மூன்று முத்தான முத்துக்கள் – 6.
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். (நீதி 21:21).
இங்கு நாம் ஒரு மனிதனை பார்க்கலாம். அவன் யார்? அவன் பெயர் என்ன? ஆம், அவன் பெயர் “பின்பற்றுகிறவன்” ஆம், மூல பாஷையில், ஒரே நோக்கத்தோடு, உறுதியான மனதோடு பின்தொடருகிறவன் என்று சொல்லுகிறது. யாரை பின்பற்றுகிறான்? ஆம், நீதியையும், தயையும் பின்பற்றுகிறான். அதாவது, நீதியையும், இரக்கத்தையும் கொண்ட கடவுளை பின்பற்றுகிறான். ஆம், அவர் நீதியுள்ள தேவன். “கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்” (சங் 11:7). கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். (சங் 119:137). அவர் மகா நீதிபரர்(யோபு 37:23). இது மாத்திரமல்ல, அவர் இரக்கமுள்ள தேவன். “அவருடைய இரக்கங்கள் மகா பெரியது.” (1 நாளா 21:13). “நீர் கிருபையும் இரக்கமுள்ள தேவன்.” (நெகே 9:31) “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்…” (எபே 2:4). இப்படிப்பட்ட, நீதியும், இரக்கமுள்ள தேவனை பின்தொடருகிறவனாய் இருக்கிறான்.
எப்படியாக பின்தொடருகிறான்? “பின்பற்றுகிறவன்” தன்னை முற்றிலுமாக தாழ்த்தி, தான் ஒரு பாவி என்று உணர்ந்து, தான் ஒரு அநீதி நிறைந்தவன், துன்மார்க்கன், என்று உணர்ந்து, தேவனுடைய நீதியையும், இரக்கத்தையும் பெறும்படியாக, அத்தேவனை பின்தொடர்கிறவனாய் இருக்கிறான். இப்படியாக பின்பற்றுகிறவனுடைய வாழ்வில், அவன் அடையும்படியான இரட்சிப்பில், அந்த இரட்சிப்பின் பலனாகிய மூன்று முத்தான முத்துக்களை கண்டடைகிறான்.
முதலாவதாக: ஒரு பாவியானவன், இயேசுவின் மூலம் வரும் பாவமன்னிப்பை கிருபையாய் பெற்றுக்கொள்ளும்போது,இவ்வசனத்தின் அடிப்படையில் பார்ப்போம் என்றால், அவன் பெறுகிற முதல் முத்தாகிய பலன் “ஜீவன்” அதாவது வாழ்வு. பாவத்தில் மரித்துப்போன அவனுடைய ஆத்துமா, மனந்திரும்பும்பொழுது உயிர்ப்பிக்கப்படுகிறது. இதைத்தான், பவுல் அப்போஸ்தலன் எபேசு சபை கிறிஸ்தவர்களை பார்த்து எழுதுகிறார், “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” (எபேசி 2:4,5). ஆம், இயேசுவை கொண்ட வாழ்க்கை, ஜீவனுள்ள வாழ்க்கை. 1 யோவான் 5:12 சொல்லுகிறது, “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்” என்று சொல்லுகிறது. பாவத்திற்கு அடிமையாய், நடைபிணமாய், நொந்து, நசிந்து, விடுதலையற்றவனாய் ஒருகாலத்தில் வாழ்ந்த அவனுடைய வாழ்வில், இன்றைக்கு அவன், பாவம் மன்னிக்கப்பட்ட மனுஷனாக, பாவத்தை மேற்கொள்ளும் வெற்றியுள்ள மனுஷனாக, சந்தோஷம் நிறைந்த மனுஷனாக, நிம்மதியை பெற்ற மனுஷனாக, கிறிஸ்துவை கொண்ட, ஜீவனுள்ள வாழ்க்கையை வாழுகிறான். ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, யோவான் 10:10 ல் “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” என்று சொல்லுகிறார். இங்கு, திருடன் என்ற பதம் பிசாசை குறிக்கிறது. பிசாசு எப்பொழுதும், ஒரு ஆத்துமாவை, கொல்லவும், அழிக்கவுமே அவனுடைய நோக்கம் ஆகும். ஆனால், இயேசுவானவர், இந்த உலகத்திற்கு வந்த நோக்கம், அவைகளுக்கு ஜீவன், வாழ்வு கொடுக்கவும், அது பரிபூரனப்படவுமே வந்தார்.
