வேதத்தின் அதிகாரம் – பாஸ்டர். ஜான்நெல்சன் The Authority of Scripture – Pastor. John Nelson

Published November 27, 2024 by adming in Pastor's Blog

வேதத்தைப் பற்றி சிலரிடம் “மிகையான” எண்ணமும், சிலரிடம் “குறையான” எண்ணமும் உள்ளது என்பது ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை.எப்படி? 1980ம் ஆண்டுகளில் பைபிள் மேல் ஒரு பொருளை வைத்து அடி வாங்கினவர்கள் உண்டு. (இப்போது மொபைல் பைபிள் காலத்தில் இந்த தண்டனைக்கு இடமில்லையே!). ஆனால், இன்று எந்த மொழிபெயர்ப்பு “படிக்க எளிமையானது” என்று விவாதிக்கும் நிலைமை உள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் வேதத்தை நேசிப்பது போல இருந்தாலும், அறிந்தோ அறியாமலோ கடவுளுடைய வார்த்தையின் அதிகாரம் இவர்களால் மட்டுப்படுத்தப்பட்டது கசப்பு கலந்த உண்மையாகும். இங்கு தொழில்நுட்ப வேதாகமத்தை பயன்படுத்துவது பற்றி நாம் பேசவில்லை. இப்படிப்பட்ட மேலோட்டமான காரியங்களை தவிர்த்து கடவுளுடைய வார்த்தை எப்படிப்பட்ட அதிகாரம் உள்ளது? என்பது பற்றி வேதத்தின் அடிப்படையில் சிந்திப்பதே இந்த பாடத்தின் நோக்கம்.

“அதிகாரம்” என்ற வார்த்தையை “தோற்றம்” அல்லது “விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆரம்பம்” என்று மூல பாஷையின் மூலம் பொருள் கொள்ளலாம். ஒருவருடைய எண்ணம், அதன் பிரதிபலிப்பாகிய மொழி மற்றும் அதன் தாக்கம் இவைகளை உள்ளடக்கியது தான் அதிகாரம். அனைத்திற்கும் அவரே பொறுப்பு என்றும், இதன் விளைவுகள் மாற்றப்பட முடியாது என்பதும் இதில் அடங்கியுள்ள அம்சமாகும். கடவுள் சர்வஞானம் உள்ளவரானபடியால் அவரையும் அவருடைய வார்த்தையையும் பிரிக்க முடியாது. “லோகோஸ்” என்னும் வார்த்தையானது இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கத்தையும், அது இயக்கப்படும் நெறியையும், அந்த வார்த்தையே எல்லாவற்றையும் தாங்கும் வல்லமை உடையது என்ற கோட்பாட்டையும் உள்ளடக்கியது. கடவுள் சிருஷ்டிப்பின் மூலமாக மாத்திரமல்ல, யாருக்காக படைக்கப்பட்டதோ அந்த கிறிஸ்துவின் மூலமாக இறுதியாகவும், நித்தியமாகவும் பேசியுள்ளார். இப்படி, கடவுள் பேசி எழுதிக் கொடுத்துள்ள வார்த்தையானது முற்றிலும் நம்பப்படத்தக்கதும், முழுமையான கீழ்ப்படிதலுக்கு ஏற்றதுமாகும். வேத வாக்கியங்கள் எல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; அவைகள் உபதேசத்துக்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் நீதியை படிப்பிப்பதற்கும் பிரயோஜனம் உள்ளவைகளாக இருக்கிறது (2 தீமோ 3:16,17) என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

