விசுவாசத்தில் வல்லவனாய் இரு, (ரோமர் 4:20) – சி.எச். ஸ்பர்ஜன். Strong in faith, (Romans 4:20) – C.H.Spurgeon.
கிறிஸ்தவனே, உன் விசுவாசத்தைக் காத்துக்கொள் – ஏனென்றால் விசுவாசமே நீ ஆசீர்வாதங்களைப் பெறக்கூடிய ஒரே வழி. நாம் கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்களை பெற விரும்பினால், அவற்றைப் பெறுவதற்கு விசுவாசமே ஒரே வழி. ஜெபம் கர்த்தரின் சிங்காசனத்திலிருந்து பதில்களைக் கொண்டுவர முடியாது – அது விசுவாசமுள்ளவரின் ஜெபமாக இல்லாவிட்டால். விசுவாசம் என்பது உன் ஆத்துமாவுக்கும் மகிமையில் வீற்றிருக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கும் இடையேயான தூதன் போன்றது. அந்தத் தூதன் இல்லையென்றால், நாம் ஜெபத்தை மேலே அனுப்பவோ அல்லது பதில்களைப் பெறவோ முடியாது. விசுவாசம் என்பது பூமியையும் பரலோகத்தையும் இணைக்கும் தந்தி கம்பி போன்றது – அது கடவுளின் அன்பு செய்திகளை மிக விரைவாகக் கொண்டுசெல்கிறது; நாம் கூப்பிடுவதற்கு முன்பே அவர் பதிலளிக்கிறார், நாம் இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் கேட்கிறார். ஆனால் அந்த விசுவாசக் கம்பி அறுந்து போனால், நாம் எப்படி அவருடைய வாக்குறுதிகளைப் பெற முடியும்?
நான் கஷ்டத்தில் இருக்கிறேனா? விசுவாசம் கஷ்டத்தில் உதவியைக் கொண்டுவரும். நான் சத்துருவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறேனா? என் ஆத்துமா விசுவாசத்தின் மூலம் அதன் அடைக்கலத்தின்மேல் சாய்ந்திருக்கும். ஆனால் விசுவாசம் இல்லாமல் கடவுளை நோக்கி கூப்பிடுவது வீண். விசுவாசமே என் ஆத்துமாவுக்கும் பரலோகத்திற்கும் இடையேயான ஒரே பாதை. மிகக் கடுமையான குளிர்காலத்தில் கூட, விசுவாசம் என்பது ஜெபத்தின் குதிரைகள் பயணிக்கக்கூடிய சாலை – அது பனி மூடியிருந்தாலும் சரிதான். ஆனால் அந்தப் பாதை தடுக்கப்பட்டால், நாம் மகாராஜாவுடன் எப்படி இணைந்திருக்க முடியும்? விசுவாசம் என்னை கடவுளுடன் இணைக்கிறது. விசுவாசம் அவருடைய வல்லமையினால் என்னை நிரப்புகிறது. விசுவாசம் கடவுளின் சர்வவல்லமையை என் பக்கத்தில் கொண்டுவருகிறது. விசுவாசமானது, கடவுளின் எல்லா குணங்களைக்கொண்டு என்னைக் காக்கச்செய்கிறது. அது நரகத்தின் படைகளை எதிர்க்க எனக்கு உதவுகிறது. என் சத்துருக்கள்மேல் வெற்றிகரமாக நடக்க உதவி செய்கிறது. ஆனால் விசுவாசம் இல்லாமல் – கடவுளிடமிருந்து நான் எப்படி எதையும் பெற முடியும்? சந்தேகப்படுகிறவன் – கடலின் அலைபோல் அலசடிப்படுகிற அவன் – கர்த்தரிடமிருந்து எதையும் பெறுவான் என்று எதிர்பார்க்கக்கூடாது! ஆகையால், கிறிஸ்தவனே, உன் விசுவாசத்தைக் காத்துக்கொள், ஏனென்றால், நீ எவ்வளவு வரியவனாய் இருந்தாலும், அதைக்கொண்டு நீ எல்லாவற்றையும் வெல்லலாம் – ஆனால் விசுவாசம் மட்டும் இல்லாவிட்டால், நீ எதையும் பெற முடியாது. “நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்.” (மாற்கு 9:23).
No Response to “விசுவாசத்தில் வல்லவனாய் இரு, (ரோமர் 4:20) – சி.எச். ஸ்பர்ஜன். Strong in faith, (Romans 4:20) – C.H.Spurgeon.”