நமது பாவத்தை அறிக்கையிடுதல்.

Published August 31, 2019 by adming in Pastor's Blog

ரொபர்ட் மொர்ரே மெக் செய்னி (1813-1843)

Confessing Our Sins
Robert Murray McCheyne (1813-1843)

மனசாட்சியைக் குற்ற உணர்வில்லாமல் காத்துக் கொள்வதற்காக நான்  இன்னுமதிகமாக என்னுடைய பாவங்களை அறிக்கையிடவேண்டும் என்று உணர்கிறேன். நான் மற்றவர்களோடு இருந்தாலும், படிப்பில் இருந்தாலும், அல்லது பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், பாவத்தை கண்ட அதே கணத்தில் அதை அறிக்கையிட வேண்டுமென்று நினைக்கிறேன். ஆத்துமா, பாவத்தை அருவருக்க வேண்டும். நான் பாவத்தை அறிக்கையிடாமல் தொடர்ந்து என் கடமையைச் செய்வேனானால், நான் பாரமுள்ள மனச்சாட்சியோடு செல்கிறேன், தொடர்ந்து பாவத்தோடு பாவத்தைக் கூட்டிக் கொள்கிறேன். ஒரு சில குறிப்பிட்ட வேளைகளில் முந்தைய மணி நேரங்களில் என்னுடைய பாவங்களை உண்மையாக அறிக்கையிட்டு, அவைகளை முழுமையாக விட்டுவிடுவதை நாட வேண்டுமென்று நினைக்கிறேன்.

     என்னுடைய பாவத்தின் தீய தன்மையைக் காண நான் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். என்னை நான் ஆதாமின் குற்றந்தீர்க்கப்பட்ட கிளையாக, கர்ப்பத்திலிருந்தே தேவனுக்கு விரோதமான இயல்பில் பங்குகொண்டவனாக, முற்றிலும் தீமையினால் நிரப்பப்பட்ட இருதயத்தைக் கொண்டவனாக என்னைக் கருத வேண்டும். அந்த தீமை என் முழு வாழ்க்கையிலும் பிறப்பிலிருந்து மரணம் வரையில், என்னுடைய ஒவ்வொரு சிந்தனையையும், வார்த்தையையும், செயலையும் கறைப்படுத்துகிறது. நான் அடிக்கடி தாவீதையும், பவுலையும்போல என் இளவயதுப் பாவங்களையும் இரட்சிப்புக்கு முன்னும் பின்னும் செய்த பாவங்களையும், ஒளிக்கும், அறிவுக்கும், அன்புக்கும், கிருபைக்கும், தேவத்துவத்தின் ஒவ்வொரு ஆள்தத்துவத்துக்கும் எதிராக நான் செய்த பாவங்களையும் அறிக்கையிட வேண்டும்.

    பரிசுத்த பிரமாணத்தின் வெளிச்சத்திலும், தேவனுடைய தோற்றத்தின் அடிப்படையிலும், சிலுவையின் வெளிச்சத்திலும், நியாயாசனத்தின் பார்வையிலும், நரகத்தின் அடிப்படையிலும், நித்தியத்தின் வெளிச்சத்திலும் நான் என்னுடைய பாவங்களை நோக்கிப் பார்க்க வேண்டும்.

    என்னுடைய கனவுகளையும், என்னுடைய  அலைபாயும் எண்ணங்களையும், என்னுடைய ஒருதலைச் சார்வுகளையும், மறுபடியும் மறுபடியுமாகச் செய்யும் செயல்களையும், என்னுடைய சிந்தனை, உணர்வு, பேச்சு மற்றும் செயல்பாட்டின் பழக்கங்களையும், என்னுடைய எதிரிகளின் இழிவான பேச்சுக்களையும், என்னுடைய நண்பர்களின் கடிந்துகொள்ளுதல்களையும், கிண்டல்களையும், நான் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு அவசியமான பாவத்தின் அடையாளங்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

     நான்  மாதத்திற்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நாளை உபவாசித்து என்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதற்காக ஒதுக்க வேண்டும். பாவத்தை நினைவுக்குக் கொண்டுவரும் வகையில் நான் பல வேத வசனங்களைக் குறித்து வைத்திருக்க வேண்டும். நான் அனைத்துச் சரீரப்பிரகாரமான துன்பங்களையும், வீட்டுச்சோதனைகளையும், தேவன்  என்மீதும், வீடு, சபை, அல்லது நாட்டின் மீதும் தமது கோபப் பார்வையைத் திருப்புவதையையும் என்னுடைய பாவங்களை அறிக்கையிடும்படி தேவனிடமிருந்து வரும் அழைப்பாகக் கருத வேண்டும். மற்றவர்களின் பாவங்களும் துன்பங்களும் கூட என்னுடைய பாவங்களை நான் அறிக்கையிடும்படி என்னைத் தூண்ட வேண்டும்.