கடவுளின் வார்த்தையானது சத்தியமும், நித்தியமானதும் கூட. கடவுள் மோசே மூலம் கொடுத்த நியாயப்பிரமாணம் சொல்லுவது யாதெனில், இரண்டு பேருடைய சாட்சியினால் உண்மை விளங்கும் என்பதாகும் . “நான் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்” (யோ.8:17,18) என்று இயேசு கிறிஸ்து கூறியது, அவரே சத்தியம் என்று நிரூபணம் ஆகிறது. “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும்p பிழைப்பான்” என்று கடவுள் சொன்னது வேதத்தின் அதிகாரத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காண்பிக்கிறது. கடவுள் ஒரு நோக்கத்திற்காக வார்த்தையினாலே கல்லுகளை உண்டாக்கினார்; அதேபோல், தமது வார்த்தையினாலே அப்பத்தின் மூலக்கூறுகளையும் உண்டாக்கினார். எனவே, கடவுளுடைய வார்த்தையின்றி எதுவும் உருவாக்கப்படவில்லை; மனிதன் கடவுளுடைய சுவாசமாகிய வார்த்தையினாலே மாத்திரம் பிழைப்பான் என்ற உண்மை இதில் விளங்குகிறது.

“வேதத்தில் உள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாய் இராது என்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது”
(2 பே.1:20).
என்று பேதுரு சொல்லும்போது சர்வஞானமுள்ள கடவுள் தாமே தமது வல்லமையைக் கொண்டு பேசியுள்ளார் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்; மட்டுமல்ல, கடவுள் ஆதியில் பேசியபோது நமக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்பது இதில் உறுதியாகிறது. இன்று வேதத்தை பயன்படுத்துகிறவர்கள் அதை வியாக்கியானம் செய்யும் போது தங்களுடைய விருப்பு/வெறுப்புகளை புகுத்துவது தான் கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தை மறுதலிப்பது என்று பொருளாகும். வேதத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு வேத வியாக்கியானமே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அநேக சமயங்களில் நாம் அறியாமல் இருக்கிறோம். மாம்சத்தில் வந்த சத்தியமாகிய கிறிஸ்துவையும், அவர் சிலுவையிலே நிறைவேற்றின இரட்சிப்பின் கிரியையும் மறுத்து நாம் வேதத்தை வியாக்கியானப்படுத்த முடியாது. கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த போது வேத வாக்கியங்களை நிறைவேற்ற தாம் வந்ததாகவும், அதற்காகவே பிதாவினால் அனுப்பப்பட்டதாகவும் சொல்லியதை நாம் மறந்து விடக்கூடாது. இந்தப் பின்னணியில் வேதத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் சில காரணிகளை கவனிப்பது அவசியம்.

முதலாவது, தனித்தன்மை கோட்பாடு: (INDIVIDUALISM) வேதவிளக்கம் எதுவும் என்னுடைய சிந்தையை திருப்திபடுத்த வேண்டும்; அல்லது எனக்கு ஏற்புடையதாய் இருக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.வேத கோட்பாடுகள் என்னுடைய தனித்தன்மையை பாதிக்க கூடாது என்று கூறும் இந்த நிலை மனித வீழ்ச்சியை மறுதலிக்கும் அடிப்படையாகும். பாவத்தில் வீழ்ச்சி அடைந்த மனிதன் சுயாதீனத்தை இழந்து இருளின் அதிகாரத்திற்கு உட்பட்டவன்; மேலும், பிசாசின் தந்திரமான வார்த்தைகளை மட்டும் ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறான் என்ற அடிப்படை உண்மையை இது மறுக்கிறது. தான் சுய சிந்தை உடையவன் என்று மனிதன் தன்னை பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்துக் கொண்டாலும், மனித சித்தமும் அதை வழிநடத்தும் சிந்தையும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டது என்பதை மறுக்க முடியாது. எனவே, நான் எப்படி அர்த்தப்படுத்த விரும்புகிறேனோ அதுதான் சரியாக இருக்க முடியும் என்ற சுயநிலை கோட்பாடு, “நீங்கள் வேத வாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணம் கொள்ளுகிறீர்கள்” என்று கிறிஸ்து சதுசேயரை பார்த்து சொன்ன கூற்றுக்கு மிகவும் பொருத்தமானதாகும். இப்படி ஒவ்வொருவரும் கலாச்சாரத்தை சார்ந்தோ, சமூக அமைப்பை சார்ந்தோ வேத வாக்கியங்களைப் பற்றிய சுயநிலை வியாக்கியானம் செய்யும் பட்சத்தில் அது முடிவில்லாத கட்டுப்பாடு இல்லாத நிலைமைக்கு தான் வழிவகுக்கும். ஒரு சமூகத்தின் கட்டமைப்பிற்காக சட்ட திட்டங்கள் எவ்வளவு அவசியமோ அதைவிடவும், கடவுளுடைய பிரமாணம் தமது சாயலாக படைக்கப்பட்ட மனித வாழ்வின் அஸ்திபாரத்திற்கு அத்தியாவசியமாகிறது. தமது சீஷர்களுக்கு கர்த்தர் கற்றுக் கொடுத்த ஜெபத்தில் வருகிற வார்த்தைகளை கவனிப்போம். இது வேதத்தைப் பற்றிய சுயநிலை வியாக்கியானத்திற்கு எதிரானது. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்’ என்ற இந்த விண்ணப்பத்தில் பன்மையை கவனிக்க வேண்டும். எனக்கு சாதகமானதைத்தான் எடுத்துக் கொள்வேன் என்ற நிலை எவ்வகையிலும் பொருந்தாததே. தன்னுடைய சிந்தை என்ற சுயநிலை அடிப்படையில், கடவுளின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் இயங்க முடியாது என்பதுதான் கடவுளுடைய வேதத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதின் மூல அடையாளம்.

