தேவனுக்கு முன்பாக காணப்படும் செம்மையான (மனந்திரும்பின)இருதயத்தின் ஏழு அடையாளங்கள். — ஜே.சி. ரைல்.
7 Marks of a Right Heart Before God — J.C.Ryle
1.ஒரு செம்மையான இருதயம் புதிய இருதயமாய் இருக்கிறது. (எசே 36:26)
இந்த புதிய இருதயத்தோடு ஒருவன் பிறக்கிறதில்லை, மாறாக பரிசுத்த ஆவியானவர் அருளிச்செய்கிற மற்றுமொரு இருதயமாயிருக்கிறது. இப்படிப்பட்ட இருதயமானது, புதிய ஆசைகள், புதிய சந்தோஷங்கள், புதிய கவலைகள், புதிய நம்பிக்கைகள், புதிய பயங்கள், புதிய விருப்பங்கள், புதிய வெறுப்புகள் கொண்டதாயிருக்கிறது. ஆம், இப்படிப்பட்ட இருதயமானது, ஆத்துமா, கடவுள், கிறிஸ்து, இரட்சிப்பு, வேதம், ஜெபம், பரலோகம், நரகம், உலகம், பரிசுத்தம் போன்ற அனைத்து காரியங்களை குறித்தும் புதிய கண்ணோட்டத்தை கொண்டதாயிருக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” (2 கொரி 5:17)
2.ஒரு செம்மையான இருதயம் நொறுங்குண்ட நருங்குண்ட இருதயமாயிருக்கிறது. (சங்கீதம் 51:17)
இந்த புதிய இருதயம், பெருமை, சுய-எண்ணம், சுய-நீதி ஆகியவற்றிலிருந்து உடைப்பட்ட இருதயம். ஒருகாலத்தில், சுயத்தை குறித்து மேலான எண்ணத்தை கொண்டிருந்த இருதயம், இப்பொழுது சுக்கு நூறாக்கப்பட்டு, உடைப்பட்ட இருதயமாயிருக்கிறது. இப்பொழுது, இந்த இருதயம், குற்றமுள்ளவன், அபாத்திரமானவன், கொடியவன் என்ற எண்ணத்தை கொண்டதாயிருக்கிறது. முன்னொரு காலத்தில் இருந்த வறட்டு கவுரவம், பிடிவாதம், உணரற்ற தன்மை இவையெல்லாம் ஓடிப்போய்விட்டது, மறைந்து விட்டது. தேவனை துக்கப்படுத்துவது இப்பொழுது ஒரு லேசான காரியமாக இல்லை. இப்பொழுது, மிருதுவான, உணர்வுள்ள, பாவத்தை குறித்த பயம் கொண்ட இருதயம் மட்டுமே இருக்கிறது. (2 இராஜா 22:19). இப்பொழுது, இந்த இருதயம், தாழ்மை கொண்டதாயும், தன்னில் நன்மை ஒன்றுமில்லை என்றும், சுயத்தை வெறுக்கிறதாயும் இருக்கிறது.
3.ஒரு செம்மையான இருதயம் கிறிஸ்து இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறதாயிருக்கும். (ரோமர் 10:10, எபேசி 3:17)
இவ்விருதயமானது, நித்தியமான வாழ்வு மற்றும் பாவ மன்னிப்பிற்குண்டான அனைத்து நம்பிக்கையும் கிறிஸ்து இயேசுவின் மேல், அதாவது, அவருடைய பிராயசித்த பலி, அவருடைய மத்தியஸ்தம், அவருடைய பரிந்து பேசுதல் ஆகியவற்றின் மேல் தங்கியிருக்கும். கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால், துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளதாய் இருக்கிறது. ( எபி 10:22). திசை காட்டியில் உள்ள முள், வடக்கு பக்கமாக திரும்புவது போல, கிறிஸ்துவண்டை திரும்பின இருதயம். ஆம், சூரிய காந்தி மலர், எப்படி சூரியனை நோக்கி பார்க்கிறதோ, அப்படியே அனுதின, சமாதானத்திற்கும், இரக்கத்திற்கும், கிருபைக்கும் கிறிஸ்துவை நோக்கி பார்க்கும் இருதயம். இஸ்ரவேலர்கள், வனாந்திரத்தில், அனுதினமும் மன்னாவினால் போஷித்தது போல, இவ்விருதயமானது, அனுதினமும் கிறிஸ்துவினால் போஷிக்கப்படுகிறது. இது அனைத்துவிதமான தேவைகளுக்கும், கிறிஸ்துவையே சார்ந்திருக்கிறது. கிறிஸ்து இயேசுவே வைத்தியனாக, பாதுகாவலனாக, மணவாளனாக, நண்பனாக, பாவித்து, அவரையே முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது.
