மூன்று முத்தான முத்துக்கள் -5

Published April 27, 2019 by adming in Pastor's Blog

மூன்று முத்தான முத்துக்கள் – 5

   கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு. (சங்கீதம் 37:3,5,7).

   இன்றைக்கு உலகம் பல்வேறு வகையில் தாறுமாறாக  போய்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆம், பல்வேறு பேரழிவுகளையும், தீவிரவாத கும்பலினால் ஒரு நாட்டையே உலுக்கும் வண்ணமாக, வெடி வைத்து தகர்ப்பதும், அதினால் அநேகர் மாண்டுப்போவதும், ஒரு பக்கம், பாவத்தின் ஆதிக்கத்தினால், உலகம் இன்னுமாய் சீரழிவுகளை சந்தித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். மேலும், பொல்லாதவர்கள், அநீதிக்காரர்கள், நியாயக்கேடு செய்கிறவர்கள் நிறைந்த இவ்வுலகத்தில், ஒரு கிறிஸ்தவன் சமாதானத்துடன், பயமில்லாமல் சந்தோஷமாய் கடந்து போக, அவன் அறிந்துக்கொள்ள வேண்டியது இந்த மூன்று முத்தான முத்துக்கள். அது என்னவென்று சங்கீதம் 37: 3,5,7 வசனங்களில் நாம் பார்க்கலாம். 

   முதலாவது (வச. 3) – TRUST கர்த்தரை நம்பு, Trust in the Lord. நாம் மேலே பார்த்த இந்த சூழ்நிலையில் மத்தியில் வாழுகிற கிறிஸ்தவன் அறிந்து கொள்ள வேண்டிய முதலாவது காரியம் கர்த்தரை நம்புதல் மிக மிக அவசியம். ஏனென்றால், நம்முடைய சூழ்நிலைகள், காலங்கள், நண்பர்கள் எல்லாம் மாறிவிடும். ஆனால், மாறாத கர்த்தர் நமக்கு உண்டு என்பதை நாம் எப்பொழுதும் அறிந்திருத்தல் அவசியம். நம்முடைய கர்த்தர் “ இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்” (எபி 13:8), “நான் கர்த்தர், நான் மாறாதவர்” (மல்கியா 3:6) என்று சொல்லியிருக்கிறார். ஆகையால், முதலாவது, இப்படிப்பட்ட மாறாத கர்த்தரை நம்புவோம். என்றைக்கு நம்முடைய ஆண்டவர் மேல் நம்பிக்கை இல்லையோ, அந்த வாழ்க்கை துக்ககரமான வாழ்வாகும். அங்கு பயமும், பீதியும்,கவலையும் மிஞ்சியிருக்கும். ஆனால், ஒரு கிறிஸ்தவன், கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைக்கும்போது எதற்கும் பயப்பட மாட்டான். பின்வரும் வசனங்கள் கூறுவதை நாம் பார்க்கலாம். “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.”(சங்கீதம் 112:7). “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” (ஏசாயா 26:3,4)

   அதுமாத்திரமல்ல, “கர்த்தரை நம்பி நன்மை செய்” என்று சொல்லுகிறது. அவன் கர்த்தரை நம்பி, நன்மை செய்கிற மனுஷனாய் காணப்படுவான். ஆம், அவன், கர்த்தர் வைத்திருக்கிற  பொறுப்புக்களை உணர்ந்து நன்மையானவைகளை செய்வான். ஆம்,  இவ்வுலகத்தில், பொல்லாதவர்கள், அநியாயம் செய்கிறவர்கள்(வச.1) எப்போதும் உண்டு. ஒருவேளை, அவர்கள் நன்கு செழிக்கலாம், வாழலாம், அவர்களின் ஐசுவரியம் விருத்தியடையலாம். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ஒரு கிறிஸ்தவன் சோர்ந்து போக தேவையில்லை. அப்படிப்பட்டவர்களின் முடிவு, வச.2ல் தெளிவாக சொல்லுகிறது. ஆகவே, நாம் மிகுந்த விழிப்புள்ளவர்களாய், முதலாவது, அந்த மாறாத கர்த்தரை மட்டுமே நம்பி, நன்மைகளை செய்வோம்.

