மூன்று முத்தான முத்துக்கள் – 2

Published December 30, 2018 by adming in Pastor's Blog

 

மூன்று முத்தான முத்துக்கள் – 2

நமது ஆண்டவர் நம்மை படைத்ததின் நோக்கம் அவரை மகிமைப்படுத்துவதே ஆகும். இதைத்தான், அப். பவுலும் தெசலோனிக்கே சபைக்கு வலியுறுத்துவதைப் பார்க்கலாம்.

2தெசலோனிக்கேயர்1:11,12ல் முக்கியமாக, அப்.பவுல் இச்சபைக்காக எப்பொழுதும் ஜெபிக்கிற மனுஷனாக இருப்பதை நாம் பார்க்கலாம். அதுவும் இச்சபையார் எப்பொழுதும் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாஞ்சையோடு ஜெபிப்பதை நாம் பார்க்கலாம். மேலும் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டுமெனில், மூன்று முத்தான காரியத்தில் சபையார் எழும்ப வேண்டும் என்று சொல்லி  அதற்காக ஜெபிக்கிறார்.

இன்றைக்கு  நீ, உன்னுடைய வாழ்வில், தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று நோக்கம், கொண்டிருக்கிறாயா ? அப்படியென்றால் இங்கு பவுல் சொல்லும் மூன்று முக்கியமான காரியத்தில் கவனம் செலுத்து, அதற்காக அனுதினமும் ஜெபி. அப்பொழுது நீ தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவாய்.

  1. அழைப்புக்கு உரியவராகுதல்:

முதலாவதாக, தேவன் நம்மை அழைத்த  அழைப்பை சிந்தித்துப் பார்த்து, அதற்கு பாத்திரராக அதாவது அதற்கு உரியவராக இருக்க வேண்டும். இச்சபை மக்களை  பார்த்து பவுல் எழுதுகிறார் “தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.”(1தெச4:7). தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போதுக்கூட “….நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.” என்று கூறுகிறார்.(2 தீமோ 1:9) ஆகவே, நம்முடைய அழைப்பு  பரிசுத்த அழைப்பு என்று மறந்து விடக்கூடாது. மேலும் எபிரேயருக்கு எழுதும் ஆக்கியோன்  “பரம அழைப்பு” என்று கூறுகிறார். (எபி 3:1) It is a heavenly and holy calling. இப்படிப்பட்ட  உன்னதமான அழைப்பினால் தேவன் நம்மை அழைத்திருக்கும்போது, இவ்வழைப்புக்கு பாத்திரராக,  நாம் நடந்துக் கொள்ளவேண்டும். அதாவது, நம் சிந்தை, பேச்சு, செயல் அனைத்தும் பரிசுத்தத்திற்கு அடுத்த காரியங்களாயும், பரத்துக்குரியவர்கள்  என்று பிரதிப்பலிக்கிறதாயும், நம்மை அழைத்த பரம பிதாவை மகிமைப்படுத்துகிறதாயும் இருக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவன் வாஞ்சிப்பான், அதிகமாக ஜெபிப்பான். நீயும் அவ்விதம் ஜெபிக்கிறாயா?

  1. அவர் சித்தம் நிறைவேற்றுதல்:

இரண்டாவதாக, அவருடைய தயையுள்ள சித்தம்  (good pleasure of his goodness)  அதாவது, தம்முடைய பிள்ளைகளிடத்தில் வைத்திருக்கும் கிருபை மிகுந்த திட்டங்கள். இவையனைத்தும் அவருடைய தயை  அல்லது நன்மை என்ற ஊற்றிலிருந்து புறப்பட்டு வருகிறது. ஆகவே, அவர் தம் பிள்ளைகளிடத்தில் அவருடைய நன்மையான திட்டங்கள், நோக்கங்களை கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துக்கொள்ளலாம். ஆதலால், ஒவ்வொரு மெய் விசுவாசியும், தம்முடைய வாழ்வில், ஒருபோதும் தன் சுய சித்தத்தை முன் வைக்காமல், அவருடைய தயையுள்ள, கிருபை மிகுந்த, நன்மை நிரம்பிய சித்தம் நிறைவேற வாஞ்சிப்பான், பிரயாசப்படுவான், அதற்காக ஜெபிப்பான். ஏனென்றால் இயேசுவானவரும், எப்பொழுதும் தன் பிதாவின் சித்தத்தை மட்டுமே செய்தார். மேலும் அவர் தம் வார்த்தையில், தெள்ளத்தெளிவாக இதை மட்டுமே வலியுறுத்தி போதிப்பதை நாம் பார்க்கலாம். “இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.” (மத்தேயு 7:21).  “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும்  சகோதிரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.” (மத்தேயு 12:50). உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வு அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்வாய் இருக்கிறதா? உன்னுடைய கிறிஸ்தவ வாழ்வின் அனைத்து காரியங்களிலும் அவருடைய சித்தத்தை கேட்டு செய்கிற வாழ்வாய் இருக்கிறதா?

  1. விசுவாசத்தின் கிரியை.

மூன்றாவதாக, நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில், அனுதினமும், வெறும் விசுவாசம் மட்டுமல்ல, விசுவாசத்தின் கிரியை காண்பிக்க வேண்டும். ஆம்! நம்முடைய விசுவாசம் சாதாரமானது அல்ல, “அருமையான விசுவாசம்” (Precious Faith) என்று பேதுரு எழுதுகிறார்.(2பேதுரு1:1). இந்த விலையேறப்பெற்ற விசுவாசத்தை, நீ செயலில் காண்பிக்க வேண்டும். உன் நடைமுறை வாழ்வில் அனுதினமும் காண்பிக்க வேண்டும். அப்படியில்லை என்றால், கிறிஸ்தவன் என்று சொல்லுவதே வீண். கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசமே வீண். “கிரியையில்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கும்” என்று யாக்கோபு எழுதுகிறார். (யாக்கோபு 2:20). வெளிப்படுத்தின விசேஷத்தில், ஆண்டவர் ஏழு சபைகளைப்பார்த்து பேசும்போது, அந்த ஏழு சபைகளின் கிரியைகளை முக்கியமாக பார்த்தார்.  ஆகவே, ஒவ்வொரு விசுவாசிக்கும், விசுவாசத்தின் கிரியை மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இதுவே தன்னை யார் என்று பிரகடனப்படுத்த உதவியாய் இருக்கிறது. மேலும், இந்த விசுவாசத்தின் கிரியை உன் வாழ்வில் காண, தேவனுடைய பலத்தை நாட வேண்டும். (work of faith with His power). ஆம், நாம் பரத்திலிருந்து, தேவனுடைய பலத்தையும், வல்லமையையும் பெற்று விசுவாச வாழ்க்கையை செயலில் காண்பித்து, சாட்சியுடன் வாழ வாஞ்சிக்கிறாயா? இதற்காக அனுதினமும் ஜெபிக்கிறாயா?

இங்கு பவுல், இந்த மூன்று முத்தான காரியங்களை முன் வைத்து, எப்பொழுதும் தெசலோனிக்கே சபைக்காக ஜெபிக்கிறது போல, உன் வாழ்வில், இம்மூன்று முத்தானவைகள் மிக மிக அவசியம் என்று உணர்ந்து, அதை அனுதினமும் உன் வாழ்வில் காண ஊக்கமாய் ஜெபி. அப்பொழுது உன் ஆவிக்குரிய வாழ்வு ஆசீர்வாதமாயும், தேவனை மகிமைப்படுத்துகிறதாயும் இருக்கும்.

No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 2”

Leave a Comment