இரண்டாவது, வெற்றி எனும் கோட்பாடு: (PRAGMATISM). எனக்கு எது வெற்றியை தருகிறதோ அதுதான் முக்கியம் என்ற கோட்பாடு இன்றைக்கு கிறிஸ்தவ உலகத்தில் மிகவும் பிரபலமாய் உலா வருகிறது. அதை அடையும் வழிமுறைகள் வேதத்திற்கு ஒத்து இருக்கிறதா என்பதை பற்றி அக்கறை இல்லை; அதன் முடிவு நான் விரும்பும் வெற்றியைக் கொண்டு வந்ததா? என்பதே முக்கியம் என்ற நிலைப்பாடு இதன் சாராம்சம் ஆகும். அதற்கேற்றபடி வசனங்களை கையாளுவது இன்று நடைமுறையாகிவிட்டது எனலாம். இதன் அடிப்படையில் பழைய ஏற்பாடு நமக்கு அவசியம் இல்லை என்கிற நிலைப்பாடும், குறிப்பிட்ட சில வசனங்களை மாத்திரம் திரும்பத் திரும்ப பிரயோகிப்பதும் இன்றைய துர்பாக்கிய சூழல். இன்று பெரும்பாலானோர் கூடுகிற கூட்டத்தை கணக்கிலெடுத்து, தேவவார்த்தையின் வல்லமையை தீர்மானிப்பது மிகவும் வேதனைக்குரியது. அதிகம் ஜனங்கள் கூடுகிற இடம் தான் “ஆவிக்குரிய சபை” என்ற ஜனநாயக வெற்றி கிறிஸ்தவ உலகத்தின் நவீன சிந்தையாகும். “நாவில் ஜீவனும் அதிகாரமும் உள்ளது” என்ற போதனை தமிழ் கிறிஸ்தவ உலகத்தில் இன்று மிகப் பிரபலமாகி விட்டது. “நினைப்பது நடக்கும்” என்ற சிந்தையோடு ஒரு காரியத்தில் ஈடுபட்டால் மட்டுமே அது கைகூடும்; அல்லது அது உங்களுக்கு வாய்க்காது என்ற போதனைக்கு இன்று அனேகர் இன்று அடிமைகள் என்றே சொல்லலாம்.
உங்கள் சிந்தையை இப்படிப்பட்ட நேர்மறை வசனங்களினால் நிறைத்துக் கொள்ளுங்கள் என்ற அறைகூவல் இன்றைய கிறிஸ்தவ மேடைகளின் அவலம். இதன் விளைவு, ஒரு சபையில் தாங்கள் எதிர்பார்ப்பது நடக்காவிட்டால், இதைவிட வல்லமை உள்ள சபைக்கு செல்வது நல்லது என்ற “யாத்திராகமம்” போன்ற வனாந்தர அலைச்சல் அதிகரித்து வருவது கசப்பு கலந்த உண்மை. யோவான் 6ம் அதிகாரத்தில் அநேக சீஷர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தை விட்டு விலகிச் சென்றதைப் பார்க்கிறோம். “இது கடினமான உபதேசம் யார் இதை கேட்பார்கள்?”என்ற கேள்வி எல்லா காலத்திற்கும் பொருத்தமானது என்பதை நிரூபணம் செய்கிறது. அதாவது, இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் அலசப்படும் பிரபலமான கேள்வி இதுதான் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். மத். 24ம் அதிகாரத்தில், அநேகர் என்று எப்படிபட்ட கூட்டத்தை பற்றி கிறிஸ்து சொல்லி இருக்கிறார் என்பது இந்த விஷயத்தில் நமக்கு எச்சரிக்கை மணியாகும். அநேகருடைய அன்பு தணிந்து போகும்; அநேகர் வந்து என் நாமத்தை தரித்துக் கொண்டு வஞ்சிப்பார்கள்; மேலும், கேட்டுக்கு போகிற வாசல் விரிவும் வழி விசாலமாக இருக்கிறது; அதன் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர் என்றும் அன்றைய கூட்டத்தைப் பற்றி கிறிஸ்து கூறியுள்ளது எக்காலத்திற்கும் பொருந்தும். எனவே, வெற்றிதான் சத்தியத்தை தீர்மானிப்பது என்றால் உலகத்தில் பெரும்பாலானோர் சத்தியத்தை அறிந்தவராகிவிடுவர்.