    நான் ஓய்வுநாளின் மாலை நேரங்களிலும், திருவிருந்தை எடுத்துக்கொள்ளும் ஓய்வுநாளின் மாலை நேரங்களிலும் குறிப்பாக, பரிசுத்த காரியங்களுக்கு எதிரான என்னுடைய பாவங்களை அறிக்கையிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

   ஒவ்வொரு பாவத்துக்கான மன்னிப்புக்காகவும் நான் கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும். என்னுடைய சரீரத்தைக் கழுவும்போது, நான் ஒவ்வொரு பகுதியையும் சுத்தம் பண்ணுகிறேன். அதுபோல, என்னுடைய ஆத்துமாவைச் சுத்திகரிப்பதில் நான் கவனக் குறைவாக இருக்கலாமா? என்னுடைய ஒவ்வொரு பாவத்துக்காகவும் இயேசுவானவரின் முதுகில் உண்டான தழும்புகளை நான் காண வேண்டும்.

   என்னுடைய அனைத்துப் பாவங்களுக்காகவும், நித்தியமாக நரகத்தில் தவிப்பதற்கு இணையாக இயேசுவானவரின் இருதயத்தில் ஏற்பட்ட நித்தியமான வேதனையை நான் காண வேண்டும். கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் எனது அனைத்துப் பாவங்களுக்காகவும் நித்தியமாக கிரயம் செலுத்தப்பட்டாயிற்று என்பதை நான் காண வேண்டும்.

    நான் பாவம் செய்யும்போது, உடனடியாகக் கிறிஸ்துவிடம் செல்லுவதற்கு விருப்பமின்மை இருப்பதை உணர்கிறேன். போவதற்கு நான் வெட்கப்படுகிறேன். போவதினால் நன்மை விளையாது என்பது போல உணர்கிறேன். இப்படியாக, ஆயிரக்கணக்கான வேறு சாக்குப் போக்குகளையும் கூறுகிறேன். ஆனால், இவை அனைத்துமே நரகத்திலிருந்து நேரடியாக வரும் பொய்களே. ஆம், ஆழமான பாவத்திலிருந்து சமாதானத்தையோ அல்லது பாதுகாப்பையோ பெற முடியாது என்பது நிச்சயம். ஆனால், நேரடியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்லுவதின்மூலம் நாம் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற முடியும் என்பது நிச்சயம். இதுவே, சமாதானம் மற்றும் பரிசுத்ததிற்கான தேவனுடைய வழியாக இருக்கிறது. அது உலகத்துக்கும், கலங்கிய இருதயத்துக்கும் தவறானதாகத் தோன்றலாம். ஆனால், அதுவே வழியாகும்.

   கிறிஸ்துவிடம் ஓடிச் செல்ல முடியாத அளவுக்கு என்னுடைய பாவம் பெரியதன்றோ, தீங்கானதென்றோ, துணிவானதென்றோ நாம் ஒருபோதும் நினைக்க கூடாது. முழங்காலிலோ, பிரசங்கத்திலோ, மரணப்படுக்கையிலோ அல்லது அபாயகரமான நோயின்போதோ நான் தயங்காமல் கிறிஸ்துவிடம் வர வேண்டும்.

  நான் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்படுவதோடு கூடக் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலிலும் உடுத்துவிக்கப்பட வேண்டும். என்னில் எந்தவொரு பாவத்தை நான் அறிக்கையிடத்தவறினாலும், அதற்காகக் கிறிஸ்து பரீபூரணமான தெய்வீகக் கீழ்படிதலோடு காத்திருப்பதைக் காண்கிறேன். நான் செய்த ஒவ்வொரு பாவத்துக்காகவும் நான் கிறிஸ்துவில் தழும்பையோ அல்லது காயத்தையோ காண்பது மட்டுமன்றி, என்னுடைய இடத்தில், அவர் கீழ்படிந்து, பிரமாணத்தை மகிமைப்படுத்துவதையும், அதன் சாபத்தை அகற்றிபோடுவதையும், அதன் எதிர்ப்பார்ப்புக்குப் பதிலளிப்பதையும் நான் காண்கிறேன்.

   கிறிஸ்து நமக்காக எப்போதும் புதியவராகவும், எப்போதும் மகிமையானவராகவும் இருக்கிறார். கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அளவிட முடியாது. ஆம், கிறிஸ்து, முடிவில்லாத ஒருவராக, குற்றமுள்ள ஆத்துமாவுக்கான ஒரே ஒருவராக இருக்கிறார்.

No Response to “நமது பாவத்தை அறிக்கையிடுதல்.”

Leave a Comment