மூன்று முத்தான முத்துக்கள் – 9
கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவுக்குள் இருக்கிற நாம், காத்திருக்கிற ஜனங்கள். ஆம், பரலோக வாழ்வைப் பெற, அவருடைய இரக்கத்தினாலே வருகிற நித்தியமான வாழ்வைப் பெற, ஆவலோடு, எதிர்பார்த்து, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற ஜனங்கள்.
இப்படியாக, பொறுமையுடன் காத்துக்கொண்டிருக்கிற இந்த கிறிஸ்தவ வாழ்வில், மூன்று முத்தான முத்துக்களான அம்சங்களை நாம் கொண்டிருத்தல் மிக மிக அவசியம்.
“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.” (யூதா20,21)
முதலாவதாக, நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் காணப்படும் அடிப்படையான தேவை விசுவாசம் என்னும் நங்கூரம். இந்த விசுவாசம் சாதாரண விசுவாசம் அல்ல. Most Holy Faith – மகா பரிசுத்தமான விசுவாசம். இந்த விசுவாசம் ஜீவனுள்ள தேவன் பேரில் உள்ள விசுவாசம். இது ஒருகாலத்தில் காணப்படவில்லை. அவிசுவாசமான வாழ்க்கை மட்டும்தான் வைத்திருந்தோம். ஆனால், காத்திருக்கிறவர்களாகிய நாம், இப்பொழுதோ, பரலோக வாழ்வை சுதந்தரிக்க போகிறோம் என்ற விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டென்றும், அவரை தேடுகிறவர்களுக்கு, அவர் பலன் அளிக்கிறார் என்றும் விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். (எபி 12:6). மேலும், இவ்வனாந்திர வாழ்வில், அவர் எனக்கு போதுமானவர், என்னை வழிநடத்த அவர் சர்வ வல்லவராய் இருக்கிறார் என்று விசுவாசத்தோடு காத்திருக்கிறோம். இதுதான் மகா பரிசுத்தமான விசுவாசம். இதுவே ஆவியின் கனிகளில் ஒன்றான விசுவாசம். இப்படிப்பட்ட விசுவாசத்தை, நாம் கட்டி எழுப்ப வேண்டும் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறது. (building yourselves up in your most holy faith). ஆம், இப்படிப்பட்ட விசுவாசத்தில் நாம் மேலும், மேலும் வளர வேண்டும். அதாவது, நம்மில் எழும்புகிற அவிசுவாசத்தை ஒழித்துப்போட்டு, விசுவாசத்தில் வளருவதற்கு ஏதுவான வாழ்வில் அதிகதிகமாய் எழும்ப வேண்டும். ஏனென்றால், இப்படிப்பட்ட மகா பரிசுத்தமான விசுவாசத்தை, நாம் சம்பாதிக்கவில்லை. இது கர்த்தர் கொடுத்த விலையேறப்பெற்ற பரிசு (1 பேதுரு 1: 7; எபே 2:8).
இப்படிப்பட்ட மகா பரிசுத்தமான விசுவாசத்தில், மேலும், மேலும் நாம் வளர வேண்டுமென்றால், இரண்டாவது முக்கியமான ஒன்றில் நாம் காணப்பட வேண்டும். அதுவே, “பரிசுத்த ஆவிக்குள் ஜெபித்தல்”. இதை அநேகர் தவறாக விளங்கிக்கொள்ளுகின்றனர். பரிசுத்த ஆவிக்குள் ஜெபிப்பது என்றால், அந்நிய பாஷை பேசி, கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவது அல்ல. நம்முடைய மகா பரிசுத்தமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுவதற்கு, ஜெபம் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ஆக, ஜெபிக்காத கிறிஸ்தவன் கிறிஸ்தவனே அல்ல. ஏனென்றால், கர்த்தர் கொடுத்திருக்கிற விசுவாசம் மகா பரிசுத்தமான விசுவாசம். அதை நாம் எவ்வளவாய் கட்டி காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான், நாம் அதிகமாய் தொடர்ந்து, விடாப்பிடியாய், ஜெபிக்கிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையினாலும் பிரசன்னத்தினாலும் நிரப்பப்பட்டு, தேவன் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டு, ஊக்கமாய் ஜெபத்தில் முன்னேறுகிறவர்களாய் காணப்பட வேண்டும். இதினால், நம் விசுவாச வாழ்க்கை பெரிதான விதத்தில் கட்டப்படுகிறது. மறுபக்கம் நம் ஜெப வாழ்க்கையும் கட்டப்படுகிறது. வரலாற்றை நாம் திரும்பி பார்ப்போமென்றால், அனேக ஊழியர்கள் வல்லமையாய் எழும்பபட்டதற்கு ஒரே காரணம், அவர்கள் ஜெப வீரர்களாய் காணப்பட்டனர். ஆகவே, நாம் வெறும் வழக்கமாக, ஜெபித்துக் கொண்டிருக்காதப்படி, நாம் ஏறெடுக்கும் ஜெபம் அர்த்தமுள்ளதாயும், ஊக்கமுள்ளதாயும், தொடர்ந்து, விடாப்பிடியாய் யாக்கோபைப் போல போராடி ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியின் நிரப்புதலை நம்முடைய ஜெபத்தில் நாம் காணலாம்.
மூன்றாவதாக, நம்முடைய விசுவாசத்தில், ஜெபத்தில் முன்னேறுவதற்கு பெரிய தூண்டுதலாய் இருப்பது தேவன் நம்மேல் காட்டின மிகப்பெரிதான அன்பு. நாம் அனுதினமும் இப்படிப்பட்ட அன்பை நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். ஆம், நாம் ஒருகாலத்தில், அவருடைய அன்பை பெற தகுதியற்றவர்களாய், அவருக்கு எதிரானவர்களாய், சத்ருக்களாய் காணப்பட்டோம். இப்படிப்பட்ட வேளையில்தான், தேவன்தாமே அவருடைய அளவற்ற, சுயநலமற்ற அன்பை நம்மேல் பொழிந்தருளினார். ஆம், நம்முடைய பாவத்தை அவர் மேல் ஏற்றுக்கொண்டு, நம்மை விடுவித்த அன்பு. நம்முடைய கொடிய பாவத்தை மன்னித்த அன்பு. நம்மை சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அன்பு. என்றென்றும் நம்மை கைவிடாத அன்பு. ஆகவே, எத்தனை போராட்டங்கள், சோதனைகள், பாடுகள், இழப்புக்கள், துன்பங்கள் வந்தாலும், அப். பவுலோடுகூட நாம் தைரியமாய் சொல்லலாம். “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:36-39)
No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 9”