மூன்று முத்தான முத்துக்கள் – 4

Published March 25, 2019 by adming in Pastor's Blog

 

“அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.”  (சங் 4:7,8)

சங்கீதம் 4: 7,8ம் வசனங்களில், ஒரு இரட்சிக்கப்பட்ட, கிறிஸ்தவனுடைய வாழ்வில் காணப்படும் மூன்று முத்தான முத்துக்களை நாம் பார்க்கிறோம். ஆம், இங்கு, தாவீது, தான் இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பேசுகிறார். இன்றைக்கு நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லுவாயானால், தாவீது கொண்டிருக்கிற மூன்று முத்தான முத்துக்களை கொண்டிருப்பது மிக அவசியம்.

முதலாவதுசந்தோஷம் வச 7 “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும்,…… இங்கு தாவீது ‘அவர்கள்’ என்று யாரை ஒப்பிட்டு பேசுகிறார். துன்மார்க்கமான மக்கள், இரட்சிக்கப்படாத மக்கள். ஆம், இவர்களுடைய வாழ்விலும் சந்தோஷம் இருக்கிறது. எப்பொழுது? “தானியமும், திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷம்.” இரட்சிக்கப்படாத மனுஷனுடைய வாழ்வில், ஒருவேளை, பணம் நிறைய வைத்திருக்கலாம், தனக்கென்று சொத்து, நகை, ஆடம்பரம்  போன்றவற்றை சேகரிக்கலாம், பெருக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக பெருக்கத்தின் மூலம் வரும் சந்தோஷம் எம்மாத்திரம், எத்தனை நாட்களுக்கு? பார்த்தீர்களா? இவர்களுடைய வாழ்வில் சந்தோஷத்தை கொடுக்கிற அத்தனையும் நிலையற்றவை, கடவுளற்றவை. ஆக, அந்த சந்தோஷம் நீடிக்குமா? “துன்மார்கனின்  கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும்.” (யோபு 20:4). அதினால்தான், தாவீது சொன்னார், அந்த சந்தோஷத்தை பார்க்கிலும், ‘அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்’ இது என்னவிதமான சந்தோஷம்? ஆம், இரட்சிப்பின் சந்தோஷம், ஆம், ஒரு இரட்சிக்கப்பட்டவன், இந்த கடந்து போகிற உலக நன்மைகளை பெற்று அனுபவிக்கிற சந்தோஷத்தைக் காட்டிலும், அதிக சந்தோஷத்தை தன் இருதயத்தில் பெற்றவனாய் இருக்கிறான். ஏனென்றால், அது, தன் வாழ்நாளில், முதன்முறையாக, கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை கண்ட சந்தோஷம், அவர் மூலமாக இரட்சிக்கப்பட்டதின் சந்தோஷம், மாத்திரமல்ல, இரட்சிக்கப்பட்டதின் விளைவாக, பரலோகத்தை சுதந்தரிக்கும் சந்தோஷம். என்ன ஒரு மகத்தான, அதிகமான சந்தோஷம் பார்த்தீர்களா? ஓ! இதை படிக்கிற எனக்கு அருமையான சகோதரனே! சகோதரியே! இந்த சந்தோஷத்தை பெற்ற பாக்கியம் உங்களுக்கு இருக்கிறதா?

இரண்டாவதாக – சமாதானம் வச 8ல், ‘சமாதானத்தோடு படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்’ இன்றைக்கு அநேகர், சமாதானத்தோடு, தூங்க முடியாதவர்களாய், எத்தனையோ இரவை கழிக்கிறவர்களாய் உள்ளனர்.     ஆம், இரட்சிக்கப்படாத மனுஷனுடைய வாழ்வில், சமாதானத்தை பார்க்க முடியாது. ஏனென்றால், அவன் பாவத்தில் மரித்தவனாய் இருப்பதினால், பாவத்திற்கு அடிமையாய் இருப்பதினால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கடவுளாக, சொந்த இரட்சகராக, ஏற்றுக்கொள்ளாததினால், அவனில் உண்மையான சந்தோஷமும் இல்லை, சமாதானமும் இல்லை. ‘துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லை’ (ஏசாயா 48:22). ஆனால், இரட்சிக்கப்பட்டவனுடைய வாழ்வில், அவன், அதிக சந்தோஷம் மாத்திரமல்ல, சமாதானத்தை பெற்றவனாய் இருக்கிறான். இது எப்படி சாத்தியமாகிறது? ஆம், என்றைக்கு இரட்சிக்கப்பட்டானோ, அந்நாள் முதல், அவன், தன்னையும், தனக்கடுத்த காரியத்தையும், தன்னை இரட்சித்த ஆண்டவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறவனாய், எது நடந்தாலும், அவர் சித்தமில்லாமல், அவருடைய அனுமதியில்லாமல் நடக்காது என்று அறிந்தவனாய், ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’ (ரோமர் 8:28) என்ற சத்தியத்தை தெளிவாய் அறிந்திருக்கிறான். ஆகவே, ஒவ்வொரு காரியத்திலும் சமாதானத்தோடு கடந்து போகிறான். ஆம், இதுவே, இயேசு ஆண்டவர், கொடுக்கிற சமாதானம். (யோவான் 14:27) இதைப்படிக்கிற நீ உன் வாழ்வில் இந்த பெரிதான சமாதானத்தை பெற்றிருக்கிறாயா?

மூன்றாவதாக – பாதுகாப்பு. ஒரு இரட்சிக்கப்பட்டவனுடைய வாழ்வில், சந்தோஷம், சமாதானம் மாத்திரமல்ல ‘பாதுகாப்பு’ என்ற ஆசீர்வாதத்தை பெறுகிறான். இதை நாம் 8ம் வசனத்தின் பின் பகுதியில் பார்க்கலாம். ‘கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.’ ஆங்கிலத்தில்  ‘safety’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வில், பாதுகாப்பு என்று, இவ்வுலகில் பார்க்க முடியாது. ஏனென்றால், ‘உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்’ (1யோவான் 5:19) என்று வேதம் சொல்லுகிறது. அவனுடைய பாதுகாப்பு தேவனில், தேவனுக்குள், தேவனால் மாத்திரமே. ஆகவேதான்,   91 ம் சங்கீதம் முழுவதும், ஒரு இரட்சிக்கப்பட்டவன், ‘உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன்’ என்று சொல்லுகிறது. ‘நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்’ என்று சங்கீதம் 61:3 சொல்லுகிறது. மேலும் ‘உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னை காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர்; உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே  வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவை காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங்காப்பார்.’ இவ்விதமாக சங்கீதம் 121:3-8 ம் வசனம் வரை நாம் பார்க்கும் பொழுது, எவ்வளவாய் தேவன் தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வழிநடத்துகிறவராய் இருக்கிறார் நாம் அறிந்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ‘பாதுகாப்பு’ இரட்சிக்கப்பட்ட, தேவனுடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே என்று அறிந்துக் கொள்ளலாம். இன்றைக்கு நீ இவ்விதமான தேவனுடைய உன்னதமான பாதுகாப்பை பெற்றிருக்கிறாயா? இந்த மூன்று முத்தான முத்துக்களை பெற்ற மனுஷனாய், மனுஷியாய் இவ்வுலகத்தில் வாழ்கிறாயா? ஆராய்ந்து பார். இல்லையேல், இன்றே ஆண்டவருடைய சமூகத்தில் உன்னை நீயே தாழ்த்தி மனந்திரும்பு.

 

 

No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 4”

Leave a Comment