The best means to mortify sin! – Thomas Brooks (1608-1680).பாவத்தை அழிக்க சிறந்த வழிகள் – தொமஸ் ப்ரூக்ஸ் (1608-1680).

“ஆகையால், விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.” கொலோ 3:5
நமக்கு நெருக்கமான பாவம், நம்முடைய இருதயத்தில், ஆக்கிரமித்து, குடிகொள்ளுமென்றால், கிருபையும், பரிசுத்தமும், முற்றிலுமாக கீழான நிலைக்கு தள்ளப்பட்டு, பலவீனப்பட்டு போகும். அதே சமயத்தில், உன்னுடைய நெருக்கமான பாவம், ஆவியின் பட்டயத்தினாலும், வல்லமையினாலும் கொல்லப்பட்டு, அகற்றப்படும்பொழுது, – கிருபையும், பரிசுத்தமும் அதிவிரைவில், மென்மேலும், வளரவும், வலுவடையவும் செய்யும்.
ஒரு மனிதன் விஷத்தை உண்ட பிறகு, அவன் விஷத்தை வாந்தி எடுக்கும் வரை எதுவும் அவனை வளரவிடாது. அவ்வண்ணமாகவே, பிரியமான பாவங்கள் ஆத்துமாவிற்கு விஷமாய் இருக்கிறது. – இவை வாந்தி எடுக்கப்பட்டு, வெளியேற்றப்படும் வரை, அதாவது, ஆழமான மனந்திரும்புதலாலும், கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைக்கும் வரை – அந்த ஆத்துமா ஒருபோதும் கிருபையிலும் பரிசுத்தத்திலும் செழிக்காது!
நீங்கள் உயர்ந்த பரிசுத்த நிலையை எட்டுவீர்களென்றால், உங்களிடத்தில் உள்ள, மிகவும் கொந்தளிக்கும் தீய விருப்பங்களையும், உங்கள் மனதிற்கு மிகவும், பிரியமான, பாவங்களையும் அடக்கி, அவற்றை அறவே அழிக்க, முழு உழைப்புடன் முயற்சி செய்யுங்கள்.
ஓ! உங்கள் பொன் சிலைகளும், வெள்ளி சிலைகளும் (உங்களுக்கு மிகவும் நெருக்கமான, பிரியமான பாவங்கள்) எந்த ஒரு எதிர்ப்புமே சந்திக்காதபடி, தங்களுடைய ஆயுதங்களை, கீழே வைத்து, போரை விட்டுவிட்டு, உங்கள் பாதங்களில் விழுந்து, நீங்கள் அவற்றை மிதித்து, அழித்துவிட, இடம் கொடுக்கும் என்று நினைக்காதீர்கள்.
ஓ! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – உங்களை தொடர்ந்து வளைத்துப்பிடிக்கும் பாவங்கள், தங்களுடைய நிலையை, உறுதியாக பிடித்துக்கொள்ள, முழு முயற்சியும் செய்யும். எனவே, நீங்கள் அவற்றுக்கு எதிராக, உங்கள் முழு பலத்தோடும் எழுந்து, அவற்றை பொடியாக நொறுக்கி, சாம்பலாக்கி, எரிக்க வேண்டும்.
ஓ! நீங்கள், மிகவும் கொந்தளிக்கும் உங்கள் பாவ ஆசைகளுடன், பெலிஸ்தர் எப்படி சிம்சோனிடம் நடந்து கொண்டார்களோ, அப்படியே, நடந்துக்கொள்ளுங்கள். ஆம், அவற்றின் கண்களைப் பிடுங்கி, அவற்றின் பலம் முற்றிலும், குறைந்து வீணாகும் வரை, உங்கள் மாம்ச இச்சைகளை அழித்துப்போடுங்கள்.
நம்முடைய பாவ, மாம்ச இச்சைகளை அழிப்பதற்குண்டான சிறந்த வழி என்ன என்று கேட்கப்பட்ட ஐந்து பேரைப்பற்றி நான் படித்திருக்கிறேன்; அவர்கள் இவ்வாறு பதிலளித்தனர்:
முதலாம் நபர் கூறினார், “பாவத்தை அழிக்க சிறந்த வழி, மரணத்தை பற்றி தியானிப்பதே!”
இரண்டாம் நபர் கூறினார், “பாவத்தை அழிக்க சிறந்த வழி, நியாயத்தீர்ப்பின் நாளை பற்றி தியானிப்பதே!”
மூன்றாம் நபர் கூறினார், “பாவத்தை அழிக்க சிறந்த வழி, பரலோகத்தின் பேரின்பத்தைப் பற்றி தியானிப்பதே!”
நான்காம் நபர் கூறினார், “பாவத்தை அழிக்க சிறந்த வழி, நரகத்தின் வேதனைகளை பற்றி தியானிப்பதே!”
ஐந்தாம் நபர் கூறினார், “பாவத்தை அழிக்க சிறந்த வழி, கிறிஸ்துவின் மரணத்தையும், அவர் அனுபவித்த பாடுகளையும் பற்றி தியானிப்பதே!”
சந்தேகமின்றி கூறப் போனால், கடைசி நபர் தான் சரியான பதிலை கூறினார்! நம்முடைய, பாவங்களுக்காக, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, காயப்பட்டு, வழிந்தோடும் இரத்தத்தோடு, வேதனையில், மடிந்து கொண்டிருக்கிற, நமது இரட்சகரை தினமும் பார்ப்பதே, நம் மனதிற்கு மிகவும் பிரியமான பாவங்களைக் கட்டுப்படுத்தி, அவற்றை அழிக்கும் ஒரே வழியாகும்!
ஓ நண்பர்களே! பரிசுத்தத்திலான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மிகவும் தடுக்கும், உங்களை வளைத்துப் பிடிக்கும், அந்த குறிப்பிட்ட பிரியமான பாவங்களை அறவே அழிக்கும் மட்டும், கிறிஸ்துவிடமிருந்து வல்லமை புறப்படும் வரை, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை நோக்கி பார்ப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்!
“மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” (ரோமர் 8:13).
No Response to “The best means to mortify sin! – Thomas Brooks (1608-1680).பாவத்தை அழிக்க சிறந்த வழிகள் – தொமஸ் ப்ரூக்ஸ் (1608-1680).”