சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று

Published April 27, 2019 by adming in Pastor's Blog

                           சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று

     இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பரிசுத்தத்தின் அவசியத்தை குறித்ததான

                         பத்து அம்சங்கள்:                     –  போதகர்.ஜோயல் பீக்( Dr.Joel R. Beeke)                

 1)   தேவன் உன்னை பரிசுத்ததிற்கென்று அழைத்திருக்கிறார்.

  “தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல,     பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1 தெச 4:7). கர்த்தர் நம்மை எதற்கு அழைத்திருந்தாலும், அது அவசியமான ஒன்றாய் இருக்கிறது. ஏனென்றால், அவருடைய அழைப்பே, பரிசுத்தத்தை பயிற்சி செய்யவும், அதை நாடவும் நம்மை தூண்டச் செய்கிறதாய் இருக்கிறது.

    2) பரிசுத்தமானது, நீ தெரிந்து கொள்ளப்பட்டவன், நீதிமானாக்கப்பட்டவன் என்பதை                     காட்டுகிறது.

   பரிசுத்தமாக்கப்படுதல், நீதிமானாக்கப்படுதலின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாய் இருக்கிறது. (1 கொரி 6:11). இவை இரண்டும் சிறப்புவாய்ந்ததாய் இருக்கலாம். ஆனால், பிரிக்க முடியாதது. கிறிஸ்துவினாலும், கிறிஸ்துவின் மூலமாயும்,  பரலோக ராஜ்ஜியத்திற்கு தைரியமாய் செல்லும்படியான உரிமையை “நீதிமானாக்கப்படுதல்” ஒரு தேவப்பிள்ளைக்கு கொடுக்கிறது. பரிசுத்தமாக்கப்படுதல், பரலோக ராஜ்ஜியம் செல்லுவதற்குண்டான தகுதியையும், அதில் களிகூருவதற்கு, தேவையான ஆயத்தத்தையும் கொடுக்கிறது.

 

‘தெரிந்துக்கொள்ளுதல்’ கூட பரிசுத்தத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒன்றாய் இருக்கிறது. “கர்த்தருக்கு பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினால் பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களை தெரிந்துகொண்டபடியினாலே…..”(2தெச 2:13). தேவனுடைய பார்வையிலிருந்து, நாம் பார்ப்போம் என்றால், ‘தெரிந்துக்கொள்ளுதல்’ முதலாவதாக அமைகிறது. எப்படி நம்முடைய இரட்சிப்பிற்கு, பரிசுத்தமாக்கப்படுதல் ஆதாரமாய் இருக்கிறதோ, தெரிந்துக்கொள்ளுதலும் நம்முடைய இரட்சிப்பிற்கு காரணமாய் இருக்கிறது. இதுவே, நம்முடைய பார்வையிலிருந்து பார்ப்போம் என்றால், ‘தெரிந்துக்கொள்ளுதல்’ கடைசியாக அமைகிறது. ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுதல், கிறிஸ்துவின் தெரிந்துக்கொள்ளப்பட்ட ஆடு உடைய, அடையாள குறியாய் இருக்கிறது. அதினால்தான், ‘தெரிந்துக்கொள்ளுதல்’ என்ற சத்தியமானது, ஒரு சபைக்கு மிகுந்த ஆறுதலை கொடுக்கும் சத்தியமாய் இருக்கிறது. ஏனென்றால், இதுவே, அவர்களுக்குள்ளாக, தேவனுடைய கிருபையை குறித்து விவரிக்கும், உறுதியான, இளைப்பாறும் ஸ்தலமாய் இருக்கிறது. நமது சீர்திருத்தத்தின் முன்னோர்கள், ‘தெரிந்துக்கொள்ளுதல்’ சபையின் ஆறுதல் என்று அழைத்தார்கள் என்றால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

 

அதினால்தான், ஜான் கால்வின் அவர்கள்,  விசுவாசிகள்  ‘தெரிந்துக்கொள்ளுதல்’ என்ற சத்தியத்திலிருந்து ஆறுதலை பெருகிறவர்களாய் இருப்பதால், விசுவாசத்துக்குள் இல்லாதவர்கள் அச்சத்தியத்தினால் அதைரியப்படவேண்டிய அவசியமில்லை, மாறாக, மனந்திரும்புதலின் அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்  என்று உறுதியாக இருந்தார். எவர்களெல்லாம், இச்சத்தியத்தினால், சோர்ந்து போகிறார்களோ, அவர்களுக்கு இந்த உன்னதமான, உற்சாகம் அளிக்கும் சத்தியத்தை, பிசாசு தவறாக பயன்படுத்தி, வஞ்சக வலையில் விழச்செய்கின்றான் என்று சீர்திருத்தவாதிகள் கர்ப்பித்தனர்.

