மூன்று முத்தான முத்துக்கள் – 3
மூன்று முத்தான முத்துக்கள் – 3
நாம் 31 ம் சங்கீதத்தில் மூன்று முக்கியமான அம்சங்களை பார்க்க இருக்கிறோம். இதுவே, நம் ஆவிக்குரிய வாழ்வில் காணப்படவேண்டிய மூன்று முத்தான முத்துக்களாக உள்ளன.
முதலாவதாக, பயப்படுகிற இருதயம் (வச.19.) “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! இவ்வசனத்தில் முக்கியமாக “மிகுந்த நன்மைகளை குவித்து அல்லது சேகரித்து வைத்திருக்கிறார்” என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறது. ஆம், அளவில்லா நன்மைகள், எண்ணற்ற நன்மைகள் சேகரித்து/ குவித்து வைத்திருக்கிறார். இத்தனையும் யாருக்கு? ஆம், தெய்வ பயத்தைகொண்டிருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்கு. ஆம், பின்வரும் வசனங்களை நாம் பார்க்கும்போது வேதம் எவ்வளவு உண்மையுள்ளதாய் இருக்கிறது. தேவனுக்கு பயப்படுகிறவன் 1). தேவனுடைய வழியை கற்றுக்கொள்ளுகிறான் – சங் 25:12, 2). தேவனுடைய இரகசியத்தை கற்றுக்கொள்ளுகிறான் – சங் 25:14. 3. பாதுகாப்பு -சங் 34:7. 4). குறைவில்லை – சங் 34:9. 5). பெரிதான கிருபை – சங் 103:11. 6). தேவனுடைய இரக்கம் – சங் 103:13. 7). பாக்கியவான் – சங் 112:1, நீதி 28:14. 8). விருப்பம் நிறைவேறுதல் – சங் 145:19. 9). ஆண்டவருக்கு பிரியம் – சங் 147:11 10). பலனடைதல் – நீதி 13:13. 11). ஞானத்தை போதிக்கும்.- நீதி 15:33. 12). நன்றாயிருப்பார்கள் -பிரசங்கி 8:12. 13). ஆரோக்கியம் இருக்கும் – மல்கியா 4:2. அடேங்கப்பா! தெய்வ பயமுள்ள மனுஷனுக்கு எத்தனை ஆசீர்வாதங்கள்! எத்தனை ஆசீர்வாதமான வாழ்வு! ஆம், இப்படியாக வாழ்ந்த அத்தனை தேவப்பிள்ளைகளை ஆண்டவர் ஆசீர்வதிக்காமல் விட்டு விடவில்லை. வேதம் சாட்சி. வரலாறு சாட்சி. ஆகவே, நீயும் நானும் மேலே சொன்ன ஆசீர்வாதங்களை, நன்மைகளை பல அனுபவிக்க வேண்டுமானால், எப்பொழுதும் தெய்வ பயத்தோடு வாழுவோம். அதாவது, தேவனை, நம் அனைத்து காரியங்களிலும், முதலிடம் கொடுத்து, அவரை பிரியப்படுத்தி வாழுவதே, தேவனுக்கு பயப்படுகிற வாழ்வு.