மூன்றாவது கடவுளின் தன்மையை தீர்மானிக்கும் கோட்பாடு: (DECONSTRUCTIONISM) அன்புள்ள கடவுள் நரகத்தை எப்படி உண்டாக்க முடியும் என்ற கேள்வி வேதத்தை நேசிப்பவர்கூட கேட்கக்கூடிய நிலைமை தான் இன்று உள்ளது. ஏறத்தாழ கடவுள் அன்புள்ளவராகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யும்போது, வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளுடைய நீதியை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று பொருளாகும். அநேக கிறிஸ்தவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவதற்கு இந்த கேள்வி பிசாசால் தந்திரமாக திணிக்கப்பட்டது என்று கருதலாம். “வேதத்தில் கடவுளுடைய வார்த்தை இருக்கிறது;அதே சமயம் மனித வார்த்தையும் அடங்கியிருக்கிறது’ என்ற போதனை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இறையியல் கல்லூரிகளின் அடிப்படை கோட்பாடாக மாறிவிட்டது. இதன் விளைவு, எது கடவுள் பேசிய வார்த்தை? எது மனிதன் பேசிய வார்த்தை? என்ற அளவிலேயே விவாதங்கள்/பாடங்கள் நடத்தப்படுவது இன்றைய இறையியல் கல்லூரிகளின் துர்பாக்கிய நிலை. பெரும்பாலான சபைகள் நேரடியாக/ மறைமுகமாக இந்த வாதத்திற்கு தாங்கள் இரையானது பற்றி அறியாத நிலைமை வேதனைக்குரியது. கடவுளின் தன்மையை தீர்மானிக்க முயல்வது, “பாபேல்” போன்ற கடவுளை எட்டும் முயற்சிக்கு சமமானதாகும். கடவுள் தம்மைப் பற்றி கொடுத்த வெளிப்பாட்டை எந்தவித முகாந்திரமோ, கேள்வியோ இல்லாமல் ஏற்றுக் கொள்வது தான் அவருடைய வார்த்தையை கனப்படுத்துவது என்று பொருள்படும்.