3) பரிசுத்தம் இல்லாமல் அனைத்தும் அசுத்தமே

   “அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது” (தீத்து 1:15) கிறிஸ்துவின் மூலம், தேவன், தம்முடைய பிள்ளையை பரிசுத்தப்படுத்தி, அவர்களுடைய ஜெபத்தையையும், ஸ்தோத்திரங்களையையும் ஏற்புடையதாக்குகிறார். தாமஸ் வாட்சன், என்ற பரிசுத்தவான் “ ஒரு பரிசுத்த இருதயம், காணிக்கையை பரிசுத்தப்படுத்துகிற பீடமாய் இருக்கிறது”என்று சொல்லுகிறார்.

4) பரிசுத்தம் உன்னுடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

   ஜான் ப்லேவல் என்ற பரிசுத்தவான் சொல்லுகிறார், ‘ஒரு இருதயத்திற்கு ஆரோக்கியம் எவ்வளவு அவசியமோ, ஒரு ஆத்துமாவுக்கு பரிசுத்தம் அவ்வளவு அவசியமாய் அமைகிறது.’ மேலும், இவ்விதமான, பரிசுத்தத்தின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை, தேவன், பொதுவாக ஒழுக்கப் பயிற்சி மூலமாக செயல்படுத்துகிறார். ஆம், பிதாவானவர், சிட்சையின் மூலமாக,  உன்னில் உண்மையான பரிசுத்தத்தை கொண்டுவரும்படியாக, உன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பயிற்சிவிக்கிறார்(எபி 12:11). ஏனென்றால், பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது (வச 14). ஆம்,கிறிஸ்துவின் நீதிமானாக்கும் வல்லமையினாலே, பிதாவுக்கு முன்பு நீ குற்றமற்றவன் என்று கூறப்படுகிறாய். மாத்திரமல்ல, கிறிஸ்துவின், பரிசுத்தமாக்கும் வல்லமையினாலே, சுத்த மனசாட்சியை பெறுகிறாய். ஆம், ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு, இரண்டும் அவசியமே.

5) பரிசுத்தம் இரட்சிப்பின் நிச்சயத்தை வளர்க்கிறது

   “அவர்களுடைய கனிகளினாலே, அவர்களை அறிவீர்கள்” (மத் 7:16). அனைத்து சீர்திருத்த பரிசுத்தவான்கள் ஒத்துக்கொள்வது என்னவென்றால், உண்மையான விசுவாசிகள் அவர்களுடைய பரிசுத்தமாகுதலின் பாதையில், கீழ்படிதல் மூலமாகவும், கிருபையின் எத்தனங்களை பயன்படுத்துவத்தின் மூலமாகவும், தேவனுடைய வார்த்தையை படிப்பதில் செலவு செய்வதின் மூலமாகவும், அவர்களின் அனுதின இரட்சிப்பின் நிச்சயத்தன்மையில் படி படியாக முன்னேற்றத்தை அடைகின்றனர்.

   அனுதினமும், நாம் பரிசுத்தத்தை வாஞ்சித்து அதை நாடவில்லையென்றால், அந்த இரட்சிப்பின் நிச்சயத்தை இழப்பதற்கு அது வழி வகுக்கும். விசுவாசிகள், பாவத்தை துட்சமாய் எண்ணுவதும், தங்களுடைய அனுதின வேத வாசிப்பு மற்றும் ஜெப வாழ்க்கையை தவிர்ப்பதும், சுறுசுறுப்பற்றவர்களாய், பரிசுத்தத்தை நாடாமல், பரிசுத்தமாகுதல் என்பது, தங்களால் நடக்கும்படியான காரியம் எதுவும் இல்லை, அது தானாக வெளியில் நடக்கும் காரியம் என்று எண்ணிக்கொள்வார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் ஆவிக்குரிய இருளையும்,கனியற்ற வாழ்வையும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

   ஒரு தெய்வ பக்தியுள்ள விவசாயி, தன்னுடைய நிலத்தை உழுகிறான், விதைக்கிறான், உரமிடுகிறான், நிலத்தை பயிர் செய்கிறான். அவனுக்கு நன்கு தெரியும், கடைசியாக நல்ல விளைச்சலை காண வேண்டும் என்றால், அவன் வெளியே செய்த அத்தனை முயற்சிகளை சார்ந்தே இருக்கிறது. அவன் ஒருக்காலும் விதையை முளைப்பிக்கவோ, மழை பெய்ய வைக்கவோ, சூரிய வெளிச்சத்தை கொடுக்கவோ முடியாது என்று அவனுக்கு நன்கு தெரியும். அதினால், அவன் தன்னுடைய பணியை, தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தை எதிர்ப்பார்த்தவனாக, மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும், உழைப்புடனும் செய்கிறவனாய் இருக்கிறான்.

