மூன்று முத்தான முத்துக்கள் – 8

Published October 30, 2019 by adming in Pastor's Blog

“நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோட திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய்  மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.” (1 தெச 1:6,7).

நாம் இங்கே ஒரு அருமையான சபையாரை பார்க்கலாம். அவர்கள்தான் தெசலோனிக்கே கிறிஸ்தவர்கள். இவர்கள் ஒரு காலத்தில், விக்கிரக வணக்கத்தை கொண்ட ஜனங்கள் (1 தெச 1:9).  ஆனால், இப்பொழுதோ, அந்த பொய்யான கடவுளை கைவிட்டு, ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு, அடிமையாய் வாழ்ந்து பணி செய்வதற்கு, தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்ட மூன்று முக்கியமான முத்துக்களைதான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

ஏற்றுக்கொண்ட வாழ்வு முதலாவதாக, இவர்கள் ஒரு காலத்தில், பொய்யான கடவுளையும், பாவ இச்சைகளையும் ஏற்றுக்கொண்டு, ஜீவனுள்ள கடவுளுக்கு புறம்பாய் போனவர்கள். ஆனால், இன்றைக்கு ஜீவனுள்ள தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். ஏனென்றால், இவர்கள், திருவசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஆம், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டவர்கள். இங்குதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இவர்களுடைய இரட்சிப்பில், காரணமாய் அமைந்த சுவிசேஷத்தை(1:5) சர்வ சாதாரணமாய் எடுத்துக்கொள்ளாதபடி, அது கடவுளுடைய வார்த்தை என்று முழு நிச்சயத்தோடு நம்பி, அதை தங்களுக்குரியதாக்கிக்கொண்டு, பல உபத்திரவத்தின் மத்தியில் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டார்கள்(வச.6). இன்றைக்கு நீ இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், உன்னை இரட்சிக்க வல்லமையுள்ள வசனத்தை (யாக்கோபு 1:21) பரிசுத்த தேவனாகிய கர்த்தருடைய வார்த்தை என்று ஏற்றுக்கொள். ஏனென்றால், அது உன் பாவ ஆத்துமாவை உயிர்ப்பிக்கிற வார்த்தை(சங்:19:7), ஜீவனும், வல்லமையும் கொண்ட வார்த்தை, (எபி 4:12). இதுவே உன்னை கிறிஸ்துவுக்குள் கொண்டு வருகிற வார்த்தை. மேலும், ஒரு கிறிஸ்தவனாய் உன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில், போராட்டங்கள், பாடுகள், பல்வேறு சூழ்நிலைகள் மத்தியிலும்,கர்த்தர் கொடுத்த வேதத்திற்கு நேராய் கடந்து செல்ல வேண்டும். இன்றைக்கு அனேக கிறிஸ்தவர்கள், இப்படியான சூழ்நிலைகளில் வேதத்திற்கு நேராக வருவதும் இல்லை, அவ்வேதம் கடவுள் கொடுத்த வார்த்தை என்று நம்புகிறதும் இல்லை. அதினால்தான், அவர்களுடைய வாழ்க்கையில், எப்போதும் தோற்றுப்போனவர்களாய், சாட்சி கெட்டவர்களாய், கடவுளை விட்டு வழிவிலகி போன மக்களாய் காணப்படுகின்றனர். ஆம், எங்கு ஒருவனுடைய வாழ்க்கையில் வேதம் ஆட்சி செய்யவில்லையோ, அங்கு சுயம், பிசாசு, உலகம் ஆட்சி செய்கிறதாய் காணப்படும். ஆனால், தேசலோனிகே கிறிஸ்தவர்களை நாம் பார்ப்போம் என்றால், தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுத்தனர். அதற்குரிய கனத்தை கொடுத்தனர். அதினால்தான் இவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை அநேகருக்கு ஆசீர்வாதமாய் காணப்பட்டது. நாம் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில், நம் கையில் வைத்திருக்கிற வேதத்தை, கர்த்தர் எழுதி கொடுத்த வேதம் என்று முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, அதற்குரிய கனத்தை கொடுக்கிறோமா?