இரண்டாவதாக, உண்மையுள்ள இருதயம் (வச.23) ஒரு கிறிஸ்தவன், மேலே சொன்ன தெய்வ பயத்தோடு கூடிய இருதயத்தை கொண்டிருப்பவன் மாத்திரமல்ல, உண்மையுள்ள மனுஷனாய் இருப்பான். ஆம், இரட்சிக்கப்பட்டவன், கிறிஸ்தவன் என்று சொல்லுகிறவன், தன்னை இரட்சித்த ஆண்டவருக்கு உண்மையுள்ளவனாய் இருப்பான். கர்த்தர் கொடுத்திருக்கிற பொறுப்பில், ஊழியத்தில், நேரத்தை கையாளுவதில், செயலில், பேச்சில், ஐக்கியத்தில் பொய் பித்தலாட்டத்தை வைக்காமல், அவன் தெய்வ பயத்தை கொண்டிருப்பதினால் அந்த ஆண்டவருக்கு உண்மையாய் வாழுவான். ஏனென்றால், நீதி 12:22 சொல்லுகிறது, “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள், உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.” மேலும், ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளை பார்த்து, “உண்மையும், உத்தமுமான ஊழியனே” என்றுதான் அழைக்கிறார். வேறு எதை வைத்தும் அழைப்பதில்லை. ஏனென்றால், அவர்கள், கொடுத்த பொறுப்பு கொஞ்சமாக இருந்தாலும் உண்மையாய் பணி செய்கிறவர்கள். கொடுக்கப்பட்ட பொறுப்பை, உத்திரவாதத்தை உணர்ந்து பணி செய்கிறவர்கள்.( மத் 25:21). ஆம், நாம் மேலே பார்த்த, தெய்வ பயமுள்ள மனுஷன், எப்படி நன்மைகளினாலும், ஆசீர்வதங்களினாலும் நிறைந்தவனாய் இருக்கிறானோ, அவ்வண்ணமாகவே, உண்மையுள்ள மனுஷனும், ஆசீர்வாதங்களினால் நிறைந்து காணப்படுவான். நீதி 28:20 இவ்விதமாக கூறுகிறது. “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான்.” – A faithful man shall abound with blessings.
மூன்றாவதாக, காத்திருக்கிற இருதயம் (வச 24) இன்றைக்கு அவசர உலகத்தில், இயந்திர உலகத்தில், வாழுகிற நாம், கர்த்தருக்கு காத்திருக்கிற இருதயம் அநேகரிடத்தில் இல்லை. ஆனால், ஒரு மெய்யாலுமே இரட்சிக்கப்பட்டவன், அனுதினமும், ஆண்டவர் சமூகத்தில் சென்று, காத்திருக்கிற இருதயத்தை கொண்டிருப்பான். அதாவது, அவன் ஜெபிக்கிற மனுஷனாய் இருப்பான். தன் அலுவல்கள் மத்தியிலும், பணிச்சுமைகள் மத்தியிலும், வானத்தையும், பூமியையும், அண்டசராசரத்தையும் உண்டாக்கின சர்வ வல்லவராகிய தேவனிடத்தில், சென்று, தன்னை முற்றிலுமாய் தாழ்த்தி காத்திருப்பான். அங்கு பெருமைக்கு வேலை இருக்காது. ஏனென்றால், இதற்கு முந்தின வசனத்திலே (வச 23) இடும்பு செய்கிறவனுக்கு (பெருமையுள்ளவனுக்கு) பூரணமாய் பதிலளிப்பார் என்று சொல்லுகிறது. ஆகவே, பெருமையற்றவனாய், தேவ சமூகத்தில் தன்னை முற்றிலுமாய் தாழ்த்தி- காத்திருக்கிறான். அதாவது, ஆங்கிலத்தில், நம்பிக்கையோடு காத்திருக்கிறான் என்று சொல்லுகிறது. அவசரப்பட்டு,அவதிப்பட்டு போகிற மனுஷன் அல்ல, சங் 40:1 ல் இதே தாவீது என்ன சொல்லுகிறான் பாருங்கள் “ கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.” ஆமாம், மேலே சொன்ன இரண்டு இருதயத்தை கொண்டவர்களிடத்தில், எவ்வளவு ஆசீர்வாதத்தை கொண்டிருக்கிறார்களோ, அவ்வண்ணமாக, காத்திருக்கிற, அதாவது, ஜெபிக்கிற பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வாதத்தினால் நிரப்புகிறார். ஆம், இவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை( ஏசாயா 49:23), புது பெலன் அடைகிறவர்கள் (ஏசாயா 40:31), ஆண்டவருக்கு பிரியமானவர்கள் (சங் 147:11), பாக்கியவான்கள் (ஏசாயா 30:18).
No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 3”