   அவ்வண்ணமாகவே, ஒரு விசுவாசி, பரிசுத்தமாகுதலை, மிகுந்த விழிப்புடனும், ஜாக்கிரதையுடனும் நாடாமல் இருப்பானென்றால், அவன் தன்னுடைய வாழ்வில் இரட்சிப்பின் நிச்சயத்தை பார்க்க முடியாதவனாயும், 2பேதுருவில் 1:10ல் சொல்லப்பட்டவன்னமாக, அவனுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதியாக்க முடியாது.

6) பரிசுத்தம் தேவனுக்கு சிறப்பாய் பணியாற்றுவதில் மிகுந்த அவசியமான ஒன்றாய் இருக்கிறது.  

   பவுல், பரிசுத்தமாகுதலையும், உபயோகப்படுதலையும் ஒன்றாக இணைத்து பேசுவதை நாம் பார்க்கலாம். “ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான, கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.”   (2 தீமோ 2:21).

7) பரிசுத்தம் தேவனைப்போல உன்னை உருவாக்குகிறது

தாமஸ் வாட்சன் என்ற பரிசுத்தவான் இவ்விதமாக சொல்லுகிறார், “ நாம் பரிசுத்தத்தில் தேவனைப்போல காணப்படுவதற்கு, மிக அதிகமாக பிரயாசப்படவேண்டும். ஒரு தெளிவான கண்ணாடியில்,  முகத்தை எவ்வாறு பார்க்க முடிகிறதோ, அவ்வாறு, பரிசுத்த இருதயத்தில், தேவனுக்கடுத்த காரியங்களை பார்க்கலாம்.

8) நீ நேசிக்கிற தேவன், பரிசுத்தத்தை நேசிக்கிறார்

   ஆகவே, அவருடைய ஒழுக்கப்பயிற்சி எவ்வளவு கடுமையாக இருக்கும்! வில்லியம் குர்னால் என்ற பரிசுத்தவான் சொல்லுகிறார், “ நம்முடைய சுபாவத்தில், வெளியே கொண்டுவர முடியாதபடி, ஆழமாக கறை படிந்திருக்கும் பட்சத்தில், தேவன் அக்கறையை, போக்குவதற்கு அழுத்தி தேய்த்துக்கொண்டிருக்கமாட்டார். மாறாக, அவர், பரிசுத்தத்தை அதிகமாக நேசிக்கிறபடியினால், தன்னுடைய பிள்ளைகளுடைய ஆடையில் படிந்திருக்கும் கறையை பார்ப்பதற்கு பதிலாக அவைகளை அப்புறப்படுத்த அக்கறை படிந்திருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விடுவார்.”

9) பரிசுத்தம் உன்னுடைய உண்மைத்தன்மையை பாதுகாக்கிறது

   இது மாயமாலத்தன்மையிலிருந்து, அதிகமாக உன்னை காக்கிறது. ஆம், ‘ஞாயிற்று கிழமை’ கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்து உன்னை மீட்க்கிறது. இது, உன்னுடைய அனுதின வாழ்வில், ஒரு நோக்கமும், ஒரு அர்த்தம் உள்ளதும், வலிமை மிக்கதும், சரியான வழிகாட்டுதலை கொடுக்கிறதாய் இருக்கிறது.

10) பரிசுத்தம் பரலோகத்திற்கு ஏற்ற மனுஷனாக பொருந்தச் செய்கிறது.

   “பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள் (அதாவது, தொடருங்கள்), பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே” (எபி 12:14). ஜான் ஓவன் என்ற பரிசுத்தவான் இவ்விதமாக எழுதுகிறார்: “உலகத்திலே இவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை, ஒருவரும் கற்பனை செய்து பார்க்க முடியாது. என்னவென்றால், இவ்வுலகத்தில் பரிசுத்தப்படாத, சுத்திகரிக்கப்படாத, எவரும் பரலோகத்தின் ஆசீர்வாதத்திற்கும், ஆனந்ததிற்கும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்பதே. அவ்விதமான நபர்கள், ஆண்டவரை அனுபவிக்கவும் முடியாது, ஆண்டவரும் அவர்களுக்கு பொக்கிஷமாகவும் காணப்பட மாட்டார். உண்மைதான், பரிசுத்தத்தின் பரிபூரணம் பரலோகத்தில்தான் உள்ளது. ஆனால், அதின் துவக்கம் இவ்வுலகத்திலேயே உள்ளது. இவ்வுலகத்தில், தேவன் பரிசுத்தமாக்கப்படுகிற, பரிசுத்தமாகுதலில் எழும்புகிற பிள்ளைகளை தவிர, மற்ற எவரையும், தேவன் பரலோகத்திற்கு அனுமதிப்பதில்லை.”

 

போதகர்.ஜோயல் பீக். (Dr. Joel R. Beeke is president of Puritan Reformed Theological Seminary and pastor of Heritage Netherlands Reformed Congregation in Grand Rapids).       

 

No Response to “சபைக்கும் நமக்கும் மிகப்பெரிய தேவையான ஒன்று”

Leave a Comment