பின்பற்றும்படியான வாழ்வு – இரண்டாவதாக, நாம் பார்க்கும் விசேஷமான அம்சம் என்னவென்றால், அதே ஆறாம் வசனத்தில் “எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுவர்களாகி” என்று பார்க்கிறோம். அதாவது, எங்கு ஒரு ஆவிக்குரிய மனுஷன் கர்த்தர் கொடுத்த வேதம் என்று தன்னை தாழ்த்தி, அதை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, அதற்கு ஒப்புக்கொடுத்து, கீழ்படிகிற மனுஷனாய் இருக்கும் பொழுது, இன்னுமாய் அவன் அழிந்து போகிற, அந்நித்தியமான உலக காரியங்களை பின்பற்றி போய்கொண்டிருக்க மாட்டான். மாறாக, வேதத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தேவப்பிள்ளைகளையும், அதற்கு மேலாக தனது நித்தியமுள்ள, மாறாத அந்த ஜீவனுள்ள இயேசு இரட்சகரை பின்பற்றி செல்லுகிறவனாய் காணப்படுவான். இந்த இடத்தில் பின்பற்றுதல் என்ற பதம் ஆங்கிலத்தில் “imitate” என்று கூறப்படுகிறது.  அதாவது ஒரு நபரைப்போலவே அவரது பேச்சு, நடை, அனைத்தையும் செய்து காண்பித்தல். காப்பி அடித்தல். அவ்வண்ணமாகவே, என்றைக்கு நாம், நம்முடைய வாழ்வில், வேதம் என்கிற பொக்கிஷத்தை கண்டுகொண்டோமோ, அவ்வேதத்தில் நாம் கண்ட நமது ஆண்டவராகிய இயேசு ரட்சகரை அனுதினமும் பார்த்து பார்த்து, பழகிக்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், நாம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாய், அவரைப் பின்பற்றுகிறவர்களாய், நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் கிறிஸ்துவை பிரதிப்பலிக்கிறவர்களாய் காணப்படுவோம்.

மாதிரியான வாழ்வு  – மூன்றாவதாக, கிறிஸ்தவ வாழ்வில் மிக மிக முக்கியமாக காணப்படுவது, மாதிரியான வாழ்க்கை. ஆம், இந்த தெசலோனிகே கிறிஸ்தவர்கள், ஏற்றுக்கொண்டார்கள், பின்பற்றினார்கள் அதுமாத்திரமல்ல, ஒரு எடுத்துக்காட்டுள்ள வாழ்க்கை வாழ்ந்து காண்பித்தார்கள். “இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.”(வச.7). ஆம், ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, வெறும் பேச்சில் அல்லது பிரசங்கத்திலோ அல்ல, அதின்படி வாழ்ந்து காட்டுவதே ஆகும். இங்குதான் உண்மையான இரட்சிக்கப்பட்ட வாழ்க்கையின் சாராம்சமே அடங்கியிருக்கிறது. இந்த பொல்லாத உலகத்தில், இந்த பாவம் நிறைந்த உலகத்தில் ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்துவுக்கு சாட்சியாக, கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தி, கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்துபவனாக, கிறிஸ்துவுக்குள் வாழ்கிறவனாய்  காணப்படுகிறான். கொலோ 2 ம் அதிகாரம் 15ம் வசனம் இவ்விதமாக சொல்லுகிறது, “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு…” மேலும் 1 தீமோத்தேயு 4:12 இவ்விதமாக சொல்லுகிறது, “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.” 

நீயும் இந்த தேசலோனிகே கிறிஸ்தவர்களை போல, உன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை காணப்படுகிறதா? உன்னுடைய வாழ்வில், கர்த்தர் கொடுத்த வேதத்திற்கு முதலிடம் கொடுத்து, இது கர்த்தருடைய வேதம் என்று முழு நிச்சயமாய் நம்பி ஏற்றுக்கொண்டு, அதற்கு  முழுமையாய் ஒப்புக்கொடுத்து,  அவ்வேததில் காண்பிக்கப்பட்டுள்ள இயேசு ஆண்டவரை நோக்கிப்பார்த்து, அவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு சாட்சியாய், ஒரு எடுத்துக்காட்டுள்ள மனுஷனாய் இந்த உலகத்தில் வாழ்கிறாயா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

No Response to “மூன்று முத்தான முத்துக்கள் – 8”

Leave a Comment