இரண்டாவதாக: இந்த ஜீவனை பெற்ற அவன், ஆம், கிறிஸ்துவுக்குள், ஜீவனை பெற்ற அவன், இரண்டாவது முத்தான, ‘நீதியை’ பெற்றவனாய் இருக்கிறான். ஆம், கிறிஸ்துவுக்குள், அவன் நீதிமானாக காணப்படுகிறான். அப் 13:39 இவ்விதமாக சொல்லுகிறது, “விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.” ஆம், ஒருகாலத்தில், கிறிஸ்துவுக்குள் வருவதற்கு முன்பு, நாம் மேலே பார்த்த நீதியுள்ள, அந்த நியாயாதிபதிக்கு முன்பாக, பாவத்தின் பிடியில் குற்றவாளியாய் காணப்பட்ட அவனுடைய வாழ்விலே, கிறிஸ்துவின்மேல் வைத்த விசுவாசம், அவனை நீதிமானக்கிற்று. ரோமர் 3:25 இவ்விதமாக “தேவன்….. தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி….”என்று சொல்லுகிறது. ஆகவே, தேவனுடைய நீதியையும், இரக்கத்தையையும் பின்பற்றுகிறவன், கிறிஸ்துவின் மூலமாய் ஜீவனையும், நீதியையும் பெறுகிறான்.
மூன்றாவதாக: எவன் ஒருவன் தன்னை தாழ்த்தி, தான் ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய நீதியையும், இரக்கத்தையையும் சார்ந்து, மனந்திரும்பி வரும்பொழுது, அவன் கிறிஸ்துவின் மூலமாய் ஜீவனையும், நீதியையும் கண்டுக்கொள்ளுவதுமல்லாமல், மற்றுமொரு அதிமுக்கிய, விலையேறப்பெற்ற மூன்றாவது முத்தாகிய “மகிமையை” கண்டுக்கொள்ளுகிறான். இங்கு மகிமை என்ற பதம் கனம் என்று சொல்லுகிறது. இன்னும் சொல்லப்போனால், மகிமை, என்ற சொல் பரலோகத்தை குறிக்கிறது. ஆம், தேவனுடைய நீதியையும், இரக்கத்தையையும், ஒரே நோக்கத்தோடு பின்பற்றி வந்தவனுக்கு இதைவிட வேறு என்ன கனம். ஆம், பாவத்திற்கு மரித்து போன அவன், கிறிஸ்துவினாலே, ஜீவனை பெற்றுக்கொளுகிறான். கிறிஸ்துவினாலே, நீதிமானாக்கப்படுகிறான். கிறிஸ்துவினாலே மகிமை என்கிற பரலோக வாழ்வை பெற்றுக்கொள்ளுகிறான். அப்.பவுல் இவ்விதமாக கூறுகிறார், “எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” (ரோமர்8:30). “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி…” (2தீமோ 2:10).
ஆகவே, ஒருவன், தன்னுடைய பாவ இருதயத்தை குறித்து உணர்ந்து, தான் இரட்சிக்கப்பட, தேவனுடைய நீதி மற்றும் இரக்கமுமேயன்றி வேறொன்றுமில்லை என்று உணர்ந்து தேவனுடைய நீதியையும், இரக்கத்தையையும் மட்டுமே சார்ந்து, தன்னை முற்றிலுமாக தாழ்த்தி, கிறிஸ்து இயேசுவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு என்று விசுவாசித்து, மனந்திரும்பி வரும்பொழுது, கிறிஸ்துவினாலே, அவன் மூன்று முத்தான ஜீவன், நீதி, மற்றும் மகிமையை கண்டுக்கொள்ளுகிறான். இதை படிக்கிற நீ இந்த மூன்று முத்தான முத்துக்களை உன் வாழ்வில் கண்டுகொண்டாயா? இல்லையேல், இப்பொழுதே மனந்திரும்பி, கிறிஸ்துவின் மூலமாய் வருகிற இந்த நித்தியமான பலனை கண்டுக்கொள்.
No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 6.”