   இரண்டாவதாக (வச,5) COMMIT “உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவி” “Commit thy way unto the Lord”  உன் வாழ்வில் காணப்பட வேண்டிய, இரண்டாவது காரியம் – கர்த்தரை நம்புதல் மாத்திரமல்ல, ஒப்புக்கொடுத்தல் மிக மிக அவசியம். அதாவது, உன் சுய வழியை, சொந்த வழியை விட்டு விட்டு, ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். என்றைக்கு நீ அந்த மாறாத கர்த்தரை நம்பி வாழ ஆரம்பித்து விட்டாயோ, அந்த நாள் முதற்கொண்டு உலக வழியின்படியோ, உன் சுய வழியின்படியோ செல்லாமல், ஆண்டவரின் சித்தம் கேட்டு, செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். இதுவே, அவர் ஒருவருக்கே ஒப்புக்கொடுத்து வாழ்வதின் சாராம்சம். இதைத்தான் சாலோமோன் ஞானி எவ்வளவு அழகாக அறிவுரை கூறுகிறார் பாருங்கள் “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதி3:5,6). இந்த அருமையான ஒப்புக்கொடுத்தல் என்ற தன்மையே, மிகுந்த ஆசீர்வாதத்தின் வழியை அமைத்துக்கொடுக்கிறதாய் இருக்கிறது. இந்த ஐந்தாம் வசனத்தின் பின் பகுதியிலே நாம் பார்க்கலாம் – “அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுகிறவர்.” ஆகவே உன்னுடைய சுயத்தை சார்ந்துக்கொள்ள ஒருபோதும் துணிகரம் கொள்ளாதே.

   மூன்றாவதாக, (வச 7) REST “அவரை நோக்கி அமர்ந்திரு” “Rest in the Lord” மூன்றாவது முக்கியமான அம்சம் என்ன வென்றால், அந்த மாறாத தேவனை நம்பி, அவருக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்து வாழுவதில், நீ செய்ய வேண்டிய முக்கிய அம்சம் என்ன தெரியுமா? இதைக் குறித்து மூல பாஷையில் “அமைதியாயிரு” என்று சொல்லுகிறது. ஆம்! உன் ஆவிக்குரிய வாழ்வில், உன்னுடைய சூழ்நிலைகள் எவ்விதமாக இருந்தாலும், போராட்டமும், கலக்கமும்,பயமும், அவிசுவாசமும், சாத்தானுடைய எதிர்ப்புகள் பல எதிர்த்து வந்தாலும், அந்த மாறாத தேவனை நம்பி, அவருக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்த வாழ்வில் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று – “அமைதியாய் இரு”. ஆம், தடுமாறாதே, பதஷ்டப்படாதே, எரிச்சலடையாதே, அவிசுவாசமாயிராதே. இவ்வசனத்தின் பின் பகுதி சொல்லுகிறது, “காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே” அவ்வசனத்தில் “காத்திரு” என்று சொல்லுகிறது. அதாவது, ஆங்கிலத்தில் பொறுமையுடன் காத்திரு என்று சொல்லுகிறது. ஆம் தேவனுடைய சமூகத்திற்கு சென்று காத்திரு.ஜெபத்திற்கு போ. விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசாயா 28:16) என்று வேதம் சொல்லுகிறது. ஏசாயா 30:15ல் “அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாய் இருக்கும்” என்று சொல்லுகிறது. ஆம், உன்னுடைய அமைதியான வேளையில்தான், தேவன் தம்முடைய வல்லமையான கிரியையை நடப்பிக்கலாம் என்பதை மறந்து விடாதே.

   ஆகவே, உன்னுடைய வாழ்வில், இந்த மூன்று முத்தான முத்துக்களை கொண்டிருக்கும் பொழுது, தேவனுடைய மேலான ஆசீர்வாதத்தை நீ காணலாம்.

No Response to “மூன்று முத்தான முத்துக்கள் -5”

Leave a Comment