4.ஒரு செம்மையான இருதயம் சுத்திகரிக்கப்பட்ட இருதயம். (அப் 15:9; மத்தேயு 5:8)
இந்த புதிய இருதயம் பரிசுத்தத்தை நேசிக்கும், பாவத்தை வெறுக்கும். ஆம், மாம்சத்தினாலும், ஆவியினாலும் ஏற்படுகிற அழுக்கை நீக்கி, சுத்திகரிக்கப்படுவதற்கு, தினந்தோறும் பிரயாசப்படும்.( 2 கொரி 7:1). இது தீங்கை அருவருத்து, நல்லதையே பற்றிக்கொள்ளும். இது வேதத்தின் மேல் பிரியம் கொண்டு, அதை மறக்காதபடி, தன் இருதயத்தில் பதிய வைத்துக்கொள்ளும். ( சங்கீதம் 119:11). இந்த இருதயம், அவ்வேதத்திற்கு முழுமையாய் கீழ்படிய ஏங்கும், அதற்கு கீழ்படிகிற பிள்ளைகளை கண்டு மகிழ்ச்சிக்கொள்ளும். ஆம், இந்த இருதயம், தேவனையும், அவருடைய பிள்ளைகளையும் நேசிக்கும். இந்த இருதயத்தின் வாஞ்சை, விருப்பங்கள் எல்லாமே பரலோகத்தின் மேலேயே இருக்கும். அப்பரலோகம், மகா பரிசுத்த ஸ்தலமாய் இருப்பதினால், ஒருபோதும் அதை சாதாரண விதத்தில், எடை போட்டு, மகிழாது. பரீபூரண பரிசுத்தத்தை எட்டும்படியான இடமாகிய பரலோகத்தை நோக்கி, மகிழ்ச்சியோடு, எதிபார்த்து காத்துக்கொண்டிருக்கும்.
5. ஒரு செம்மையான இருதயம் ஜெபிக்கிற இருதயமாயிருக்கும்.
இந்த இருதயம் “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை கொண்டிருக்கும்.” (ரோமர் 8:15). “உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே” ( சங்கீதம் 27:8) என்று ஒவ்வொரு நாளும் சொல்லும் இருதயமாயிருக்கும். இந்த இருதயம், பலவீனமும், குறைவுள்ளதாயும், இருப்பினும், ஆவிக்குரிய காரியங்களை பற்றி தேவனோடு பேசும்படியான நேரத்தை வழக்கமாக கொண்டிருக்கும். தன்னுடைய விருப்பங்கள், தேவைகள் அனைத்தையும் தேவனுடைய சமூகத்திற்கு முன்பு விரித்து வைத்து, தன் இருதயத்தையே ஊற்றி, மன்றாடி ஜெபிக்கிற இருதயத்தின் அவசியத்தை கொண்டிருக்கும். ஆம், அவரிடத்தில் ஒன்றையும் மறைக்காமல், தன் இருதயத்தில் இருக்கிற அனைத்தையும் அவரிடத்தில் சொல்லும். ஒரு செம்மையான இருதயம் கொண்ட மனிதனை, ஜெபிக்காமல் இருக்க சொல்வது, ஒரு மனிதனை மூச்சு விடாமல் இருக்க சொல்வது போன்றது.
6. ஒரு செம்மையான இருதயம் தனக்குள்ளாக போராட்டத்தை கொண்டுள்ள இருதயம். (கலா 5:17).
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி, மாம்சத்திற்கு விரோதமாகவும் ஒன்றையொன்று எதிர்த்து போராடுகிற இரண்டு தன்மைகளை இந்த இருதயம் காணுகிறது. “ஆகிலும் என் மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்.”(ரோமர் 7:23) என்று பவுல் சொல்லும் அதே காரியத்தை, தன் அனுபவத்தில் இவ்விருதயம் காண்கிறது. இதுவே, செம்மையில்லாத இருதயம், இவ்விதமான போராட்டத்தை குறித்து ஒன்றும் அறியாது. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக்காக்கிறபோது,(இருதயத்தை) அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். (லூக்கா 11:21). ஆனால் அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்ளும்போது, அங்குதான், மரணம் வரை என்றென்றும் முடியாத போராட்டமானது ஆரம்பமாகிறது. சமாதானத்தோடு இருக்கிறதை காட்டிலும், செம்மையான இருதயம் போராட்டத்தினால் அறியப்படுகிறது.
7. ஒரு செம்மையான இருதயம் நேர்மையான, பிரிக்கப்படாத, உண்மையான இருதயம் (லூக்கா 8:15; 1நாளா 12:33; எபி10:22).
இங்கே எந்தவிதமான போலியோ, நடிப்போ, மாய்மாலமோ இந்த இருதயத்தில் கிடையாது. இதில் இரண்டு விதமான இருதயமோ அல்லது பிரிக்கப்பட்ட இருதயமோ இல்லை. இவ்விருதயம், எதை சொல்லுகிறதோ அதை செய்யும், எதை உணரச் சொல்லுகிறதோ அதை உணரும், எதை விசுவாசிக்க சொல்லுகிறதோ அதை விசுவாசிக்கும். இதனுடைய விசுவாசம் ஒருவேளை பலவீனமாய் இருக்கலாம். இதனுடைய கீழ்படிதல் குறைவானதாக இருக்கலாம். ஆனால், ஒன்றே ஒன்று, இது எப்போதும் செம்மையான இருதயத்தை மட்டுமே வெளிப்படுத்தும். இதனுடைய பக்தி உண்மையானதும், நேர்மையானதும், முழுமையானதும், மெய்யானதுமாய் இருக்கும்.
No Response to “தேவனுக்கு முன்பாக காணப்படும் செம்மையான (மனந்திரும்பின)இருதயத்தின் ஏழு அடையாளங்கள். — ஜே.சி. ரைல்.”