ஏற்ற காலத்தில் அறுப்போம்
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்” – கலாத்தியர் 6:9.
நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில், அப்.பவுல் சொல்லும் மூன்று முக்கிய அறிவுரைகளை காணலாம். இது மிக மிக அவசியம். இவற்றை நம் மனதில் ஆழமாய் பதிய வைத்துக்கொள்வோம் என்றால், நமது ஆவிக்குரிய வாழ்வு கிறிஸ்துவுக்குள், வெற்றியோடு, வாழலாம். இல்லையேல், நாம் தோற்றுப்போன கிறிஸ்தவர்களாய் வாழுவோம்.
- நன்மை செய்ய வேண்டும்: முதலாவது, ஒரு மெய் கிறிஸ்தவன் தன் பிதாவுக்கு ஒவ்வொரு நாளும் மகிமையை சேர்க்கிறவனாய் இருப்பதினால், நன்மையை மட்டுமே செய்ய பிறந்திருக்கிறான். ஆனால், மாம்சப்பிறப்பில் வந்தவன் தீமையை (பாவத்தை) மட்டுமே செய்கிறவனாயும், செய்யப்பழகினவனாயும், அவன் ஒருக்காலும், தேவனை பிரியப்படுத்தாதபடி,(ரோமர்8:8)பாவத்திற்கு மரித்தவனாயும் இருக்கிறான். ஒரு காலத்தில், இப்படியான பாவத்திற்கு மரித்தவனாய் இருந்தவன், இன்றைக்கு, பரிசுத்த ஆவியினால் அவனுடைய ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கையை வாழுகிறான்.(கலா 6:15). ஆக இப்படியான புதிய வாழ்வை பெற்றவன் நன்மை செய்கிறவனாய் இருக்கிறான். நன்மை என்று சொல்லும்போது,இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படியான காரியங்கள் அனைத்தும். முக்கியமாக, தன் வாழ்வில் பிரதானமான நன்மை என்னவென்றால், எப்படி தன்னுடைய ஆத்துமா, தேவனுடைய கிருபையினால், இரட்சிப்பை அடைந்தானோ, அந்த இரட்சிப்பின் வழியாகிய, இயேசுவை அநேகருக்கு காண்பித்து, அனேக ஆத்துமாக்களை இயேசுவுக்குள்ளாக, ஆதாயம் பண்ணும்படியான நன்மை செய்கிறவனாய் இருக்கிறான்.ஆம், நாம் இரட்சிப்பை பெற்றவர்களாய் இருப்போம் என்றால், இந்த உன்னதமான நன்மையை நம் வாழ்நாள் முழுதும் செய்ய வேண்டும். இதுவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும், சபைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை கொண்டுவருகிறதாய் இருக்கும்.
- சோர்ந்து போக கூடாது: இரண்டாவது, மேலே சொன்ன “நன்மை” மிகப்பெரிய ஆசீர்வாதமான காரியம்! ஆம்! பாவத்தில் மரித்துப்போன ஆத்துமாக்களை, நரகத்திற்கு போய்கொண்டிருக்கிற ஆத்துமாக்களை, பரலோகத்திற்கு அழைத்துச்செல்லும்படியாக, கிறிஸ்துவுக்குள் கொண்டுவரும் காரியம். இக்காரியம் சாதாரண காரியம் என்று நினைத்துவிடக்கூடாது. ஏனென்றால், பாவியானவன் பிசாசின் பிடியில் இருக்கிறபடியால், அவனுடைய பிடியிலிருந்து வெளியே கொண்டு வருவது சாதாரண காரியம் அல்ல. நாம் ஒரு ஆத்துமாவை ஆதாயம் பண்ணுகிற முயற்சியில், பல தடைகள் ஏற்படும், பல முயற்சிகள் தோல்வியாகும், பல எதிர்ப்புகள் கிளம்பும், பல போராட்டங்கள் சந்திக்க வேண்டிவரும். இவை அனைத்தும் பார்த்து, பயந்து போகவோ,சோர்ந்து போகவோ, துவண்டு விடவோ கூடாது. அப்படி சோர்ந்து போவோமென்றால், ஒரு ஆத்துமாவையோ எழுப்ப முடியாது, சபையை கட்ட முடியாது. பின்வரும் வசனங்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத் 28:19,20). “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (சகரியா 4:6). “மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.” (மத்தேயு 19:26). இப்படியான வசனங்களை நம் மனதில் பதிய வைத்து, விடாமல் ஊக்கமாய், ஜெபத்தில் தரித்திருப்போம். அப்பொழுது, நம்மில் எழும்பும், சோர்வுகளை அகற்றி, கர்த்தருக்கென்று சாட்சியாக வாழுவோம்.
- ஏற்ற காலத்தில் அறுப்போம்: மூன்றவதாக, கர்த்தர் சொல்லும் ஆசீர்வாதத்தை பாருங்கள். நாம் நன்மை செய்வதில், அதாவது ஆத்துமா, ஆதாயம் செய்யும் பணியில், பல தடைகள், எதிர்ப்புகளை, நாம் சந்தித்தாலும், நாம் எக்காரணத்துக்கொண்டும், சோர்புக்கு இடம் கொடுக்காதபடி, அவருடைய ஜீவனுள்ள வசனங்களை பிடித்துக்கொண்டு, ஜெபத்தில் முன்னேற வேண்டும் என்று பார்த்தோம். ஏனென்றால், “நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்” என்று வசனம் சொல்லுகிறது. ஆம், கர்த்தர், ஒவ்வொரு காரியத்திற்கும் ஏற்ற காலம் ஒன்றை நிர்ணயித்திருக்கிறார். அக்காலத்திற்கு, நாம் பொறுமையாய் காத்திருக்க வேண்டும். அவர் குறித்த நேரம் ஒன்று உண்டு. அந்த நேரம், கர்த்தர் குறித்த நேரம். அது தாமதிப்பதில்லை. அக்காலத்தில் கட்டாயம் அறுப்போம். “அறுப்போம்” என்ற பதம் விவசாயத்தில் பயன்படுத்தும்படியான பதம். ஒரு விவசாயி, தன் நிலத்தை பண்படுத்தி, விதை விதைத்து, பயிராகி, தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு அப்பயிர் கதிராகி, பிறகு ஏற்ற காலத்தில் அறுவடைக்கு செல்லுகிறான். இது உடனே நிகழும் காரியம் அல்ல. அறுவடை என்ற பலனை பெற, அவன் பொறுமையாய் காத்திருக்க வேண்டியுள்ளது. காத்திருந்து ஏற்ற காலத்தில் அறுக்கிறான். அவ்வண்ணமாக, நாம் ஏற்ற காலத்தில் ஆத்தும அறுவடையை அறுப்போம். சந்தேகமேயில்லை.
ஆகவே, நாம் கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்வோம், அனேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்து, இயேசுவின் நாமத்தை மகிமைபடுத்துவோம்.
“ஆகையால், எனக்கு பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”(1 கொரி 15:58).
No Response to “ஏற்ற காலத்தில் அறுப்போம்”