நான்காவது, ஒற்றுமையின் முக்கியத்துவம்:(PLURALISM) இந்த வாதம் கேட்பதற்கு அருமையாக இருப்பது போல் காட்சி அளித்தாலும் “ஒற்றுமை” என்ற வார்த்தையே இதில் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை பற்றி இதை கூறுபவர்களுக்கு அக்கறை இல்லை. “உபதேசம் பிரிக்கும் தன்மை உடையது; எனவே உபதேசம் பற்றி போதிக்க வேண்டாம்” என்ற பிரசித்தி பெற்ற கூற்றின் அடிப்படையை நாம் இதில் பார்க்கலாம். அதாவது, வேதத்தை பொருத்த அளவிலே மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் பெருந்தன்மையுடன் இடம் கொடுக்க வேண்டும் என்பது இதன் சாராம்சம். “இதுதான் வேதம் சொல்லுகிற சத்தியம்” என்ற உபதேசத்தை வலியுறுத்தி பிரிவினையை உண்டாக்குவதை விட, “எல்லாருடைய கருத்துக்களும் ஏற்புடையது தான்” என்று சொல்லி ஒற்றுமையை முன்னெடுப்பது தான் நல்லது என்று சுயதிருப்தி அடையும் கிறிஸ்தவ கூட்டங்கள் இன்று பெருகி வருகிறது. பரந்த கண்ணோட்டத்தை நாம் பெற வேண்டும் என்பது இந்த கோட்பாட்டின் அழைப்பாகும். ஆனால், சத்தியம் அசத்தியத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னை அல்லாமல் ஒருவனும் பிதாவனிடத்தில் வரான்” என்று சொன்ன கிறிஸ்துவின் வார்த்தைகளை மறுதலித்து நாம் வேதத்தை வியாக்கியானம் செய்யவும், பிரசங்கிக்கவும் முடியாது. கிறிஸ்து மேலும் சொன்னார்: “என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரமாய் நான் உங்களுக்கு கொடுப்பதில்லை”. வேதத்தின் சத்தியமானது தேவனை உதாசீனப்படுத்துகிற சிந்தைக்கும், வாழ்க்கை நெறிக்கும் விலகி ஓட வேண்டுமென்று பல கோணங்களில் தெளிவாக வலியுறுத்துகிறது. மேலும், உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்றும் அழுத்தம் திருத்தமாக வேதம் போதிக்கிறது. ஒற்றுமை வாதம் கடவுளின் வார்த்தையை பொறுத்த அளவில் வித்தியாசமான பொருளுடையது.

எனவே, வேதத்தின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு வேத வியாக்கியானம் எப்படி பயன்படுத்தப்படுகிறதோ, அதைவிட ஆணித்தரமாக வேதத்தின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கும் வேத வியாக்கியானம் மிக முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வேதத்தின் மையம் கிறிஸ்துவும், அவருடைய கிரியையாய் இருக்கிறபடியால் இதைத் தவிர்த்து வேறு எந்த வியாக்கியானமும் கடவுளுடைய வார்த்தையின் அடித்தளமாக இருக்க முடியாது. கடவுளின் வார்த்தையின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு கடைப்பிடிப்பதற்கு சில வழிமுறைகள் இதோ:

முதலாவது, தாழ்ந்த சிந்தை: எபிரேய பாஷையில் பெருமை என்பது புகை மண்டல சூழல் என்னும் பொருளோடு தொடர்புடைய பதமாகும். அதாவது எதையும் தெளிவாக பார்க்க முடியாத நிலையை இது படம் பிடிக்கிறது. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல உங்கள் வழிகள் என்னுடைய வழிகள் அல்ல; பூமியை பார்க்கிலும் வானம் எவ்வளவு உயரமாய் இருக்கிறதோ அப்படியே உங்கள் நினைவுகளை பார்க்கிலும் என் நினைவுகளும் உங்கள் வழிகளை பார்க்கிலும் என் வழிகளும் உயர்ந்தது” என்று சொன்ன கடவுளுடைய சிந்தையில் வேதத்தை அணுகுவது அவருடைய வார்த்தையின் அதிகாரத்தை அங்கீகரிப்பதாகும். நம்முடைய நினைவுகளோ, வழிகளோ கடவுளுடைய வார்த்தையின் மூலமாக அவருடைய சத்தத்தை கேட்பதற்கு தடையாய் இருக்குமானால் நாம் கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தை மட்டுப்படுத்துகிறோம் என்று பொருள். வேதத்தின் ஆசிரியராகிய பரிசுத்த ஆவியானவர் நமக்கு கடவுளுடைய வார்த்தையின் தெளிவை தரும்படியான ஜெப சிந்தையோடு கடவுளின் சத்தத்தை அவரது வார்த்தையில் கேட்க ஆயத்தப்பட வேண்டும். கடவுளுடைய சத்தத்தை அவருடைய வார்த்தையின் மூலமாக கேட்டும் கீழ்ப்படிய மறுக்கும் போது அதன் விளைவும் எப்படிப்பட்டது என்று வேதம் ஆணித்தரமாக பல உதாரணங்கள் மூலமாக விளக்கியுள்ளதை கவனிக்க வேண்டும்.

இரண்டாவது, விசுவாச அணுகுமுறை: விசுவாசமானது ஒரு காரியத்தை ஒத்துக் கொள்வது மாத்திரமல்ல; அதை சார்ந்து கொள்வதையும் உள்ளடக்கியது. கடவுள் பேசியது உண்மையானது மட்டுமல்ல; அது நன்மையானதும் கூட. அந்த அடிப்படையில் நான் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன் என்று கூற வேண்டும். “விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம்”. சரி, அந்த விசுவாசம் எப்படி வரும் என்றால், விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினால் மட்டுமே வரும். லூக்கா 7 ஆம் அதிகாரத்தில் தனது அதிகாரத்தை அறிந்திருந்த நூற்றுக்கு அதிபதி, கிறிஸ்துவின் வார்த்தையின் வல்லமையை அறிந்தவனாக அவரிடத்தில் சொன்னது: “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் பிழைப்பான்” என்பதாகும். இயேசு கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தை குறித்து இந்த பின்னணியில் ஆச்சரியப்பட்டதாக படிக்கிறோம்.

கடவுளுடைய வார்த்தைக்கு மனக்குலம் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக விசுவாசிகளின் வாழ்வில் அது வல்லமையாய் கிரியை செய்கிறது என்பதையும் நாம் அறிக்கையிட வேண்டும். “நான் உங்களுக்கு கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி நான் உங்களுக்கு கற்பிக்கிற வசனத்தோடு நீங்கள் ஒன்றை கூட்டமும் வேண்டாம் அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற எச்சரிப்பை யார் அசட்டை செய்ய கூடும்?

வேதம் சொல்லாத கடவுளின் அன்பையோ, வல்லமையையோ, இரக்கத்தையோ, மன்னிப்பையோ, தயவையோ கற்பனை செய்வதும், பிரசங்கிப்பதும் கடவுளுடைய வார்த்தையோடு கூட்டுவதற்கு சமம்; மட்டுமல்ல, வேதம் சொல்லிய கடவுளுடைய நீதியையும், எச்சரிப்பையும், நியாய விசாரிப்பையும் பிரசங்கியாமல் இருப்பது, கடவுளின் வார்த்தையில் இருந்து குறைப்பதற்கு சமம். தேவனுடைய வார்த்தை விசுவாசத்தின் மீதும், நமது நடக்கை அனைத்தும் மீதும் அதிகாரமிக்கது.

No Response to “வேதத்தின் அதிகாரம் – பாஸ்டர். ஜான்நெல்சன் The Authority of Scripture – Pastor. John Nelson”

Comments are closed.