இதிலிருந்து, நாம் பார்ப்பது, உபத்திரவம் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக மிக அவசியம். ஏனென்றால், உபத்திரவம் மட்டும் கிறிஸ்தவனில் இல்லையென்றால், அவன் கிறிஸ்துவுக்குள், வளர முடியாது, பரிசுத்த வாழ்க்கையில் எழும்பவும் முடியாது. ஆம், தாவிது, இப்படியாக எழுதுகிறார், “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால், உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.” (சங் 119:71). தொமஸ் ப்ரூக்ஸ் என்ற பரிசுத்தவான், இவ்விதமாக கூறுகிறார், “உபத்திரவங்கள், தங்க சாவியை போன்றது. அதைக்கொண்டு, தேவன், தம்முடைய வார்த்தையில் உள்ள அனேக, விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை, தம்முடைய பிள்ளைகளுக்கு திறந்து காண்பிக்கிறார்.”
இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய ராஜ்யத்திற்கு பங்காளியாய் இருக்கிறான். ஆம், இதை விட அவனுக்கு வேறு என்ன சிறப்பு வேண்டும். கிறிஸ்தவ வாழ்வின் நோக்கம், நம்பிக்கை, ஆதாரம், பிடிப்பு எல்லாமே தேவனுடைய ராஜ்ஜியம் மட்டுமே. இந்த உலக வாழ்வு ஒரு கிறிஸ்தவனுக்கு சீக்கிரம் மறைந்து விடும், அழிந்து விடும். அதினால்தான், ஒரு கிறிஸ்தவன், உபத்திரவம் அவனுடைய வாழ்வில், ஒரு அங்கமாய் இருந்தாலும், அதைக்கண்டு, அவன், ஒருநாளும் சோர்ந்துபோகிறதில்லை. ஏனென்றால், உபத்திரவங்கள், பாடுகள் கொண்ட இந்த உலக வாழ்வு மிக குறுகிய காலம் என்று உணர்ந்தவனாய், வரப்போகிற நித்தியமான வாழ்வு ஒன்று உண்டு என்று நிச்சயத்துடன் முன்னேறிச் செல்கிறவனாய் காணப்படுவான். பவுல், இவ்விதமாக கூறுகிறார், “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, கானப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது………………பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்த கூடாரத்திலே நாம் தவித்து நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் மிகவும் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாஇருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:17;5:1,2). அதினால்தான், ஒரு பக்தன் இவ்விதமாக பாடுகிறார், “பரலோகமே என் சொந்தமே நான் என்று காண்பேனோ”
மூன்றாவதாக, அவருடைய பொறுமை. அதாவது, கிறிஸ்துவின் பொறுமை. மூல மொழியில் நீடிய பொறுமை என்று சொல்லுகிறது. ஆம், கிறிஸ்தவனின் மிகப் பெரிய பொக்கிஷம் நீடிய பொறுமை. அதாவது, பாடுகள், உபத்திரவங்கள் மத்தியில் சகித்து, பொறுமையோடு கடந்து போவது மிக மிகஅவசியம். “உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்” ( ரோமர் 12:12) அப்பொழுதுதான், கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். நீடிய பொறுமை எங்கு இல்லையோ, அங்கு, அவனுடைய வாழ்வில் எல்லாம் நஷ்டமாகவே முடியும். அவனுடைய வாழ்க்கையில் முதிர்ச்சியை பார்க்க முடியாது. ஆண்டவருடைய ஆலோசனையை கேட்கும்படி, அவருடைய வார்த்தைக்கு அல்லது ஜெபத்திற்கு காத்திருக்கும்படியான தன்மையை பார்க்க முடியாது. ஒரு கிறிஸ்தவன் என்றால் நீடிய பொறுமைக்கு பங்காளியாய் இருக்கிறான். ஆம், ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமை. “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1 தீமோ 6:11). “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக் 1:4).
No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 7”